2021 ஓகஸ்ட் 03, செவ்வாய்க்கிழமை

‘ கொரோனாவால் அல்ல பட்டிணியால் சாக போகிறோம்’

Niroshini   / 2021 மே 28 , மு.ப. 07:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சண்முகம் தவசீலன்

 

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி மரணிக்கப் போகின்றோமோ இல்லையோ, உணவுக்கு வழியின்றி, பட்டிணி கிடந்து, வெகுவிரைவில் சாக போகின்றோம் என முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்த பல கிராமங்களைச் சேர்ந்தவர்கள் தெரிவித்தனர்.

முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு ஆடைத்தொழில்சாலையில் பணிபுரிபவர்களுக்கு ஏற்பட்ட கொரோனா கொத்தணியில் பலருக்கு தொற்று இனங்காணப்பட்டது. இதன் காரணமாக புதுக்குடியிருப்பு, முல்லைத்தீவு, முள்ளியவளை பொலிஸ் பிரிவுகள் கடந்த 17ஆம் திகதியன்று முடக்கப்பட்டன.

 

இருப்பினும் கடுமையான பாதிப்புக்கள் இருந்த 11  கிராம அலுவலர் பிரிவுகள் தவிர்ந்த ஏனைய கிராம அலுவலர் பிரிவுகள் கடந்த 21ஆம் திகதியன்று விடுவிக்கப்பட்டன. எனினும், பயணக் கட்டுப்பாடுகள் தொடர்ந்தும் விதிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், முல்லைத்தீவு மாவட்டத்தில் நாளாந்த கூலித்தொழிலை நம்பிவாழும் பல குடும்பங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

இதேவேளை, கடந்த 17ஆம் திகதி முதல் திடீரென எந்த அறிவித்தலுமின்றி முடக்கப்பட்டுள்ள புதுக்குடியிருப்பில் 9 கிராம அலுவலர் பிரிவுகளிலும் முள்ளியவளையில் இரண்டு கிராம அலுவலர் பிரிவுகளிலும் உள்ள மக்கள் அத்தியாவசியப் உணவுப்பொருட்கள் இன்றி கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தொடர்ந்து முடக்கப்பட்ட  நிலையிலிருக்கும் புதுக்குடியிருப்பு பத்தாம் வட்டார மக்கள், தாம் கொரோனாவால் இறக்கிறோமோ இல்லையோ உணவின்றி இறக்கப்போகிறோம் எனத் தெரிவித்துள்ளனர்.

இன்றுவரை எந்த உலருணவு பொருள்களும் கிடைக்கவில்லை. தமது பகுதியிலுள்ள சிலர், தமக்கு பிடித்தவர்களுக்கு மாத்திரம் வெளிநாடுகளில் இருந்து வரும் நிதிகள் மூலம் உதவுவுகின்றனர்.

அவ்வாறான உதவிகளை, பாதிக்கப்பட்டுள்ளவர்களை முன்னிலைப்படுத்தி வழங்க நடவடிக்கை எடுக்குமாறும் கோரி முடக்கநிலையிலும் தமது கிராமத்தில் ஒன்றுகூடி, நேற்று (27) எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

இந்நிலையில், அங்கு வந்த பிரதேச செயலக அதிகாரிகள், அவ்வாறான சம்பவங்கள் இனி நடக்கவிடாது பார்ப்பதாகவும் உரிய வகையில் உதவித்திட்டங்களை பெற்றுத்தர ஆவண செய்வதாகவும் தெரிவித்தனர். அதனையடுத்தே, அங்கிருந்து மக்கள் களைந்து சென்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .