2022 ஜனவரி 22, சனிக்கிழமை

தவக்கால ஆரம்பம்

Kogilavani   / 2015 ஒக்டோபர் 16 , மு.ப. 04:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

தவக்கால ஆரம்பம் இன்று
தனிமைப்படுத்தப்படுகிறது- தாய் நிலம்

உண்டி பசித்து
உடல் மெலிந்து
உணவுக்காய் போராடும்
தவக்காலம் இது

கண்கள் இருட்டி
விழிநீர் சொரிந்து
பார்வை அற்று
உறக்கம் தொலைத்த
தவக்காலம் இது
தேகச் சதைகள் வற்றியபோதும்
தோல் சுருங்கி ஒடுங்கியபோதும்
உணர்வை மட்டும் மேலீடாய் கொண்டு
தவித்திருக்கும் தவக்காலம் இது

உடல் பைகள் அத்தனையிலும்
ஈரமில்லை, ஒருசொட்டு
இரத்தமுமில்லை
வெறுவிலியாய்  கையேந்தி
இரந்துகேட்கும்
தவக்காலம் இது

அறையப்பட்ட கன்னங்களோடும்
அழுந்தப் பதிந்த கரங்களோடும்
வலிசுமந்து
வலுவிழந்து
தவறி மீண்டு வரமுடியா
தவக்காலம் இது

தவக்கால முடிவிதுவாய்...
முடியப்பட்ட, முடிக்கப்பட்ட
முடிவிது.

வல்லூறுகள் மென்று ஏப்பமிட்ட
ஊனெல்லாம் ஒருசேர
மண்ணோடே மக்கிப் போக,
ஆத்மாமட்டும் அந்தரத்தில்
அடிமையில்லா வாழ்வோடு...

தவக்காலம் இங்கே, இப்போது,
ஆத்மாவுக்கு மட்டுமானதாய்
முழுமைப்படுத்தப்படுகின்றது.

-யாழினி யோகேஸ்வரன்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X