2022 ஜனவரி 17, திங்கட்கிழமை

சித்தத்தை வென்றிடும் துர்முகி சித்திரை

Kogilavani   / 2016 ஏப்ரல் 08 , மு.ப. 09:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

சித்திரை வருடம் பிறந்ததம்மா - இளம்
சேயிலையர் முகம் மலர்ந்ததம்மா
சித்தத்தில் இன்பம் பெருகிநிற்க - இன்று
சீரமிகுதுர்முகி வருடம் வந்ததம்மா!

பொங்கி படைத்திடும் பட்சணத்தோடு - இறையை
போற்றி வழிபடும் நாளிதம்மா!
எங்கும் ஒலித்திட வெடியோசை - இன்று
இன்முக நாளது சேர்ந்ததம்மா!

செங்கமலத் துறை லட்சுமியாள் - இல்லம்
சேர்ந்திடும் நாளதும் வந்ததம்மா!
மங்களம் பாடியே மனை சிறக்க - இனிய
துர்முகிபுத்தாண்டுமலர்ந்ததம்மா!


துர்முகிவருடம் பிறந்ததம்மா- அது மக்கள்
சந்ததம் மகிழ்ந்திடச் செய்ததம்மா!
வந்தனம் செய்துவரவேற்க-யாவரும்
வாசலில் கூடியே நிற்போமம்மா!

சிங்களவர் தமிழர் உறவினிலே-என்றும்
சீர்மைகள் பெருக வேண்டுமம்மா!
இங்கு வாழும் மக்களின் ஐக்கியமும் - தினம்
இதயத்தில் நிறைந்திட வேண்டுமம்மா!

அன்பு அகிம்சை பெருகிடட்டும் - நல்ல
அருளோடு ஆற்றலும் ஓங்கிடட்டுமா!
துன்பத் துயர் தொல்லையெல்லாம் - நீங்க
தூயதாம் துர்முகி வருடம் வழி தரட்டும்

நீதி நிலைத்து நிறைசாத்து-வரும்
தீது அகன்று அருளிடட்டும்
சாதி சமய பேத மெல்லாம் - நீங்கி
வாது சூதுகள் ஒழிந்திடட்டும்!

மூடிய முகிலது கலைந்திடவே-மலையின்
மூட்டங்கள் வாட்டங்கள் பறந்திடட்டும்
தேடிய செல்வமெம் தேயிலையால் - இந்தத்
தேசமே நன்கு செழித்திடட்டும்

நாற்றிற்கு உரமாகும் பசளைப் போல் - இந்த
நாட்டிற்கு உரமாகும் தோட்ட மக்கள்!
மாற்றுக்கு வழி தேடும் காலம் கண்டு
புதுபேற்றிற்கு வழிதேட முனைய வேண்டும்;

கடமையை கண்ணெனக் காண்பவர்கள் - கட்டாயம்
மடமையைப் பொசுக்க வேண்டும்
உடமையாய் கல்வியை உயர்த்தி எண்ணி-கற்றலால்
உயரிய சமூகத்தை காண வேண்டும்!

ஆளுக்கொரு கட்சி மாறிமாறி- புதிதாய்
நாளுக்கொரு சங்கம் தோனறி!
வாழ்வுக்கொரு பாதை காண்பிக்கவே-மலையக
வருங்காலத் தலைமைகள் இணைய வேண்டும்!

நாளொரு கட்சியில் சேர்ந்து கொண்டு–தினம்
பொழுதொரு அறிக்கையை விட்டுக் கொண்டு
மல்லுக்கட்டும் கட்சி அரசியலை - இனியும்
மலையகத்தில் கொண்டு வரவேண்டாம்! வேண்டாம் !

மோதற் தவிர்ப்புகள் நீள வேண்டும் - மண்ணை
முழுமை பயனதன் மக்களை சேரவேண்டும்!
காதற் குயிலென கைகோர்த்து-ஊரார்
கண்டிடும் நட்பது நிலைக்க வேண்டும்!

வழியதன் நீர்க்கோலம் மாறவேண்டும் - மக்கள்
மொழியதில் இன்பமும் சேரவேண்டும்!
பழிசொல்லும் காலங்கள் விலகிவிட- புது
வழிகாணும் போக்குகள் தோன்றவேண்டும்!

வடக்கு, கிழக்கு மலையகப் பூமியிலே-மலர்ந்த
வசந்த நல்லாட்சி நிலைத்து நீள வேண்டும்
அடக்குமுறையின் அடையாளமாம் - வடகிழக்கிலுள்ள
அகதிமுகாம்கள் தொலையவேண்டும் !

யுத்த நிலை இனி வேண்டாம் வேண்டாம் - இனியங்கு
இரத்தத்தின் கறைகளும் படியவேண்டாம்!
சித்தத்தைவென்றிடும் துர்முகிசித்திரையில் வெறி
பித்தத்தை மறந்து வாழ்ந்திடுவோம்

வேண்டும் வேண்டும் நல்லாட்சியென்று-புத்தாண்டை
வேண்டுதல் செய்துவரவேற்போம்!
மீண்டும் தமது நாட்டினிலே-நல்ல
மேன்மைகள் தொடர வேண்டிநிற்போம்!

நெஞ்சம் களித்திடும் சித்திரையில் - மேற்சொன்னதை
நினைவில் நடமிட வைத்திடுவோம்!
பிஞ்சு குழந்தைக்கும் அதைக்கூறி-வரும்
பிரிவினைவாதத்தை மாய்த்திடுவோம் !

அன்பைப் பெருகிநாம் அமைதியைப் பெற- அந்த
ஆயனைப் போற்றியேதுதித்திடுவோம்!
இன்புறுவாழ்வை இனம்காண–துர்முகி
இனியவருடத்தைவரவேற்போம்!

ஆக்கம் : முருகேசுபிள்ளை செல்வராஜா


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .