2025 மே 04, ஞாயிற்றுக்கிழமை

தெமட்டகொட சமிந்த மீது சூடு: ஒருவருக்கு பிணை

Princiya Dixci   / 2017 மார்ச் 30 , பி.ப. 07:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

பேரன்பராஜா திபான்

தெமட்டகொடயில் வைத்து, சிறைச்சாலை பஸ் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகம் தொடர்பில் எண்மரினால் மீளாய்வு மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்த நிலையில், அதில் ஒருவருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம், நேற்று (30) பிணை வழங்கியது.

பாதாள உலகக் கோஷ்டியின் தலைவர் என அறியப்படும் தெமட்டகொட சமிந்த என்றழைக்கப்படும் சமந்த ரவி ஜயநாத் உள்ளிட்ட நால்வரை ஏற்றிச் சென்ற சிறைச்சாலைகள் திணைக்களத்துக்குச் சொந்தமான பஸ் மீது, 2016ஆம் ஆண்டு மார்ச் 2ஆம் திகதி துப்பாக்கிப் பிரயோகம் நடத்தப்பட்டது.
இந்தத் துப்பாக்கிப் பிரயோகத்தில், சமிந்தவுக்கு தலையிலும் நெஞ்சிலும் துப்பாக்கி ரவைகள் பாய்ந்து  அவர் படுகாயமடைந்தார்.

இச்சம்பவம் தொடர்பில் 13 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், அவர்களில் எண்மரால், பிணை வழங்குமாறு கோரி மீளாய்வு மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

அது தொடர்பான வழக்கு, கொழும்பு மேல் நீதிமன்ற பிரதான நீதிபதி மணிலால் வைத்தியதிலக முன்னிலையில், நேற்று எடுத்துக்கொள்ளப்பட்டபோது, எழுவரின் பிணை மனுதொடர்பில் ஆராய்ந்து, ஜூன் மாதம் 5ஆம் திகதி பிணை தொடர்பில் அறிவிக்கப்படும் என நீதிபதி உத்தரவிட்டார்.

ஏழாவது சந்தேகநபருக்கு பிணை வழங்குவதில் ஆட்சேபணை இல்லை என, சட்டமா அதிபர் திணைக்களத்தின் சார்பில் ஆஜராகிய சிரேஷ்ட அரச சட்டத்தரணி சுஹர்ஷி ஹேரத், மன்றுக்கு அறிவித்தார்.

அதனையடுத்து, 1 இலட்சம் ரூபாய் ரொக்கப்பிணையிலும் 1மில்லியன் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளிலும் செல்ல நீதிபதி அனுமதித்ததுடன், வழக்கை, ஜூன் 5ஆம் திகதிக்கு ஒத்திவைத்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X