2021 ஜூலை 31, சனிக்கிழமை

துருக்கி இராணுவப் புரட்சி முயற்சி: 50,000 பேர் சிக்கினர்

Shanmugan Murugavel   / 2016 ஜூலை 20 , பி.ப. 04:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

துருக்கியில் கடந்த வாரம் இடம்பெற்ற, தோல்வியில் முடிந்த இராணுவப் புரட்சியைத் தொடர்ந்து, 50,000க்கு மேற்பட்டோர் சுற்றிவளைக்கப்பட்டு, அவர்களின் பணிகளிலிருந்து விலத்தப்பட்டு அல்லது இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஜனாதிபதி றெசெப் தயீப் ஏர்டோவானுக்கு எதிரானவர்களுக்கான களையெடுப்பானது , ஆசிரியர்கள், பல்கலைக்கழக துறைத் தலைவர்கள், ஊடகங்கள் உள்ளடங்கலாக பரந்தளவில் நீடிக்கப்பட்டிருந்தது.

15,200 ஆசிரியர்கள் மற்றும் ஏனைய கல்வி அதிகாரிகள் விலக்கப்பட்டுள்ளதுடன், 1,577 பல்கலைக்கழக துறைத்தலைவர்களுக்கு இராஜினாமா செய்யுமாறு கூறப்பட்டுள்ளதுடன், 8,777 உள்நாட்டு அமைச்சின் பணியாளர்கள் விலக்கப்பட்டதுடன், நிதியமைச்சின் 1,500 பணியாளர்கள் விலக்கப்பட்டுள்ளதாகவும், பிரதமர் அலுவலகத்தில் பணிபுரிந்த 257 பேர் விலத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தோல்வியில் முடிவடைந்த இராணுவப் புரட்சியில், அமெரிக்காவிலுள்ள தலைவர் பெத்ஹூல்லா குலன் தொடர்பு குறித்தான ஆதாரத்தை ஐக்கிய அமெரிக்காவிடம் வழங்கியுள்ளதாக துருக்கிப் பிரதமர் பினாலி யில்ட்ரிம் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, ஜனாதிபதி ஏர்டோவானின் ஆளும் நீதி மற்றும் ஜனநாயகக் கட்சியின் பிரதான மின்னஞ்சல் முகவரிக்கு உரித்ததானா என நம்பப்படும், 762 மின்னஞ்சல் பெட்டிகளிலிருந்து, ஆயிரக்கணக்கான இணைக்கப்பட்ட கோப்புகள் உள்ளடங்கலாக 294,546 மின்னஞ்சல்களை விக்கிலீக்ஸ் பிரசுரித்துள்ளது. இதில், 2010ஆம் ஆண்டு முதலான மின்னஞ்சல்கள் காணப்படுவதுடன், அண்மையானதாக, இம்மாதம் ஆறாம் திகதி மின்னஞ்சல் காணப்படுகிறது.

கடந்த வெள்ளிக்கிழமை (15) இடம்பெற்ற புரட்சிக்கு ஒரு வாரம் முதல் மின்னஞ்சல்களை பெற்றதாக தெரிவித்த விக்கிலீக்ஸ், அரசாங்கத்தின் புரட்சிக்கெதிரான நடவடிக்கைகள் காரணமாகவே, இதை உடனடியாக வெளியிட்டதாக தெரிவித்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .