2021 ஜூலை 30, வெள்ளிக்கிழமை

‘தொடர் இலக்கத்தை கிரைண்டரால் வெட்டியுள்ளனர்’

Thipaan   / 2016 டிசெம்பர் 20 , மு.ப. 09:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

பேரின்பராஜா திபான்

ரவிராஜ் எம்.பியின் கொலைக்குப் பயன்படுத்தப்பட்ட ரி 56 ரகத் துப்பாக்கியின் இடது வெளிப்புறத்திலிருந்த தொடர் இலக்கத்தை, கிரைண்டரால் வெட்டிச் சேதப்படுத்தியுள்ளனர் என, 59ஆவது சாட்சியாளரும் அரச பகுப்பாய்வுத் திணைக்களத்தின் ஆயுதங்கள் மற்றும் வெடிகுண்டுகள் தொடர்பில் பரிசோதிக்கும் பிரிவின் அத்தியட்சகருமான காமினி மடவெல, கொழும்பு மேல் நீதிமன்றத்தில், நேற்றுத் திங்கட்கிழமை (19) சாட்சியமளித்தார். 

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எம்.பியாக இருந்த நடராஜா ரவிராஜ், 2006.11.10அன்று படுகொலை செய்யப்பட்டமை தொடர்பான வழக்கு விசாரணையின் நேற்றைய அமர்வு, கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மணிலால் வைத்தியதிலக தலைமையில், சிங்கள ஜூரிகள் எழுவர் அடங்கிய விசேட ஜூரி சபை முன்னிலையில், முற்பகல் 10.30 மணியளவில் ஆரம்பிக்கப்பட்டது. 

59ஆவது சாட்சியாளரும் அரச பகுப்பாய்வுத் திணைக்களத்தின் ஆயுதங்கள் மற்றும் வெடிகுண்டுகள் தொடர்பில் பரிசோதிக்கும் பிரிவின் அத்தியட்சகருமான காமினி மடவெல, சிரேஷ்ட பிரதி சொலிசிட்டர் ஜெனரல் ரோஹந்த அபேசூரியவின் கேள்விகளுக்குப் பதிலளித்தார். 

கே:  எத்தனையாம் ஆண்டு முதல் இந்தப் பிரிவில் பணியாற்றுகிறீர்கள்? 

1992 முதல். 

கே:  அரச பகுப்பாய்வுத் திணைக்களத்தில் எத்தனை வருடங்களாகப் பணியாற்றுகின்றீர்கள்? 

25 வருடங்களாக. 

கே:  தற்போதும் அரச பகுப்பாய்வுத் திணைக்களத்திலா கடமையாற்றுகின்றீர்கள்? 

ஆம். 

கே:  பல்கலைக்கழகக் கல்வியை எங்கு பயின்றீர்கள்? 

கொழும்பு பல்கலைக்கழகத்தில், 2009ஆம் ஆண்டு இங்கிலாந்தின் ரோயல் மிலிட்டரியிலும் தற்போது லண்டன் மெற்றோபொலிடனிலும் பயிற்சிகளை முன்னெடுக்கிறேன். 

கே:  ஆயுதங்கள் தொடர்பில் எத்தனை அறிக்கைகளை வழங்கியுள்ளீர்கள்? 

பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட அறிக்கைகள். 

கே:  ஒரு நாள் கிடைக்கப் பெற்ற தகவலின் அடிப்படையில், நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜின் படுகொலை தொடர்பில் பரிசோதனை செய்யச் சென்றீர்களா? 

ஆம். 

கே:  எப்போது தகவல் கிடைத்தது? 

2006.11.10 

கே:  அந்தத் தகவலின் அடிப்படையில், ஏதாவதோர் இடத்துக்குச் சென்றீர்களா? 

ஆம். 

கே:  உங்களுடைய குறிப்புப் புத்தகத்தில் உள்ளதா, அது எந்த இடம் என்று? 

பொரளை-கிருலப்பனை பிரதான வீதியின் எல்விட்டிகல மாவத்தைக்கு. 

கே:  2006.11.10அன்று, அந்த இடத்துக்குச் சென்றபோது, எத்தனை மணியிருக்கும்? 

முற்பகல் 11 மணியிருக்கும். 

கே:  அந்த இடத்தில் பாதுகாப்புப் போடப்பட்டிருந்ததா? 

ஆம். 

கே:  யார் யார் பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்? 

பொலிஸாரும் குற்றப்புலனாய்வுப் பிரிவினரும். 

கே:  குற்றம் இடம்பெற்ற இடம் என்ற அடிப்படையில், மஞ்சள் நிறப் பட்டியால் சுற்றி அடையாளப்படுத்தப் பட்டிருந்ததா? 

ஆம். 

கே:  அந்த இடத்தில் ஏதாவது சம்பவம் இடம்பெற்றதற்கான அடையாளம் இருந்ததா? 

ஆம், துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்ட நிலையில், ஜீப்பொன்று பிரதான வீதிக்குக் குறுக்காகக் காணப்பட்டது. வீதிக்கு அருகில், கறுப்பு நிறப்பை காணப்பட்டது. அதற்குள் துப்பாக்கி இருந்தது. 

கே:  என்ன வகை ஜீப்? 

டொயாட்டா. 

கே:  பாதைக்குக் குறுக்காகவா, ஜீப் நிறுத்தப்பட்டிருந்தது? 

ஆம். 

கே:  கறுப்பு நிறப்பையைப் பார்த்ததாகக் கூறினீர்கள், அது எங்கு காணப்பட்டது? 

நடைபாதையில். 

கே: அந்தப் பை தொடர்பில் சொல்ல முடியுமா? 

கறுப்பு நிறப்பை, அதற்குள் துப்பாக்கியும் தோட்டாக்களின் வெற்றுக் கோதுகளும் காணப்பட்டன. 

கே:  அந்தப் பையினுள் எத்தனை வெற்றுக் கோதுகள் காணப்பட்டன? 

26. 

கே:  அவை எல்லாம் ஒரே ரகமா? 

ஆம், 8.62 மில்லிமீற்றர். 

அவரிடம் பை வழங்கப்பட்டது. பையை, கை வில்லையைக் கொண்டு பரிசோதித்த அவர், பையை அவதானித்துக் கொண்டிருந்தபோது, பையைப் படம் எடுத்தீர்களா, அதுதான் இந்தப் பையா என, சிரேஷ்ட பிரதி சொலிசிட்டர் ஜெனரல் ரோஹந்த அபேசூரிய கேட்டதற்கு, ஆம் என, சாட்சியாளர் பதிலளித்தார். 

கே:  துப்பாக்கி இருந்ததாக் கூறினீர்கள்? 

பைக்குள் இருந்தது. 

கே: என்ன ரகத் துப்பாக்கி? 

ரி 56. 

கே:  அதில் ஏதாவது விசேட அம்சம் இருந்ததா? 

பின்புறப் பிடி அகற்றப்பட்டிருந்தது. 

ரி 56 ரகத் துப்பாக்கி தொடர்பில் விளக்கமளித்த அவர், நோர்த் இன்டர்ஸீஸ் கோப்பரேஸன் எனப்படும் சீன நிறுவனத்தால் தயாரிக்கப்படும் டைட் 56 எனும் இந்தத் துப்பாக்கி, ரி 56 என சுருக்கமாக அழைக்கப்படுகிறது. 

ஏ.கே 47 எனும் ரஷ்ய தயாரிப்பின் நகல் பிரதியாகவே இந்தத் துப்பாக்கி, சீனர்களால் வடிவமைக்கப்பட்டது. இதன் மகசீனில் 30 தோட்டாக்களைப் போட முடியும் என்பதோடு, பெயாரிங் (சுடும் முறை) இரண்டு விதமாகும், தானியங்கி மற்றும் கைமுறை பெயாரிங்குகளைக் கொண்டது. துப்பாக்கியின் பரலின் முனையில் காணப்படும் அமைப்பு, குறிபார்ப்பதற்கும் உறுதித் தன்மைக்கும் உதவுகிறது என்றார். 

சம்பவம் தொடர்பில் கிடைக்கப்பெற்ற ஆயுதம் மற்றும் தோட்டாக்களைப் பரிசோதித்து அறிக்கையிட்டதாகவும் கூறினார். 

கே:  துப்பாக்கியில் தொடர் இலக்கம் (சீரியல் நம்பர்) இருக்குமா? 

ஆம். 

கே:  இயந்திர எண்ணும் இருக்குமா, அவைகளுக்கு இடையிலான வேறுபாடு? 

தொடரிலக்கம் துப்பாக்கியின் இடது புறத்தில் வெளியே காணப்படும். இதில் 7 இலக்கங்களைக் கொண்டதாகக் காணப்படும். இயந்திர எண் (மெக்கானிக்கல் நம்பர்) துப்பாக்கியின் உட்புறத்தில் காணப்படும். இது தொடர் இலக்கத்தின் இறுதி 5 எண்களாகும். தொடர் இலக்கமானது துப்பாக்கியின் வெளிப்புறத்தில் ஆழமாகப் பதிக்கப்படும். 

கே:  இரண்டு துப்பாக்கிகளுக்கு ஒரே இலக்கம் இருக்க முடியுமா? 

இல்லை. 

கே:  பாரிங்கில் தானியக்க முறையில் சுடும்போது, தோட்டாக்கள் தொடர்ந்து வெளியேறுமா? 

ஆம். 

அதன் பின்னர், பகுப்பாய்வாளரிடம் துப்பாக்கி கொடுக்கப்பட்டது. அவர் தனது கைவில்லையைக் கொண்டு, பரிசோதனை செய்ய ஆரம்பித்தார். 

கே:  இந்தத் துப்பாக்கியில் தொடர் இலக்கம் உள்ளதா? 

அழிந்த நிலையில் காணப்படுகிறது.  

10 வருடங்களுக்கு முன் பரிசோதிக்கும் போது, அவ்விலக்கம் காணப்பட்டதாகவும் அதைப் படம் பிடித்துள்ளதாகவும் தெரிவித்தார். துப்பாக்கியின் மேற்புறத்தில் ஆழமாகப் பதிக்கப்படுவதால், சேதமாக்கப்பட்டாலும் அதை கண்டுபிடிக்கலாம் எனக் கூறிய அவர், கிரைண்டர் கொண்டு இந்தத் துப்பாக்கியின் தொடர் இலக்கம் வெட்டப்பட்டதாகத் தெரிவித்தார். 

பரிசோதனை செய்தது தொடர்பில், அவரது கையெழுத்து உள்ளதா என பிரதி சொலிசிட்டர் ஜெனரல் கேட்டதற்கு, கைவில்லையைக் கொண்டு பரிசோதித்து அதைக் கூறினார். 

அதன் பின்னர், துப்பாக்கி சுற்றப்பட்டிருந்த கார்ட்போட் பெட்டி, மற்றும் கபில நிறத் தாள் என்பவற்றை எடுத்த அவர், சாட்சியாளரிடம் அவற்றைக் காட்டி, அதில் குறிப்பிடப்பட்டுள்ள எழுத்துக்கள், செலோபன் டேப்பினால் ஒட்டப்பட்டு, அதில் பொறிக்கப்பட்டுள்ள இலட்சினை என்பவை தொடர்பில் வினவினார். 

அவற்றைப் பரிசோதித்து பதிலளித்த சாட்சியாளர், ஸ்கொட்லாண்யார் பொலிஸாரினால் பிரிக்கப்பட்டபோது, எழுதப்பட்டவை மற்றும் தமது பிரிவினால் பொறிக்கப்பட்ட இலட்சினைகள் என்பன தொடர்பில் சொலிசிட்டர் ஜெனரலுக்கு விளக்கினார். 

கே:  துப்பாக்கியின் தொடர் இலக்கத்ததைக் கூற முடியுமா? 

1259799. 

கே:  இயந்திர இலக்கம்? 

59799. 

கே:  யாருடன் இணைந்து இந்தப் பரிசோதனையில் ஈடுபட்டீர்கள்? 

டபிள்யூ.டி.ஜே.எஸ். குணதிலக்க என்பவருடன். 

கே:  இந்தத் துப்பாக்கியை உங்களுடைய பிரிவிலிருந்து வேறு யாருக்காவது கொடுத்தீர்களா? 

ஆம். 

கே:  என்ன காரணத்துக்காக? 

ஸ்கொட்லாண்ட் யாட் பொலிஸ் பரிசோதனைக்காக. 

கே:  உங்களால் வழங்கப்பட்ட அறிக்கையில் துப்பாக்கி தொடர்பில் என்ன கூறியுள்ளீர்கள்? 

இந்தத் துப்பாக்கி, சீனாவின் தயாரிப்பான ரி 56 ரகத் துப்பாக்கி. 

கே:  இது தவிர வாகனத்திலும் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதா? 

ஆம். 

கே:  வாகனத்தின் பதிவு இலக்கம்? 

ஜே.ஈ 1279 இலக்கமுடைய டொயாட்டா ஜீப். 

கே:  அது தவிர வேறேதும் வாகனம்? 

மிற்சுபிசி வான், 253-4347 

கே:  தடயங்களைக் கொண்டு, ஜீப்பின் எந்தெந்தப் பகுதிகளில் துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளது? 

வலது முன் கண்ணாடி, வலது கதவு, முன் டாஸ் போர்ட், இடது கதவுக்கு அருகில், இடது கதவில், இடது நடுக் கதவு, இடது நடுக்கதவுக்கு மேல், இடது முன் ஆசனம், இடது நடுக்கதவுக் கண்ணாடி, வலது நடுக் கதவு, வலது கண்ணாடி, இடது கண்ணாடி. 

கே:  இந்தத் தடயங்களுக்கான காரணம்? 

துப்பாக்கித் தோட்டாக்கள் ஊடுருவியதாலும் வெளியேறியதாலும் ஏற்பட்ட தடயங்கள். 

கே:  வலது பக்கத் தடயங்கள் தொடர்பில்? 

தோட்டாக்கள் பயணித்து வெளியேறியுள்ள. 

கே:  வெடி வைத்தவர் ஜீப்பின் எந்தப் பக்கம் இருந்துள்ளார்? 

இடது பக்கம். 

கே:  எவ்வளவு தூரத்தில் இருந்திருப்பார் எனக் கூற முடியுமா? 

எவ்வளவு தூரம் என, சரியாகக் கூற முடியாது. குறைந்தளவு தூரம். 7 தொடக்கம் 10 மீற்றருக்கு இடையிலான தூரம். 

அதன் பின்னர், 2ஆம் பிரதிவாதி சார்பில் ஆஜரான சட்டத்தரணியிடம் குறுக்குக் கேள்விகள் உள்ளனவா என, நீதிபதி கேட்டபோது, அவர் இல்லை எனப் பதிலளித்தார். அதன் பின்னர், 3,4ஆம் பிரதிவாதிகள் சார்பில் ஆஜரான சட்டத்தரணியான அனுஜ பிரேமரத்ன சில கேள்விகள் உள்ளதாகக் குறிப்பிட்டார். 

இதன்போது குறுக்கிட்ட சிரேஷ்ட பிரதி சொலிசிட்டர் ஜெனரல் ரோஹந்த அபேசூரிய, தன்னிடம் சில கேள்விள் உள்ளதாகத் தெரிவ்த்தார். 

சம்பவம் இடம்பெற்ற போது சேகரிக்கப்பட்ட தோட்டாக்கள் அடங்கிய பையை அவர் எடுத்தார். 26 தோட்டாக்களும் தனித்தனியாக சிறிய பெட்டியில் இடப்பட்டு, பெரிய பொலித்தீன் பையொன்றினுள் இடப்பட்டிருந்தது. அந்தப் பெட்டிகளை ஒவ்வொன்றாக எடுத்து, சாட்சியாளரிடம் காட்டி, அவற்றில் சாட்சியாளரின் கையெழுத்து உள்ளதா என உறுதிப்படுத்திக்கொண்டார். 

அதுமட்டுமின்றி, பொலித்தீன் பையில் குறிப்பிடப்பட்டிருந்த பொலிஸ் எவிடன்ஸ் (பொலிஸ் ஆதாரம்) என்பதைக் காட்டி இது என்ன என வினவினார். அது, பொலிஸ் ஆதாரம் என, சாட்சியாளர் கூறினார். 

அதன் பின்னர், 2ஆம் பிரதிவாதி சார்பில் ஆஜரான சட்டத்தரணியிடம் குறுக்குக் கேள்விகள் உள்ளனவா என, நீதிபதி கேட்டபோது, அவர் இல்லை எனப் பதிலளித்தார். அதன் பின்னர், 3,4ஆம் பிரதிவாதிகள் சார்பில் ஆஜரான சட்டத்தரணியான அனுஜ பிரேமரத்ன கேள்விகளைக் கேட்க ஆரம்பித்தார். 

கே:  ரி 56 ரகத் துப்பாக்கியால் சுட்டால், பின்னோக்கிய அதிர்வு காணப்படுமா? 

ஆம், துப்பாக்கியின் எதிர்த் தாக்கம் பின்பகுதியில் காணப்படும். 

கே:  துப்பாக்கியில் பட் (பின்பகுதி) ஏன் உள்ளது? 

குறிவைக்கும் போது, ஆதாரத்துக்காக. 

கே:  பின்பகுதியில்லாத துப்பாக்கியாயின், தாக்கம் அதிகமாகவா இருக்கும்? 

அவ்வாறு இருக்கும் எனக் கூறமுடியாது. 

கே:  ஒரு செக்கனுக்கு எத்தனை தோட்டாக்களைச் சுடமுடியும்? 

10 தோட்டாக்களை. 

கே:  அப்படியாயின் மகசீன் ஒன்றிலுள்ள தோட்டாக்களைச் சுட 3 செக்கன்கள் எடுக்கும்? 

ஆம். 

சட்டத்தரணி அனுஜ பிரேமரத்ன தனது குறுக்கு விசாரணையை முடித்தவுடன், சிரேஷ்ட பிரதி சொலிசிட்டர் ஜெனரல் ரோஹந்த அபேசூரிய, நெறிப்படுத்தலில் ஈடுபட்டார். 

கே:  ரி 56 துப்பாக்கியில் எதிர்த்தாக்கம் அல்லது பின்னுதைப்பு காணப்படுமா? 

ஆம். எனினும், அதிகூடியளவு இல்லை. 

அத்துடன், அவரது சாட்சியமளிப்பு நிறைவடைந்தது. 

முதலாவது சந்தேகநபராக இருந்து அரச தரப்புச் சாட்சியாளராக மாறிய, மனம்பேரிகே சம்பத் பிருதிவிராஜுக்குப் பிணை வழங்குமாறு, அரச சட்டத்தரணியான, தர்ஷன ரன்முத்துகே,  கோரினார். 

குறித்த சாட்சியாளர், அரச தரப்புச் சாட்சியாளராக மாறிய பின்னர், 14 மாதங்களாக தடுப்பில் வைக்கப்பட்டுள்ளதாகவும் அவரது குடும்பம் மற்றும் பிள்ளைகளின் நிலையைக்கருத்திற்கொண்டு, அவருக்குப் பிணை வழங்குமாறு கோரினார். 

இது தொடர்பில் சட்டமா அதிபரின் நிலைப்பாட்டை அறியவேண்டும் எனக் குறிப்பிட்ட சிரேஷ்ட பிரதி சொலிசிட்டர் ஜெனரல் ரோஹந்த அபேசூரிய, நாளை (இன்று) அது தொடர்பில் அறிவிக்கப்படும் எனக் கூறினார். 

பிணை தொடர்பில், சட்டமா அதிபரின் நிலைப்பாட்டை அறிந்த பின்னர், இன்றைய தினம் அறிவிக்கப்படும் என கூறிய நீதிபதி, வழக்கு விசாரணையை இன்று செவ்வாய்க்கிழமை (20) வரை ஒத்திவைத்தார். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .