2025 நவம்பர் 03, திங்கட்கிழமை

‘கட்டையுடன் நின்றிருந்த மதனராஜாவை அடையாளம் காட்டுவேன்’

Princiya Dixci   / 2016 நவம்பர் 30 , மு.ப. 03:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

செல்வநாயகம் கபிலன்

“கையில் பெரிய கட்டையுடன், மதனராஜா நின்றிருந்தார். தகாத வார்த்தைகளைப் பேசிக்கொண்டிருந்தார். ஆக்ரோஷமாக இருந்தார். அவருடன் நின்றிருந்தவர்களும், ஆக்ரோஷமாக இருந்தனர். என்னால் அவரை அடையாளம் காட்ட முடியும். அவர் ஈ.பி.ஆர்.எல்.எப் இல் இருந்து, பின்னர்  ஈ.பி.டி.பி.இல் இணைந்திருந்தார். அதனால், அவரை எனக்கு நன்றாகத் தெரியும்” என, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமசந்திரன், நீதிமன்றில் சாட்சியமளித்தார்.

கடந்த 2001ஆம் ஆண்டு, ஊர்காவற்துறை தேர்தல் பிரசாரத்துக்குச் சென்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் மீது தாக்குதல் நடத்தி, இருவரை படுகொலை செய்தமை தொடர்பான வழக்கு விசாரணை, 14 வருடங்களின் பின்னர், யாழ். மேல் நீதிமன்றில் இடம்பெற்று வருகின்றது. யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் முன்னிலையில் நடைபெற்று வரும் விசாரணையின் 7ஆவது நாளான நேற்றுச் செவ்வாய்க்கிழமை, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமசந்திரன், மன்றில் ஆஜராகி சாட்சியமளித்தார். அவர் அங்கு மேலும் சாட்சியமளிக்கையில் கூறியதாவது,

“நாராந்தனைக்கு அண்மையில், நான் பயணம் செய்த வாகனம் சென்று கொண்டிருந்த போது, துப்பாக்கிச் சத்தம் கேட்டது. அந்த இடம் எங்கும் பற்றைக்காடாக இருந்தது. துப்பாக்கிச் சத்தம் கேட்டதும், நாம் கீழிறங்கி பார்த்தோம். அப்பொழுது, பல குரல்களில் ‘கொல்லுங்கள்... அடியுங்கள்...’ எனக் கத்தும் சத்தம் கேட்டது. முக்கியமானவர்களின் பெயர்கள் குறிப்பிட்டு கத்திச் சத்தம் கேட்டது. அக்குரல்களில் கே.சிவாஜிலிங்கம், மாவை சேனாதிராசா, நடராஜா ரவிராஜ் மற்றும் என்னுடைய பெயரும் இருந்தது.

“நான், முன்னேறிச் செல்ல முற்பட்ட போது, என்னுடன் வந்தவர்கள் என்னை வளைத்துப் பிடித்து முன்னேற விடாது தடுத்தனர். அப்போது, மாவை சேனாதிராசாவின் பாதுகாவலர், மாவை சேனாதிராசாவை அழைத்துக் கொண்டு எம்மை நோக்கி வந்தார். படுகாயமடைந்த மாவை சேனாதிராசாவை, ரவிராஜின் வாகனத்தில் ஏற்றி, யாழ்.போதனா வைத்தியசாலைக்கு அழைத்து வந்தோம்” எனத் தெரிவித்தார்.

இதன்போது அரச சட்டவாதி கேள்விகளை எழுப்பினார்.

கே: முதலாவது வாகனத்துக்கும் உங்களது வாகனத்துக்கும் எவ்வளவு தூரம் இருக்கும்?

ப: 100 மீற்றர் தூரம் இருக்கும்.

கே: 100 மீற்றர் தூரத்திலிருந்து அங்கு நடந்தவற்றை உங்களால் பார்க்க முடிந்ததா?

ப: ஆம்! முழுவதையும் பார்க்க முடியவில்லை. இருந்தாலும், சிலவற்றைப் பார்த்தேன்.

கே: உங்கள் வாகனத் தொடரணியில் வந்த எவரேனும் உயிரழந்தமை தொடர்பில் அறியக் கூடியதாக இருந்ததா?

ப: ஆம்! இரண்டு பேர் படுகொலை செய்யப்பட்டனர். அவர்களுடைய மரணச்சடங்கிலும் பங்கு பற்றியிருந்தேன்.

கே: உங்களுடன் வந்தவர்கள் 22 - 25 பேர் வரை, எவரும் படுகாயமடைந்தனரா?

ப: ஆம்

கே: யார் எனக் கூறமுடியுமா?

ப: சிவாஜிலிங்கம், மாவை சேனாதிராசா கடும் காயத்துக்கு உள்ளாகினர்.

கே: வந்தவர்கள், என்ன வாகனத்தில் வந்தவர்கள் என பார்க்க முடிந்ததா?

ப: கன்டர் வாகனமும் இருந்தது. அதனுடன், வேறு வாகனமும் இருந்தது.

கே: ஆயுதங்களுடன் வந்தவர்கள் தாக்கியதை உங்களால் பார்க்கக் கூடியதாக இருந்ததா?

ப: ஆம்

கே: தாக்கியோரை உங்களால் அடையாளம் காட்ட முடியுமா?

ப: ஆம். ஒருவரை அடையாளம் காட்ட முடியும். அவர் மதனராஜா. அவர் பெரிய பொல்லுடன் நின்றிருந்தார். அவரை நீண்ட காலமாக, எனக்கு தெரியும்.

கே: எவ்வாறு தெரியும்?

ப: ஈ.பி.ஆர்.எல்.எப்.இல் முன்பு இருந்தவர். அங்கிருந்து பிரிந்து ஈ.பி.டி.பி.யில் இணைந்திருந்தார்.

கே: எவ்வளவு காலமாக தெரியும்?

ப: சுமார் 15 வருடமாகத் தெரியும்.

கே: நீங்கள் கண்ணால் கண்டதாக கூறப்படும் மதனராஜா என்ன ஆயுதம் வைத்திருந்தார்.

ப: கையில் பெரிய கட்டையுடன் நின்றிருந்தார். தகாதா வார்த்தைகள் பேசினார். ஆக்கிரோசமாக நின்றதுடன், அவருடன் நின்றிருந்தவர்களும் ஆக்கிரோசமாக நின்றிருந்தனர்.

கே: மதனராஜாவுடன் எத்தனை பேர் நின்றிருந்தனர்?

ப: 9- 10 பேர்

கே: எவ்வளவு நேரம் தாக்குதல் நடந்தது?

ப: சுமார் 20 நிமிடம் இருக்கும். அதன் பின், மாவை சேனாதிராசாவை அழைத்துக்கொண்டு யாழ்.போதனா வைத்தியசாலைக்கு நான் சென்று விட்டேன். எமது மீதிப் பேர் அங்கு நின்றிருந்தனர். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X