2021 டிசெம்பர் 07, செவ்வாய்க்கிழமை

குழந்தைகள் குறித்த பொறுப்புகளை கணவன்மார் தட்டிக்கழிப்பது ஏன்?

Editorial   / 2019 ஓகஸ்ட் 23 , மு.ப. 11:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

பெற்றோரின் அ​ரவணைப்பில் காலத்தைக் கடத்தியவர்களுக்கு, வாழ்வின் நெளிவு சுளிவுகள் பற்றி, திருமணம் முடித்த பின்னரே அறிந்துகொள்கின்றனர். குடும்ப வாழ்க்கையில், கணவராகவும் மனைவியாகவும் பல பொறுப்புகளை ஏற்க வேண்டியிருக்கிறது. இருவருமே குழந்தைப் பேற்றை எதிர்பார்க்கின்ற போதிலும், குழந்த பிறந்தவுடன், அக்குழந்தை தொடர்பான பொறுப்புகளிலிருந்து, கணவர்மார்களில் பெரும்பாலானவர்கள் விலகி இருப்பதையே காணக்கூடியதாக இருக்கின்றது. இதனால், குடும்ப வாழ்க்கையில் சிற்சில பிரச்சினைகளும் ஏற்படுவதுண்டு.

இன்றைய காலகட்டத்தில், தாய், தந்தை, குழந்தைகள் என்று மூவர் அல்லது நால்வர் என வரையறுக்கப்பட்ட சிறிய குடும்பங்களையே காணக் கிடைக்கின்றது. இதனால், ஒவ்வொருவருக்கும் உள்ள பொறுப்புகளும் கடமைகளும் அதிகமாகும். அதனால், ஒருவரிடத்தில் மாத்திரம் குழந்தைகள் தொடர்பான பொறுப்புகளைக் கையளித்துவிட்டு நழுவப் பார்க்கும் சூழ்நிலையையே, பெரும்பாலான கணவர்மார் கடைபிடிக்கின்றனர்.

இதுவே, தொழிலுக்குச் செல்லும் மனைவியாக இருந்தால், வீட்டு வேலைகள், அலுவலகப் பணிகளுடன் சேர்த்து, குழந்தைகள் விடயத்தையும் கவனிக்க வேண்டியதாகிவிடும். இது, பின்னர் கணவன் - ​மனைவி இடையே பெரும் விரிசலை ஏற்படுத்திவிடும்.

கணவர் என்பவர், குடும்பத்துக்கான பொருளாதாரத்தை ஈட்டிக்கொடுப்பவராவார். மனைவி தொழில் செய்பவராயினும், கணவரிடமே அந்தப் பொறுப்பு உள்ளது. அந்தப் பொறுப்புணர்ச்சி, பிள்ளைகளுக்கும் வரவேண்டுமாயின், பிள்ளைகள் குறித்த பொறுப்புகளில் சிலவற்றையேனும், கணவர்மாரும் ஏற்றுக்கொள்ள வேண்டும். இல்லாவிடின், கணவன் - மனைவிக்கிடையில் ஏற்படும் முரண்பாடுகள், குழந்தைகளின் மனநிலைகளையும் மாற்றும். அது, அவர்களின் வளர்ச்சியில் தாக்கத்தைச் செலுத்தும்.

இதனால், குடும்பமாக வாழும்போது, பொறுப்புகள், கடமைகளை தனியே ஒருவரிடம் மாத்திரம் விட்டுவிடாது, அனைத்​து விடயங்களையும் இருவரும் பகிர்ந்துகொண்டால், எந்தவொரு சிக்கலும் ஏற்படாது. தற்கால சமூக முறைமை மிகவும் போட்டிமிக்கதாக இருக்கின்ற போதிலும், குழந்தைகள் தொடர்பான கடமை​களையும் பொறுப்புகளையும் பகிர்ந்துகொண்டாலேயே, அந்தப் போட்டிமிக்க சமூகத்தை எதிர்கொண்டு, நற்பிரஜைகளாக எமது பிள்ளைகளை இந்தச் சமூகத்தில் இணைக்க முடியும்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .