2021 ஓகஸ்ட் 02, திங்கட்கிழமை

கட்டார் நெருக்கடியின் பின்னணியில் ட்ரம்ப்?

Editorial   / 2017 ஜூன் 07 , பி.ப. 09:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், மத்திய கிழக்குக்கான தனது அண்மைய விஜயம் ஏற்கெனவே பயனளிப்பதாகவும், சவூதி அரேபியாவில், தன்னுடைய கலந்துரையாடல்களாலேயே, கட்டாருடனான உறவுகளை, பலம் வாய்ந்த அரபு நாடுகள் துண்டிப்பதற்கு காரணம் என்று டுவிட்டரில், நேற்று  (06) தெரிவித்துள்ளார்.   

மத்திய கிழக்கிலுள்ள, ஐக்கிய அமெரிக்காவின் மிகப்பெரிய விமானத் தளத்தை கட்டார் கொண்டுள்ளபோதும், ஐக்கிய அமெரிக்காவின் நட்புறவு நாடான கட்டாருக்கெதிரான மத்திய கிழக்கு நாடுகளின் நடவடிக்கைகளை,  ஜனாதிபதி ட்ரம்ப் புகழ்ந்துள்ளார்.   

இந்நிலையில், பின்னர், சவூதி மன்னர் சல்மானுடன், தொலைபேசியில், ஜனாதிபதி ட்ரம்ப் உரையாடியதாகவும், வளைகுடா நாடுகளின் ஒற்றுமையை வலியுறுத்தியதாகவும், வெள்ளை மாளிகையின் சிரேஷ்ட அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.   

எகிப்து, பஹ்ரேய்ன், ஐக்கிய அரபு அமீரகத்துடன் இணைந்து, கட்டாருடனான இராஜந்தந்திர உறவுகளை துண்டித்த, சவூதி அரேபியாவின் தீர்மானம், அறிவிக்கப்படுவதற்கு சற்று முன்னர் வரைக்கும், ஐக்கிய அமெரிக்காவுக்கு இது தொடர்பில் அறிவிக்கப்படவில்லை என்று இராஜாங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது.   

இதேவேளை, அரேபிய நாடுகளின் நகர்வை, ஜனாதிபதி ட்ரம்ப் புகழ்ந்துள்ளபோதும், ஐக்கிய அமெரிக்கப் படைகளை கட்டாரில் வைத்திருப்பதற்காக, கட்டாரை,  பென்டகன் மீண்டும் புகழ்ந்துள்ளது. சிரியா, ஈராக்கில் நிலப்பரப்புகளைக் கைப்பற்றியுள்ள ஐ.எஸ்.ஐ.எஸ் ஆயுதக்குழுவுக்கெதிரான, ஐக்கிய அமெரிக்கா தலைமையிலான கூட்டணியின் தாக்குதல்களுக்கான தளமான, கட்டாரிலுள்ள உடெய்ட்டில், ஏறத்தாழ 8,000 ஐக்கிய அமெரிக்கப் படையினர் உள்ளனர்.   

இந்நிலையில், கட்டார் மீது அழுத்தம் வழங்குவதில் ஜோர்டானும் இணைந்துள்ளதுடன், தனது இராஜதந்திர தொடர்பைக் குறைத்துள்ளது. அத்தோடு,  கட்டாரைத் தளமாகக் கொண்ட தொலைக்காட்சி அலைவரிசையான அல் ஜஸீராவின் உரிமத்தை இரத்துச் செய்துள்ளது.   

இதேவேளை, அரபு லீக்கின் அங்கத்தவரும் மேற்கு ஆபிரிக்க நாடுமான மொரிட்டானியாவும், கட்டாருடனான உறவுகளைத் துண்டித்துள்ளது.   

இந்நிலையில், பொருளாதாரத் தடைகள் உள்ளடங்கலாக, கட்டாரைத் தனிமைப்படுத்துவது, எந்தப் பிரச்சினைகளையும் தீர்க்காதென,  துருக்கி ஜனாதிபதி தயீப் ஏர்டோவான் தெரிவித்துள்ளார்.    


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .