2022 ஜனவரி 23, ஞாயிற்றுக்கிழமை

நானாட்டான் கால்நடை உரிமையாளர்களுக்கான அறிவுறுத்தல்

Niroshini   / 2021 ஒக்டோபர் 19 , பி.ப. 02:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

 

நானாட்டான் பிரதேசத்தில் உள்ள கால்நடைகளை, அதன் உரிமையாளர்கள், ஒதுக்கப்பட்ட மேய்ச்சல் தரவைகளுக்கு மாத்திரமே  கொண்டு செல்ல வேண்டும் என, நானாட்டான் பிரதேச செயலாளர் எஸ்.கிரிஸ் கந்தகுமார் தெரிவித்தார்.

இதன்போது, கால்நடைகள் உரிய சுகாதார அறிவுறுத்தல்களுக்கு அமைவாக, தடுப்பூசி ஏற்றப்பட்டு, மாடுகளுக்கு தோடு அணிவிக்கப்பட்டு காணப்பட வேண்டும் எனவும், அவர் அறிவுறுத்தியுள்ளார்.

நானாட்டான் பிரதேசத்தில் உள்ள கால்நடை வளர்ப்பாளர்கள், பிரதிநிதிகள் மற்றும் கால்நடை வளர்ப்பாளர் சங்கத்துடன், நானாட்டான் பிரதேச செயலகத்தில், நேற்று  (18) நடைபெற்ற கலந்துரையாடலின் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் தொடர்ந்துரைத்த அவர், குறித்த மாடுகள், நானாட்டான் பிரதேச செயலகத்தால் அனுமதிக்கப்பட்டு, மாந்தை மேற்கு பிரதேச செயலகத்துக்கு விண்ணப்பங்கள் வழங்கப்படும் என்றார்.

மாடுகளை கொண்டு செல்கின்றவர்கள் பாலியாறு கிராம அலுவலர் பிரிவில் தேத்தாவடி கிராமத்துக்கு கிழக்கு பக்கமாக உள்ள பெருவெளி பகுதியில் மாத்திரமே, கால்நடைகளை வைத்திருத்தல் வேண்டும் எனவும், அவர் கூறினார்.

 

ஏனைய இடங்களாக பட்டிவெளி, பள்ளத்துவெளி, குடா வெளி, வெள்ளங்குடா போன்ற இடங்களில் மாடுகளை வைத்திருப்பது தடை செய்யப்பட்டுள்ளது எனத் தெரிவித்த அவர், பட்டிவெளியில் மாடுகளை வைத்துள்ளமை தொடர்பில் முகாமை செய்வதற்கு, தனிக்குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது எனவும் கூறினார்.

இந்த அறிவுறுத்தல்களையும் மீறி மாடுகளை வைத்திருந்து, குறித்த பிரதேச மக்களுக்கு பாதிப்பு ஏற்படுமாக இருந்தால், அடுத்த காலபோகத்தில், குறித்த மாடுகளை கொண்டு செல்ல அனுமதி வழங்கப்பட மாட்டாது எனவும், பிரதேச செயலாளர் எச்சரித்தார்.

மேலும், 'நானாட்டான் பிரதேசத்தில் உள்ள மாடுகளை தேத்தாவாடி பகுதிக்கு கொண்டு செல்ல இருந்தாலும், நானாட்டான் பிரதேசத்தில் உள்ள அனைவரும் தமது மாடுகளை தேத்தாவாடிக்கு கொண்டு செல்ல அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

'புல்லறுத்தான் கண்டல் பிரதேசம், இம்முறை மேய்ச்சல் தரவைக்காக அடையாளம் காணப்பட்டுள்ளது. இந்தப் பிரதேசத்திலேயே, மாடுகளை மேய்ச்சலுக்கு விட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சுமார் 354 ஏக்கர் நிலப்பரப்பு இதற்காக ஒதுக்கப்பட்டுள்ளது.

'எதிர்வரும் 25ஆம் திகதியில் இருந்து, நானாட்டான் பிரதேச கால்நடை வளர்ப்பாளர்கள் தமக்கு என ஒதுக்கப்பட்ட மேய்ச்சல் தரவை பகுதிக்கு தமது கால்நடைகளை கொண்டு செல்ல முடியும்' என, அவர் மேலும் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X