2021 நவம்பர் 30, செவ்வாய்க்கிழமை

மாற்றத்தை நம்மிலிருந்து தொடங்குவோம்

Editorial   / 2020 பெப்ரவரி 21 , மு.ப. 11:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

பொலித்தீன் பாவனையை இல்லாமல் செய்வதற்கான செயற்பாடுகள் உலகெங்கிலும் மிகத் துரிதமாக இடம்பெற்று வருகின்றன.  

இந்தியாவில் “பாலித்தீன் பாவனை தடை செய்யப்பட்ட பள்ளி/கல்லூரி” என்பதாக பாடசாலைகள்/ கல்லூரிகளில் அறிவிப்புப் பலகையிடப்பட்டுள்ளது. மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த பாடசாலைகளும் கல்லூரிகளும் மிகச் சிறந்த ஊடகம். எதிர்கால சந்ததிகளுக்கு இப்போதிருந்தே பொலித்தீன் பாவனையால் உண்டாகக் கூடிய கேடுகளைப் பற்றி அறிவுறுத்துவது காலத்தின் தேவையாகவும் இருப்பதால், இந்த அறிவூட்டலை எடுத்துச் செல்வதற்குப் பாடசாலைகளே சிறந்த இடங்கள்.   

இந்தியாவில் பொலித்தீன் தடை அறிவிக்கப்பட்டதன் பின்பு சந்தைக்கு, கடைகளுக்குச் செல்பவர்கள், வீட்டிலிருந்தே துணிப் பைகளையோ வேறு பொலித்தீன் அல்லாத பைகளையோ எடுத்துச் செல்கிறார்கள்.

தமிழ்நாட்டில் மதுரை, திருச்சி, நாகர்கோவில், கன்னியாகுமாரி, சென்னை எனப் பரவலாக இந்த நடைமுறை பழக்கத்துக்கு வந்துள்ளது.   

சில உணவகங்களில்கூட, “வாங்கிச் செல்வதற்காக (Takeaway) வருகிறவர்கள் வீட்டிலிருந்து பாத்திரங்களை எடுத்துவரவும்” என அறிவிப்புப் பலகையில் குறிப்பிடப்பட்டுள்ளது.   

இலங்கைச் சூழலில், இந்தத் தெளிவு இன்னும் பரவலாக வரவில்லை. குப்பை மேடுகளை நாம் தான் உருவாக்குகிறோம் என்ற குற்றவுணர்வு சிறுதுமில்லாமல், பல்பொருள் அங்காடிகளில் கண்டபடி பொருள்களைக் கொள்வனவு செய்து, ஒவ்வொன்றையும் தனித்தனியாகப் பொலித்தீன் பைகளில் பொதி செய்து ட்ரொலியை நிரப்பிக் கொண்டு ஏதோ சாதித்தவர்களைப் போலப் பெருமையாகச் செல்கிறவர்களைக் காணும்போதெல்லாம் எரிச்சலும் பரிதாப உணர்வும் தான் மிஞ்சுகிறது.  

பொலித்தீன் பாவனை தடை அறிவிக்கப்பட்டும், உக்கிப் போகும் பொலித்தீன் என்று மக்களை ஏமாற்றும் ஒரு பொலித்தீனைச் பல்பொருள் அங்காடிகளில் தருகிறார்கள். நாம் வீட்டிலிருந்து பைகளை எடுத்துச் செல்லும் பழக்கத்தைக்கூட அரசாங்கம்தான் பழக்கப்படுத்த வேண்டும் என்று சப்பைக்கட்டுக் கட்டிக் கொண்டே இன்னமும் பொலித்தீன்களைச் சுமந்து செல்லும் நம் மக்களிடையே இந்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்குள் இலங்கை தீவு குப்பை மேடாகி, சூழலும், நீரும் கெட்டு எதிர்காலத்தை இருட்டாக்கி விடுமோ என அச்சமாக உள்ளது.  

புத்தளம் அருவக்காட்டில், உள்நாட்டு, வெளிநாட்டுக் குப்பைகளைக் கொட்டி நிரப்பும் அரசின் முடிவை எதிர்த்து கொழும்பு காலிமுகத்திடலில் புத்தளம் மக்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்தின் போது, பஸ்களில் வந்திறங்கிய ஆயிரக்கணக்கான மக்களின் எண்ணிக்கைக்கு ஈடாக பிளாஸ்டிக் தண்ணீர் போத்தல்களையும் வாகனங்களில் கொண்டு வந்து இறக்கி அடுக்கினார்கள். தண்ணீர் குடித்த பிறகு மக்கள் வீசிவிட்டுச் செல்லப்போகும் போத்தல் குப்பைகளைப் பற்றிக் குப்பைகளை எதிர்த்துப் போராடியவர்களுக்கே தெளிவு இருக்கவில்லை. மாற்று வழிகள் எத்தனையோ உண்டு. ஒரு பெரிய தண்ணீர் தாங்கிகள் இரண்டைக் கொண்டு வந்து சில சில்வர் டம்ளர்களை வைத்திருக்கலாம். வீட்டிலிருந்து தண்ணீர் போத்தல்கள் கொண்டு வாருங்கள் என்று மக்களை அறிவுறுத்தியிருக்கலாம். தண்ணீர் தேவைப்பட்டால் நீர்த்தாங்கிகளிலிருந்து நிரப்பிக் கொண்டிருப்பார்கள்.  

மாற்று வழிகளைச் சிந்திக்காமல் செயற்படுத்தாமல் குப்பை வேண்டாம் என்று மட்டும் போராடுவதால் மாற்றம் வராது. குப்பைகளை நிர்வாகம் செய்து மீள்சுழற்சி செய்வது அரசாங்கத்தின் கடமையே, சந்தேகமோ மாற்றுக் கருத்தோ இல்லை. அதேநேரம் தனிநபர்கள் ஒவ்வொருவருக்கும் இருக்கும் பொறுப்பையும் மதித்தல் கடமை. 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .