2022 ஓகஸ்ட் 11, வியாழக்கிழமை

பாக். எரிவாயு நெருக்கடி: நெசவு தொழில் துறைக்கு பூட்டு

Freelancer   / 2022 ஜூலை 05 , பி.ப. 06:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாகிஸ்தானில் நிலவும் எரிவாயு தட்டுப்பாடு காரணமாக நெசவுத் தொழிலை ஜூலை 1 முதல் 8ஆம் திகதி வரை மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக உள்ளூர் ஊடகமொன்று தெரிவித்துள்ளது.

பஞ்சாப் பகுதியில் 70 சதவீத நெசவு தொழிற்சாலைகள் முதன்மையாக அமைந்துள்ளதால், எரிவாயு விநியோகம் நிறுத்தப்படுவது தொழிற்சாலைகளை பாதித்துள்ளது.

எரிவாயு விநியோக பற்றாக்குறை ஏற்கெனவே நெசவு உற்பத்தியை 30 சதவீதம் வரை குறைத்துள்ளதுடன் சமீபத்திய இடைநிறுத்தம் உற்பத்தியை 50 சதவீதம் வரை குறைக்கும் என்றும் இது நாட்டின் பொருளாதாரத்தை பாதிக்கும் என்றும் தெரியவருகிறது.

தொழிற்சாலைகளுக்கு எரிவாயு விநியோகம் தடைபட்டுள்ளதால், ஏற்றுமதியில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது, இது அடுத்த நிதியாண்டில் 26 பில்லியன் டொலர் இலக்குகளை எட்டுவதில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

சூய் நோர்தர்ன் கேஸ் பைப்லைன்ஸ் லிமிடெட், மின் உற்பத்தி நிலையங்களில் இருந்து எரிவாயு விநியோகங்களைப் பெறுவது பற்றி நெசவு தொழிற்சாலைகளுக்கு தெரிவித்துள்ளதாக ஆதாரங்களை மேற்கோள் காட்டி ஏஆர்வை செய்திகள் தெரிவிக்கின்றன.

மின்சாரம் மற்றும் உரத் துறைகளுக்கு தடையின்றி எரிவாயு வழங்குவதைத் தொடர்வதற்காக நெசவுக்கான எரிவாயு விநியோகத்தை இடைநிறுத்த முடிவு எடுக்கப்பட்டதாக வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன.

எரிவாயு இடைநிறுத்தத்தால் நாட்டுக்கு பெரும் பொருளாதார இழப்பு ஏற்படும் என்று எச்சரித்த அனைத்து பாகிஸ்தான் நெசவு தொழிற்சாலை ஒன்றியம் விநியோகத்தை மீண்டும் ஆரம்பிக்குமாறு அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

இதற்கிடையில், பாகிஸ்தான் அரசாங்கம் மீண்டும் பெட்ரோல் விலையை லீற்றருக்கு 14.84 பாகிஸ்தான் ரூபாய் உயர்த்தி, புதிய விலையான 248.74 பாக். ரூபாய் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் நிதி அமைச்சு அறிவித்துள்ளது.

அதிவேக டீசலின் விலையும் லீற்றருக்கு 13.23 பாக். ரூபாய் உயர்த்தப்பட்டு புதிய விலையாக 276.54 ரூபாய் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக ஏஆர்வை செய்திகள் தெரிவிக்கின்றன.

மண்ணெண்ணெய் விலை 18.83 அதிகரித்துள்ளதுடன், மெதுவேக டீசல் விலை லீற்றருக்கு 18.68 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது.

அரசாங்கம் இனி அதிக மானியங்களை ஏற்கும் நிலையில் இல்லை என்று மேற்கோள் காட்டி, நிதியமைச்சர் மிஃப்தா இஸ்மாயில், இஸ்லாமாபாத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.
 
பாகிஸ்தானில் ஷெஹ்பாஸ் ஷெரீப் ஆட்சிக்கு வந்ததில் இருந்து, பெட்ரோல் விலை மற்றும் மின் கட்டண உயர்வால் அன்றாட அத்தியாவசியப் பொருட்கள் விலை உயர்ந்து, சாமானிய மக்களுக்கு எட்டாமல் போய்விட்டதாக உள்ளூர் ஊடக அறிக்கை ஒன்று தெரிவித்துள்ளது.

மானிய எரிபொருள் விலைகள் தொடர்ந்து நிதிப் பற்றாக்குறையை அதிகரித்து, அதன் மூலம் நாட்டின் அன்னியச் செலாவணி கையிருப்பு மீதான அழுத்தத்தை அதிகரித்து வருவதாக டான் தெரிவித்துள்ளது.

"எங்கள் கடினமான காலம் முடிவடைந்து, உலக நிதி நிறுவனங்களுடனான நாட்டின் உறவுகள் மேம்படும் போது மட்டுமே எங்களால் எரிபொருள் விலையை கட்டுப்படுத்த முடியும்" என்றும் நிதியமைச்சர் குறிப்பிட்டுள்ளார். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .