2021 ஒக்டோபர் 22, வெள்ளிக்கிழமை

கொரோனாவும் காபந்து அரசின் தோல்வியும்

அனுதினன் சுதந்திரநாதன்   / 2020 மார்ச் 22 , பி.ப. 07:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

-அனுதினன் சுதந்திரநாதன்

தேர்தலில் 2/3 பெரும்பான்மையைப் பெறுவதற்காக, எந்த எல்லைக்கும் சென்று வேட்புமனு தாக்கலை நீடிக்கத் தெரிந்த இந்த காபந்து அரசாங்கத்துக்கு, கொரோனா வைரஸ் தாக்கத்தின் காரணமான பாதிக்கப்படும் சாமானிய பொதுமக்களின் நிலை தொடர்பில் கவனம் செலுத்த முடியாமல் போனது சோகமே....!

இலங்கையில் கொரோனா தொற்று ஆரம்பித்த காலம்முதல், சர்வதேச கடனுதவி, சர்வதேச பரஸ்பர உறவுகள் ஆகியவற்றுக்காக இறுக்கமான கட்டுப்பாடுகளை விதிக்காததன் விளைவு, இன்று ஒவ்வொரு நாளும் அதிகரிக்கின்ற கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கையில் தெரிய ஆரம்பித்திருக்கிறது. கடந்த வாரயிறுதியில் நடைமுறைப்படுத்திய ஊடரங்கு சட்ட நடைமுறையை ஒரு வாரத்துக்கு அன்பாகவே, மிக அழகாகத் திட்டமிட்டு, சரியாக நடைமுறைப்படுத்தியிருப்பின், கடந்த வெள்ளிக்கிழமை சடுதியாகவோ அல்லது கூட்டம் கூட்டமாகவோ மக்கள் இன்னல் அனுபவிக்கும் நிலை ஏற்பட்டு இருக்காது.

ஆனால், இந்த அரசாங்கத்துக்கு மக்களின் உயிரைப் பணயம் வைத்தாவது அதிகாரத்தை வலுப்படுத்துகின்ற ஆசை அதிகம் இருந்ததைத்தான் கடந்த வாரம் முழுவதுமே பார்க்க முடிந்தது. அறிவிக்கப்பட்ட விடுமுறைகளில் கூட தேர்தல் வேட்ப்புமனுக்கள் சமர்பிக்கப்படுவது தடைபடாமல் அரசு பார்த்துக்கொண்டது. இதன்போது, அரச ஊழியர்கள், வங்கி ஊழியர்கள் என அனைவருமே கொரோனா தொற்றுக்குள்ளாகக் கூடிய வாய்ப்புகள் இருந்தபோதிலும், அதனை காபந்து அரசாங்கம் எந்தவிதத்திலும் கவனத்தில் கொண்டிருக்கவில்லை என்பதே நிதர்சனமாக இருந்தது.

ஒருவேளை ஜனாதிபதியும் காபந்து அரசின் பிரதிநிதிகளும் கொரோனா சாதாரண தடிமன் என்றே நினைக்கும் அதிபுத்திசாலி வட்டத்துக்குள் இருக்கிறார்களா என தெரியவில்லை. அப்படியான மனநிலையில் இருக்கின்ற சந்தர்ப்பத்தில் மாத்திரமே இப்படியான செயல்பாடுகளை முன்னெடுக்க கூடிய கல்நெஞ்சை கொண்டிருக்க முடியும்.

இந்த கொரோனா அவசரகாலத்தில் இலங்கையின் ஜனாதிபதி நிகழ்த்திய உரை கூட அரசியல்ரீதியாக, பொருளாதார ரீதியாக, உளவியல் ரீதியாக மிகப்பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருந்ததுடன், இந்த அரசினதும், ஜனாதிபதியினதும் மிகப்பெரும் தோல்வியாகவே பார்க்கப்பட்டது. கொரோனா தாக்கம், அதுசார் நாட்டின் பொருளாதார பாதிப்புகள், அதற்காக பொதுமக்களுக்கு வழங்கப்படும் தீர்வுகள் என மிக முக்கியமான விடயங்களைப் பேசவேண்டிய நாட்டின் முதன்மை குடிமகன். தங்கள் அரசியல் வங்குரோத்துக்கு நாடாளுமன்ற தேர்தலில் தமக்கு ஆதரவு வழங்குமாறு கோரியதும், ஆட்சிக்கு வந்ததும் எல்லா தப்புக்கு முந்தைய ஆட்சியாளர்கள் மீது பழியைப் போட்டு அத்தனையும் அரசியல் ஆக்க பார்த்தமையும், கண்துடைப்புக்காக பருப்பு மற்றும் டின்மீன் ஆகியவற்றுக்கு விலையை குறைத்தமையும் மிகப்பெரும் கண்டனங்களை உருவாக்கியிருக்கிறது.

தன்னுடைய பேச்சில், கொரோனா நோய்க்கெதிராக போராடும் வைத்திய சமூகத்தை ஜனாதிபதி எந்தவிடத்திலுமே நினைவு கூர்ந்திருக்கவில்லை. அத்துடன், இலங்கையர்களின் அத்தியாவசிய பொருள்களுக்கு நிலவும் தட்டுப்பாடு, கொரோனா பாதுகாப்பு உபகாரணங்களுக்கு அதிகரிக்கும் விலை என்பன தொடர்பிலும் இம்மியளவும் பேசியிருக்கவில்லை. குறிப்பாக, அன்றைய தினத்தில் பெரும்பாலான இலங்கையர்களின் கோரிக்கையாக, கொரோனா பரவலிருந்து பாதுகாக்க இலங்கையை முழுவதுமாக மூடி வைக்க வேண்டுமென்பதாக இருந்தது. ஆனால், அது தொடர்பிலும், ஜனாதிபதி எதனையும் பேசியிருக்கவில்லை.

இந்தநிலையில்தான், அரசாங்கம் திடீரென தனக்குச் சாதகமான வேட்ப்புமனு தாக்கல் முடிவடைந்தபின்பு, மார்ச் 20-27ஆம் திகதிவரை வீட்டிலிருந்து வேலை செய்ய வலியுறுத்தியிருந்ததுடன், அது அரச பொது விடுமுறையாகக் கணக்கில் கொள்ளப்படாது எனவும் அறிவித்திருந்தது. இலங்கையின் அரசதுறை பற்றித் தெரிந்த சிறு குழந்தைக்குக்கூட தெரியும். வீட்டிலிருந்து கொண்டு அரச சேவைகளைக் கொண்டு நடாத்தக்கூடிய எந்தவிதமான தொழில்நுட்ப வசதிகளோ ஏன், தொழில்நுட்ப அடிப்படை அறிவை கொண்ட ஊழியர்களோ அரசில் இல்லாதபோதும் நடைமுறைக்குப் பொருத்தமற்ற இந்த உத்தரவு வெளியாகி இருக்கின்றது என்பதை...!

ஆனால், பெரும்பாலான அரச திணைக்கங்கள், அரச பொது நிறுவனங்களில் 19ஆம் திகதி வெள்ளிக்கிழமை பெரும்பாலான நிதித்துறை சார் ஊழியர்கள் மார்ச் மாத சம்பளங்களை வழங்குவதற்கான வேலைகளைச் செய்வதற்காக அலுவலகம் செல்ல வேண்டியதாகவிருந்தது. இப்படி ஒரு குழப்பமான சூழ்நிலைக்கு மத்தியில், கணிசமான அளவினர் வேலைக்கு வந்தபின்பு, மிக அவசர அவசரமாக பொதுமக்கள் தொடர்பில் எவ்வித அக்கறையுமின்றி ஊடரங்கு சட்டம் தொடர்பான தகவலை அரசு வெளியிட்டிருந்தது. இதன் விளைவாக, கொரோனா பரவலைத் தடுப்பதாற்காகக் கூட்டமாக பொதுவெளியில் கூடாமல் இருக்கவேண்டிய மக்கள், கூட்டம் கூட்டமாக தலைநகரிலிருந்து ஊர்களுக்குச் செல்லவும், தேவையான பொருள்களை வாங்க அங்காடிகளிலுமென கூடவேண்டிய துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டிருந்தது. இந்தக் கூட்ட நெரிசலில் கொரோனா நோய் தொற்று உள்ளவர் இருந்திருப்பாராயின், இலங்கையின் நிலையை நீங்களே யோசித்துப் பார்த்துக்கொள்ளுங்கள். 

உலக அரங்குடன் ஒப்பிடுமிடத்து, இலங்கை அரசின் இந்த செயற்பாடுகள் மிக மோசமானதாகவே அமைந்திருக்கிறது. இலங்கையின் வைத்தியர்கள் சங்கம், எங்களுடைய கொரோனா தொடர்பான தரவுகள் இத்தாலியின் தரவுகளுக்கு மிக நெருக்கமாக கவலைதருவதாக இருப்பதாக அரசை அறிவுறுத்தியபின்பும், அரசின் செயல்பாடுகள் அதிகாரத்தினை வழங்கும் மக்களை விட, அவர்கள் வழங்கும் அதிகாரமே தேவையானதென மக்களை புறக்கணிக்கும் செயல்பாடாக அமைந்திருக்கிறது. இந்தவிடத்தில், மனிதம் மறக்காது, தன்னுடைய நாட்டு மக்களின் தேவைகளை அறிந்து, அவர்களுக்குத் தேவையான வசதிகள், மானியங்கள், கடனுதவிகளை வழங்கும் கனேடிய பிரதமர் மற்றும் கேரள முதலமைச்சர் ஆகியோரினைப் பாராட்டுவது மிக முக்கியமானது. அப்படித்தான், இலங்கை அரசும் செயற்பட்டிருக்க வேண்டும். 

கொரோனா தாக்கம் காரணமாக, உலகளாவிய ரீதியில் நிதியியல் சார்ந்த அனைத்துத் துறைகளும் ஸ்தம்பித்து போயிருக்கிறது. 2008ஆம் ஆண்டு காலப்பகுதியில் சந்தித்த மிகப்பெரும் பொருளாதார சரிவுகளைப் பார்க்கிலும், இனிவரும் மாதங்களில் மிகப்பெரும் பொருளாதார சரிவுகளை இந்த உலகம் சந்திக்க வேண்டியதாகவிருக்குமென பொருளாதார வல்லுநர்கள் எதிர்வு கூறியிருக்கிறார்கள். இதன் பாதிப்பு, நிச்சயமாக இலங்கையிலும் எதிரொலிப்பதாகவே இருக்கப்போகிறது. இதன் காரணமாக, தனியார்துறையிலும் அநேகமானவர்கள் வேலைகளை இழக்கின்ற நிலை வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. இந்தநிலைகளை நோக்கி, இலங்கை அரசும் மக்களும் கொரோனா நோய் தொடர்பான விழிப்புணர்வுடன் தயாராகவேண்டியது அவசியமாகிறது. இல்லையெனில், மிகப்பெரும் பொருளாதார சீர்குலைவை சந்திக்கின்ற சமயத்தில் இலங்கை தனித்து நிற்கும் நிலையே உருவாகும்.

அதுபோல, இந்தச் சந்தர்ப்பங்களில் உலகளாவிய ரீதியில் கிடைக்கக்கூடிய சின்னச் சின்ன நன்மைகளையும் மக்கள் பக்கமாக வழங்க வேண்டிய கடமையும் அரசுக்கு இருக்கிறது. குறிப்பாக, உலக சந்தையில் தற்போது எரிபொருளுக்கான விலை குறைவடைந்துள்ளது. முன்னாள் நிதி அமைச்சர் மங்களவின் எரிபொருள் சூத்திரம் நடைமுறையிலிருக்கும் சந்தர்ப்பத்தில், தற்போது இலங்கை வாழ் மக்கள் லீற்றர் ஒன்றுக்கு 20/- குறைவாக செலுத்தி பெற்றோலை பெற்றுக்கொள்ளக் கூடியதாக இருக்கும். ஆனால், தற்போதைய அரசு, உலகச்சந்தையில் என்ன மாற்றம் ஏற்பட்டாலும் எதிர்வரும் ஒரு வருடத்துக்கு பெற்றோல் விலையில் மாற்றம் செய்யப்போவதில்லை என சொல்லியிருக்கிறது. இந்த அறிக்கையின் மூலமாக, அரசின் கடன்கள், பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் நட்டங்களுக்கு நீங்கள் பயன்படுத்தும் ஒவ்வொரு லீற்றர் பெற்றோலுக்கும் மேலதிகமாக அறவிடப்படும் சுமார் 20 ரூபாய் பயன்படுத்திக்கொள்ளப்படுமென இலங்கை அரசு சொல்லாமல் சொல்லி இருக்கிறது. 

அதாவது, எந்த அரசு ஆட்சிக்கு வந்தால், தங்கள் பொருளாதார சுமை குறையுமென்கிற எதிர்பார்ப்புடன் பெரும்பான்மையினர் வாக்குகளை அளித்து புதிய ஜனாதிபதியை உருவாக்கினார்களோ, அந்த ஜனாதிபதியும், அவரது காபந்து அரசும் நாடாளுமன்றத் தேர்தலில் பெரும்பான்மையைப் பெறுவதற்கு முன்பாகவே தங்களுக்கு ஆதரவு தந்த மக்களைக் கைவிட்டு விட்டார்கள் என்கிற உண்மையை இது காட்டி இருக்கிறது.

ஒட்டுமொத்தமாகப் பார்க்கின்றபோது, இலங்கை அரசு இந்தக் கொரோனா நிலைமை மற்றும் பொருளாதாரத் தளர்வு நிலை ஆகியவற்றை இதைவிடவும் மிகச்சிறப்பாகக் கையாண்டிருக்க முடியும். ஆனால், அதிகார போதையும், கீரைக் கடைக்குச் சரியான எதிர்க்கடை இல்லையென்கிற இறுமாப்பும் சாமானியர்கள் படுகின்ற இன்னல்களை அவர்களது கண்களிலிருந்து மறைத்திருக்கிறது. இந்த நிலை தொடருகின்ற சமயத்தில் கொரோனா விடயத்தில் நாம் இத்தாலிக்கு நிகராகவும், பொருளாதாரத்தில் மிக மோசமான தெற்காசிய நாடொன்றாகவும் உருவாவதினைத் தவிர்க்க முடியாத சூழ்நிலையே உருவாகும்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X