2022 ஜனவரி 21, வெள்ளிக்கிழமை

உடனடி போக்குவரத்து கட்டுப்பாடுக்கு டக்ளஸ் விடுத்த உத்தரவு

Niroshini   / 2021 நவம்பர் 28 , மு.ப. 10:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நடராசா கிருஸ்ணகுமார்

கிளிநொச்சியில், அடிக்கடி ஏற்பட்டுவரும் வீதி விபத்துகளைக் கட்டுப்படுத்துவதற்கு, சுற்றுவட்டம் அமைப்பதோ, சமிக்ஞை விளக்குகள் பொருத்துவதோ காலதாமதமாகலாம் என்பதால், உடனடியாக பொலிஸாரும், இராணுவத்தினரும் இணைந்து வீதிப் போக்குவரத்துக் கட்டுப்பாடுகளை மேற்கொள்ளவேண்டும் என்று, அமைச்சர் டக்ளஸ் உத்தரவிட்டுள்ளார். 

கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தில், நேற்று (27),  மாவட்டத்தின் அபிவிருத்தி நடவடிக்கைகளின் முன்னேற்ற நிலை தொடர்பான மீளாய்வுக் கூட்டமொன்றை நடத்திய கடற்றொழில் அமைச்சரும், மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு இணைத்தலைவருமான டக்ளஸ் தேவானந்தா, உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

கிளிநொச்சி - ஏ9 வீதியில், அண்மையில், பாடசாலை மாணவி ஒருவர் விபத்துக்குள்ளாகி மரணமடைந்தார். இதனையடுத்து, வீதி விபத்துகளைக் கட்டுப்படுத்துவதற்கு உடனடி நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என்ற கோரிக்கை பல தரப்புகளாலும் முன்வைக்கப்பட்டு வருகிறது. 

விபத்து நடைபெற்ற அடுத்த நாளே மாகாண கல்வியமைச்சின் செயலாளர் இளங்கோவனின் ஏற்பாட்டில், மாவட்டச் செயலாளர் ரூபவதி கேதீஸ்வரன் தலைமையில் விசேட கலந்துரையாடல் ஒன்று மேற்கொள்ளப்பட்டு,  விசேட குழுவொன்று தொடர் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக உருவாக்கப்பட்டிருந்தது. 

இதேவேளை, கிளிநொச்சியில் வீதி விபத்துக்களைக் கட்டுப்படுத்துவதற்கு டிப்போ சந்தியில் சுற்றுவட்டம் ஒன்று அமைக்கப்பட வேண்டும் என்று, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன், பாராளுமன்றத்தில் விடுத்த கோரிக்கையை நடைமுறைப்படுத்த பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இணக்கம் தெரிவித்திருந்தார். 

இவை பற்றி, நேற்று முன்தினம், விரிவாக ஆராய்ந்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, டிப்போ சந்தியில் சுற்றுவட்டம் அமைப்பதில் இடச்சிக்கலும், சட்டச் சிக்கல்களும் இருக்கலாம் என்பதால், அதனைச் செய்துமுடிக்க காலதமாதமாகலாம் என்பதைச் சுட்டிக்காட்டி, அதுவரையில் காத்திருக்காமல் பரந்தன் சந்தி முதல், முறிகண்டி வரையில் ஏ9 வீதியில் பொலிஸாரும், இராணுவத்தினரும் இணைந்து வீதிப் போக்குவரத்து விதிமுறைகளை கடுமையாக நடைமுறைப்படுத்தவேண்டும் என்று பணிப்புரை விடுத்தார். 

கலந்துரையாடலில் கலந்துகொண்டிருந்த பிரதிப் பொலிஸ்மா அதிபர் மற்றும் மாவட்ட இராணுவத் தளபதி ஆகியோருடன், மாவட்டச் செயலாளரை உடனடியாக கலந்துரையாடல் நடத்தி, இதனை எதிர்வரும் 29ஆம் திகதி திங்கட்கிழமை முதல் நடைமுறைப்படுத்துமாறும், அமைச்சர் மேலும் பணிப்புரை விடுத்தார். 

இதேவேளை, டிப்போ சந்தியில் வீதிச் சமிக்ஞை விளக்குகளைப் பொருத்துவதே பொருத்தமான நடவடிக்கையாக இருக்க முடியும் என்றும், இதுதொடர்பில் முன்னரும் ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டங்களில் கலந்துரையாடப்பட்டிருந்தது என்றும், மாவட்டச் செயலாளர் ரூபவதி கேதீஸ்வரன் மற்றும் அமைச்சரின் மேலதிக இணைப்பாளர்  கோ.றுஷாங்கன் ஆகியோர் சுட்டிக்காட்டியதை அடுத்து, வீதி அபிவிருத்தி அதிகாரசபை பிரதம பொறியியலாளர் இளங்கீரன், அது பற்றி விரைவில் ஆராய்ந்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பணித்தார். 

இந்தக் கலந்துரையாடலின் முடிவில், மாவட்டச் செயலாளர், பிரதிப் பொலிஸ்மா அதிபர் மற்றும் மாவட்ட இராணுவத் தளபதி ஆகியோர் கலந்துரையாடல் ஒன்றை நடத்தி, எதிர்வரும் திங்கட்கிழமை முதல் பரந்தன் சந்தியிலிருந்து முறிகண்டி வரையில் வேகக் கட்டுப்பாட்டை கணிக்கும் கருவிகளுடன் பொலிஸார், இராணுவத்தினர் இணைந்து  வீதிப் போக்குவரத்து விதிமுறைகளைக் கடுமையாக நடைமுறைப்படுத்துவது என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X