2025 மே 04, ஞாயிற்றுக்கிழமை

மஹிந்தானந்தவுக்கு எதிரான வழக்கு: நவம்பரில் சாட்சிய விசாரணை

Kogilavani   / 2017 ஜூலை 11 , மு.ப. 10:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

பேரின்பராஜா திபான்

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகேவுக்கு எதிரான வழக்கில், சாட்சிய விசாரணைக்கான தினங்களாக, நவம்பர் 20, 21ஆம் திகதிகளை கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி கிஹான் குலதுங்க, நேற்று (10) குறித்தார்.  

கொழும்பு 7, கின்ஸி வீதியில், 27 மில்லியன் ரூபாய் பெறுமதியான வீடொன்றை கிறிஸ்தோபர் ரொஷான் என்பவரின் பேரில் வாங்கினார் என்றும் வீடு வாங்கிய பணம், சட்டவிரோதமாகச் சேர்க்கப்பட்டது என்றும் குற்றஞ்சாட்டப்பட்டு, சட்டமா அதிபரால் வழக்குத்தாக்கல் செய்யப்பட்டது.  

இந்தப்பணம் எவ்வாறு சேர்க்கப்பட்டது என்று குறிப்பிடப்படவில்லை என்று, குற்றச்சாட்டுப் பத்திரத்தில் சுட்டிக்காட்டியிருந்த சட்டமா அதிபர், பணச்சலவைச் சட்டத்தின் கீழேயே, வழக்குத்தாக்கல் செய்திருந்தார்.  

இந்த வழக்கு மேல் நீதிமன்ற நீதிபதி கிஹான் குலதுங்க முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்டபோது, பிணை நிபந்தனைகள் பூர்த்தி செய்யப்பட்டமைக்கான ஆவணம், பிரதிவாதியின் சட்டத்தரணியால், நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டது.  

வழக்கின் சாட்சிய விசாரணை நடத்ததுவதற்கான தினங்களை அறிவிக்குமாறு கோரிய பிரதி சொலிசிட்டர் ஜெனரல், சாட்சியங்கள் தொடர்பில் அறிவிப்பதற்கான தினமொன்றையும் அறிவிக்குமாறும் கோரிநின்றார்.  

சாட்சிய விசாரணைக்கான தினங்களாக, நவம்பர் 20,21ஆம் திகதிகளைக் குறித்த நீதிபதி, சாட்சியங்கள் தொடர்பில் அறிவிப்பதற்கு, ஓகஸ்ட் 31ஆம் திகதி வழக்கு எடுத்துக்கொள்ளப்படும் என உத்தரவிட்டார்.  

கடந்த மே மாதம் 22ஆம் திகதி இடம்பெற்ற அமர்வின்போது, 200,000 ரூபாய் ரொக்கப்பிணையிலும் 5 இலட்சம் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீரப்பிணைகளிலும் செல்ல நீதிபதி அனுமதித்ததுடன், அவருடைய கை விரல் அடையாளத்தைப் பெற்று, முந்தைய குற்றவியல் பதிவுகள் தொடர்பில் அறிந்துகொள்ளுமாறும் உத்தரவிட்டார். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X