Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 05, திங்கட்கிழமை
Thipaan / 2016 டிசெம்பர் 22 , மு.ப. 04:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
பேரின்பராஜா திபான்
2006ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதத்தில், இராணுவத்தின் நட்பு அணியினரான கருணா அணியினருக்கு, இராணுவ புலனாய்வுப் பிரிவினரால் ஆயுதங்கள் வழங்கப்பட்டதாக, அந்தக் காலப் பகுதியில் இராணுவ புலனாய்வுப் பிரிவின் அத்தியட்சகராக இருந்த மேஜர் ஜெனரல் லியனகே, கொழும்பு மேல் நீதிமன்றத்தில், நேற்று (21) சாட்சியமளித்தார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எம்.பியாக இருந்த நடராஜா ரவிராஜ், 2006.11.10அன்று படுகொலை செய்யப்பட்டமை தொடர்பான வழக்கு விசாரணை, கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மணிலால் வைத்தியதிலக தலைமையில், சிங்கள ஜூரிகள் எழுவர் அடங்கிய விசேட ஜூரி சபை முன்னிலையில், முற்பகல் ஆரம்பிக்கப்பட்டது.
தனக்கு உடல்நிலை சரியில்லாததன் காரணமாக, தனது சார்பில் சட்டமா அதிபர் திணைக்களத்தின் அரச சட்டத்தரணி சுஹர்ஷி ஹேரத், சாட்சியாளர்களிடம் கேள்விகளைக் கேட்பார் என, சிரேஷ்ட பிரதி சொலிசிட்டர் ஜெனரல் ரோஹந்த அபேசூரிய, நீதிபதியின் கவனத்துக்குக் கொண்டுவந்தார்.
அதன்பின்னர், ஸ்கொட்லாண்ட் யார்ட் பொலிஸாரின் ஆவணங்கள் தொடர்பில் வினவுவதற்காக, குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரியொருவரை 68ஆவது சாட்சியாளராக இணைத்துக்கொள்வதற்கு, அரச சட்டத்தரணி சுஹர்ஷி ஹேரத், நீதிபதியிடம் அனுமதி கோரியதையடுத்து, அவருக்கு அனுமதி வழங்கப்பட்டது.
அதனையடுத்து, 68ஆவது சாட்சியாளரான, குற்றப் புலனாய்வுப் பிரிவின் சர்வதேசப் பிரிவில் கடமையாற்றும் பொலிஸ் பரிசோதகரான லக்ஷமன் ராஜகருணாவிடம் அரச சட்டத்தரணி சுஹர்ஷி ஹேரத், கேள்விகளைக் கேட்கத் தொடங்கினார்.
கே: நீங்கள் எங்கு சேவையாற்றுகிறீர்கள்?
குற்றப் புலனாய்வுப் பிரிவில்.
கே: அதில் எந்தப் பிரிவில் கடமை புரிகிறீர்கள்?
சர்வதேசப் பிரிவில்.
கே: எவ்வளவு காலமாக அங்கு கடமையாற்றுகிறீர்கள்?
16 வருடங்களாக.
கே: சர்வதேசப் பிரிவில் எப்போது கடமை புரியத்தொடங்கினீர்கள்?
2004.04.07
கே: இந்த வழக்குடன் தொடர்புடைய ஆவணங்களை ஸ்கொட்லாண்ட் யார்ட் பொலிஸாருக்கு அனுப்பினீர்களா?
ஆம்.
கே: எச்.சி 8331/16 வழக்கு சம்பந்தமாக, ஸ்கொட்லாண்ட் யார்ட் பொலிஸாரின் அறிக்கையில் என்ன குறிப்பிடப்பட்டுள்ளது?
2006.11.10அன்று, நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜின் படுகொலை தொடர்பில்,
கே: அவர்களது அறிக்கை எது சம்பந்தமானது?
தடயவியல் ஆய்வு அறிக்கை.
சந்தேகநபர்களை கைதுசெய்த பின்னர், அவர்களிடமிருந்து பெறப்பட்ட இரத்த மாதிரி, 2015ஆம் ஆண்டு மஞ்செஸ்டர் பொலிஸாரின் ஊடாக, ஸ்கொட்லாண்ட் யார்ட் பொலிஸாருக்கு அனுப்பிவைக்கப்பட்டது.
கே: 2015ஆம் ஆண்டிலா அவர்கள் கைதுசெய்யப்பட்டனர்?
ஆம்.
கே: அதன்பின்னரா இரத்த மாதிரி எடுத்தீர்கள்?
ஆம்.
ஸ்கொட்லாண்ட் யார்ட் பொலிஸார், 2007ஆம் ஆண்டு இலங்கைக்கு வந்து சென்றனர். இதுதொடர்பில், பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயத்துடன் தொடர்புகொண்டு, மஞ்செஸ்டர் பொலிஸாரினூடாக அனுப்பினோம். அறிக்கை வழங்கப்பட்டபின், குற்றவாளிகளாக நிருபிக்கப்பட்டவர்களுக்கு மரண தண்டனை வழங்கக் கூடாது என, அவர்களால் கூறப்பட்டது.
கே: இது தொடர்பில் யாருடன் பேசினீர்கள்?
என்னுடை உயர் அதிகாரியுடன் கலந்துரையாடி, சட்டமா அதிபர் திணைக்களத்துக்கும் அறிவித்தோம்.
அதன்பின்னர், 2ஆவது பிரதிவாதி சார்பில் ஆஜரான சட்டத்தரணி யுரான் லியனகே கேள்விகள் இல்லை எனக் கூறியதையடுத்து, 3,4 ஆவது பிரதிவாதிகள் சார்பில் ஆஜரான சட்டத்தரணி அனுஜ பிரேமரத்தன, கேள்விகளைக் கேட்க ஆரம்பித்தார்.
கே: பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயத்தினூடாக தகவல் கிடைத்தா?
ஆம்.
கே: அந்தத் தகவல் தொடர்பிலான ஆவணத்தை, இந்த மன்றில் சமர்ப்பித்துள்ளீர்களா?
இல்லை.
சட்டத்தரணி, தன்னுடைய கேள்விகளை முடித்த பின்னர், ஜூரிகளும் கேள்விகள் இல்லை எனத் தெரிவித்தனர். அதனையடுத்து, 58 ஆவது சாட்சியாளரான, குற்றப் புலனாய்வுப் பிரிவின் பொலிஸ் பரிசோதகர் புத்திக ஜயசேகர சாட்சியமளிக்க அழைக்கப்பட்டார்.
கே: தற்போது எங்கு பணியாற்றுகிறீர்கள்?
குற்றப் புலனாய்வுப் பிரிவில்.
கே: எவ்வளவு காலமாகப் பணியாற்றுகிறீர்கள்?
14 வருடங்களாக.
கே: மனித படுகொலை தொடர்பான பிரிவில் எத்தனை வருங்களாகப் பணியாற்றுகிறீர்கள்?
5 வருடங்காக.
கே: இந்த வழக்குடன் தொடர்புடைய ஆயுதம் சம்பந்தமாக யார் யாரிடம் வாக்குமூலம் பெற்றுள்ளீர்கள்?
இராணுவ உத்தியோகத்தர்களிடம்.
கே: அந்த ஆயுதம் யாருடையது?
இராணுவத்தினருடையது.
கே: உங்களுடைய வாக்குமூலத்தின் அடிப்படையில், 2006ஆம் ஆண்டு இந்த ஆயுதம் எங்கு இருந்தது?
2006.10.07அன்று, 149 துப்பாக்கிகளுடன், கிரிந்தலே இராணுவ முகாமில் இருந்தது.
கே: அந்தத் துப்பாக்கியின் இலக்கம் விசாரணையில் பெறப்பட்டதா?
தனது புத்தகத்தைப் பார்த்துக் கூறவா எனக் கேட்ட அவர், 1259799 என்றார்.
கே: அந்த இலக்கம் எப்போது கிடைத்தது?
அரசாங்க இரசாயனப் பகுப்பாய்வுத் திணைக்களத்தின் விசாரணையிலிருந்து.
கே: அந்தத் துப்பாக்கி, வெளிநாட்டுக்கு அனுப்பப்பட்டதா?
ஆம்.
கே: யாருக்கு?
1259799 என்ற துப்பாக்கியும் கறுப்புப் பை மற்றும் வழக்குப் பொருட்கள், ஸ்கொட்லாண்ட் யார்ட் பொலிஸாருக்கு அனுப்பப்பட்டன.
கே: அவை, திரும்ப எப்போது கிடைத்தன?
2007ஆம் ஆண்டின் இறுதியில்.
கே: இந்தத் துப்பாக்கி தொடர்பில், சம்மி, ஜயந்த குமார குணரத்ன ஆகியோரிடம் வாக்குமூலங்கள் பெறப்பட்டனவா?
ஆம்.
அதன்பின்னர், 2ஆவது பிரதிவாதி சார்பில் ஆஜரான சட்டத்தரணி யுரான் லியனகே, 3,4 ஆவது பிரதிவாதிகள் சார்பில் ஆஜரான சட்டத்தரணி அனுஜ பிரேமரத்தன மற்றும் ஜூரிகள் ஆகியோர் கேள்விகள் இல்லை எனக் கூறியதையடுத்து, 61 ஆவது சாட்சியாளரான பிரிகேடியர் ஜயந்த குமார குணரத்ன சாட்சியமளிக்க அழைக்கப்பட்டார்.
அவரிடம், அரச சட்டத்தரணி சுஹர்ஷி ஹேரத், கேட்ட கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார்.
2006.10.4அன்று, தான் கடமையாற்றிய, இராணுவத்தின் மத்திய ஆயுதக் களஞ்சியசாலையிலிருந்து, இராணுவத்தின் 3ஆவது புலனாய்வுப் பிரிவுக்கு ஆயுதங்கள் வழங்கப்பட்டதாகவும் அதில் 150 ரி 56 ரகத் துப்பாக்கிகள் இருந்ததாகவும் குறிப்பிட்ட அவர், தமக்குக் கிடைத்த கோரிக்கைக்கு அமைய இராணுவத்தின் நட்பு அணியினருக்குப் பகிர்ந்தளிக்கவே அவை வழங்கப்பட்டதாகத் தெரிவித்த அவர், இராணுவ புலனாய்வுப் பிரிவின் மத்திய நிலையங்கள், யாழ்ப்பாணம், வவுனியா மற்றும் மின்னேரியா ஆகிய இடங்களில் உள்ளதாகவும் கூறினார்.
2006.10.04 எனக் குறிப்பிடப்பட்டபோதும் இராணுவத்தின் சமிக்ஞைப் பிரிவினரால், 2006.10.07எனக் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் எனினும், ஆவணத்தில் 2007.02.07எனக் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் கேள்வி எழுப்பப்பட்டதற்கு, அது தொடர்பான ஆவணம் பிந்தியே தயாரிக்கப்பட்டதாகவும், 2011ஆம் ஆண்டுக்குப் பின்னர், இவ்வாறான பரிமாற்றங்கள் இடம்பெறும் போது ஏழு நாட்களுக்குள் ஆவணம் சமர்ப்பிக்கப்படவேண்டும் என, அறிவிக்கப்பட்டுள்ளது என அவர் கூறினார்.
குறித்த 150 துப்பாக்கிகளில், இந்த வழக்குடன் சம்பந்தப்பட்ட 1259799 என்ற தொடர் இலக்கமுடைய துப்பாக்கியும் இருந்ததா என, கேள்வி கேட்கப்பட்டபோது, ஆம் என அவர் பதிலளித்ததுடன், அந்த ஆவணத்தில் மேற்குறித்த தொடரிலக்கம் உள்ளதாகவும் தெரிவித்தார்.
2006.10.07அன்று நட்பு அணிக்கு வழங்குவதற்காக ஆயுதங்களைக் கொடுத்தீர்களா என வினவியதற்கு ஆம் என அவர் பதிலளித்தார்.
யுத்த நிறுத்தம் தொடர்பில் வினவப்பட்டபோது, 2002ஆம் ஆண்டு யுத்த நிறுத்தம் ஆரம்பிக்கப்பட்டதாகவும் 2006ஆம் ஆண்டு மாவிலாறில் இடம்பெற்ற மோதலுக்குப் பின்னரே யுத்தம் தொடர்ந்ததாவும் அவர் கூறினார்.
யுத்தநிறுத்த காலப்பகுதியில், நோர்வே, டென்மார்க், பின்லாந்து மற்றும் சுவிற்ஸர்லாந்து ஆகிய நாடுகள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்ததாகவும் கூறிய அவர், நோர்வே அதற்குத் தலைமைத்துவம் வகித்ததாகத் தெரிவித்தார்.
அந்தக் காலப்பகுதியிலேயே எல்.ரீ.ரீ.ஈ அமைப்பிலிருந்து கருணா அணி பிரிந்திருந்தது, அதன் பின்னர் எல்.ரீ.ரீ.ஈ அமைப்புக்கும் கருணா அணிக்கு இடையிலேயே மோதல் காணப்பட்டதாகவும் அப்போதே யுத்தநிறுத்தம் மீறப்பட்டது எனக் கூறினார்.
அதன்பின்னர், 2ஆவது பிரதிவாதி சார்பில் ஆஜரான சட்டத்தரணி யுரான் லியனகே கேள்விகள் இல்லை எனக் கூறியதையடுத்து, 3,4 ஆவது பிரதிவாதிகள் சார்பில் ஆஜரான சட்டத்தரணி அனுஜ பிரேமரத்தன, கேள்விகளைக் கேட்க ஆரம்பித்தார்.
கே: 1259799 என்ற தொடர் இலக்கமுடைய துப்பாக்கி, நட்பு அணிக்குப் போயுள்ளதா?
ஆம்.
கே: 2006.10.07 அன்றா, அவை வழங்கப்பட்டுள்ளன?
ஆம்.
அவரது கேள்வியையடுத்து, ஜூரிகளிடம் கேள்விகள் உள்ளனவா என, நீதிபதி கேட்டதற்கு, அவர்கள் இல்லை என பதிலளித்தனர்.
பின்னர், 31 ஆவது சாட்சியாளரான மேஜர் ஜெனரல் லியனகே அழைக்கப்பட்டார். அவரிடம், அரச சட்டத்தரணி சுஹர்ஷி ஹேரத், கேள்விகளைக் கேட்கத் தொடங்கினார்.
2010.07.03இலிருந்து தான் ஓய்வு பெற்றதாகவும் 2006.01.31 முதல் மேஜர் ஜெனரலாகப் பணியாற்றியதாகவும் தெரிவித்த அவர், 2006ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதத்திலிருந்து புலனாய்வுப்பிரிவின் அத்தியேட்கராகப் பணியாற்றியதாகத் தெரிவித்தார்.
புலனாய்வுப் பிரிவின் பணி என்ன என வினவப்பட்டபோது, யுத்தம் இடம்பெற்ற காலத்தில், எல்.ரீ.ரீ.ஈனரின் திட்டங்கள் தொடர்பான தகவல்களை அறிந்து அவற்றை முறியடிப்பதே தமது பணியாக இருந்ததாகத் தெரிவித்தார்.
இராணுவப் புலனாய்வுப் பிரிவினால், 2006ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதத்தில், ஆயுதங்கள் வழங்கப்பட்டனவா எனக் கேட்கப்பட்டதற்கு, ஆம் எனப் பதிலளித்த அவர், எல்.ரீ.ரீ.ஈயிலிருந்து பிரிந்த பிரிவுக்கே ஆயுதங்கள் வழங்கப்பட்டதாகத் தெரிவித்தார்.
என்ன ஆயுதக்குழுக்கள் என வினவிய போது, கருணா அணியினருக்கும் எல்.ரீ.ரீ.ஈக்கு எதிரான அணியினருக்குமே ஆயுதங்கள் வழங்கப்பட்டதாகக் கூறினார்.
இந்த வழக்குடன் தொடர்புடைய 1259799என்ற தொடர் இலக்கமுடைய துப்பாக்கியும் அந்த ஆயுதங்களில் அடங்குகின்றதா எனக் கேட்டகப்பட்டபோது, ஆம் எனக் கூறிய அவர், 2006.10.06அன்று தமக்கு ஆயுதங்கள் வழங்கப்பட்டதாகவும், அவற்றை இராணுவ நட்பு அணியினருக்கு வழங்கியதாகவும் தெரிவித்தார்.
இராணுவ நட்பு அணி என்று குறிப்பிடுவது எதை, 2006ஆம் ஆண்டா ஆயுதங்கள் வழங்கப்பட்டன என அரசசட்டத்தரணி கேட்டபோது, பிரதானமாக கருணா அணி எனவும் அந்த ஆயுதங்கள், 2006ஆம் ஆண்டு ஒக்டோபர் 7 அல்லது 8ஆம் திகதிகளில் அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.
2ஆவது பிரதிவாதி சார்பில் ஆஜரான சட்டத்தரணி யுரான் லியனகே கேள்விகள் இல்லை எனக் கூறியதையடுத்து, 3,4 ஆவது பிரதிவாதிகள் சார்பில் ஆஜரான சட்டத்தரணி அனுஜ பிரேமரத்தனவும் ஜூரிகளும்; கேள்விகள் இல்லை என்றனர்.
சாட்சியங்கள் நிறைவடைந்ததன் பின்னர், இந்த வழக்கு, நீதவான் நீதிமன்றத்திலிருந்து மேல் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்ட பின்னர் உள்ள ஆவணங்கள் சரியாக உள்ளனவா என, தோலுக்கு முதலி அழைக்கப்பட்டு, அவரிடம் வாக்குமூலம் பெறப்பட்டது.
எதிராளிகளாக குறிப்பிடப்பட்டுள்ளவர்களின் பெயர்களைக் குறிப்பிட்ட அவர், 1ஆவது எதிராளி - சாமி என்றழைக்கப்படும் பழனிச்சாமி சுரேஷ், 2ஆவது எதிராளி - பிரசாத் ஹெட்டியாராச்சி, 3ஆவது எதிராளி - காமினி செனவிரத்ன, 4ஆவது எதிராளி - பிரதீப் சமிந்த , 5ஆவது எதிராளி - சரண் என்றழைக்கப்படும் விவேகானந்தன் சிவகாந்தன் 6ஆவது எதிராளி - பபியன் ரொய்ஸ்டன் டுஸைன், 9ஆவது எதிராளி - நிசங்க சம்பத் ஆகியோர் என பெயர் குறிப்பிடப்பட்டிருந்தாகத் தெரிவித்தார்.
1ஆவது சாட்சியாளராக மனம்பேரிகே சம்பத் பிருதிவிராஜின் பெயர் குறிப்பிடப்பட்டிருப்பதாகத் தெரிவித்த அவர், குறுக்கு விசாரணை நடத்தப்பட்டுள்ளதாகவும் 2,3,4 ஆகிய பிரதிவாதிகள் மன்றில் ஆஜராகுவதாவும் தெரிவித்ததையடுத்து, அவரிடம் விசாரணைகள் நிறைவு பெற்றன.
1, 4, 5, 10, 19, 31, 16, 17,18, 27, 36, 38, 41, 42, 51, 55, 59, 63, 65, 67, 68, 62, 61, 58 ஆகிய சாட்சியாளர்களிடமும் தோலுக்கு முதலியிடமும் சாட்சியம் பெறப்பட்டுள்ளதாகவும் தெரிவித்த அரச சட்டத்தரணி, 1 தொடக்கம் 35 வரையுள்ள சாட்சி இலக்கங்களில் வழக்குப் பொருட்களும் அடங்குவதாகத் தெரிவத்தார்.
சாட்சியங்கள் நிறைவு பெற்றுள்ளதையடுத்து, பிரதிவாதிகளின் சாட்சியங்கள் பதிவுசெய்யப்படும் என உத்தரவிட்ட நீதிபதி, பிரதிவாதிகள் கூண்டிலிருந்து பிரதிவாதிகள் சாட்சியமளித்தால், அவர்களிடம் குறுக்குக் கேள்விகள் கேட்கப்பட மாட்டாது எனவும், அவர்கள் சாட்சியாளர் கூண்டிலிருந்து சாட்சியமளித்தால், குறுக்குக் கேள்விகள் கேட்கப்படும் எனவும் அறிவித்தார்.
இதன்போது எழுந்த, 2ஆவது பிரதிவாதி சார்பில் ஆஜரான சட்டத்தரணி யுரான் லியனகே, இரண்டாவது பிரதிவாதி, பிரதிவாதிகள் கூண்டிலிருந்து பிரதிவாதிகள் சாட்சியமளிப்பார் எனக் கூறினார்.
3,4 ஆவது பிரதிவாதிகள் சார்பில் ஆஜரான சட்டத்தரணி அனுஜ பிரேமரத்தனவும் பிரதிவாதிகள் கூண்டிலிருந்தே பிரதிவாதிகள் சாட்சியமளிப்பர் என அறிவித்ததோடு, அரச புலனாய்வு சேவையின் அத்தியட்சகரான நிலந்த ஜயரத்ன தமது தரப்பு சாட்சியாளராக வருவார் எனவும் மன்றின் கவனத்துக்குக் கொண்டுவந்தார்.
இதனையடுத்து வழக்கு விசாரணைகள் நிறைவுபெற்றதோடு, வழக்கு விசாரணைகளை, இன்று வியாழக்கிழமை (22) வரை, நீதிபதி ஒத்திவைத்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
6 hours ago
6 hours ago