Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 05, திங்கட்கிழமை
Thipaan / 2016 டிசெம்பர் 15 , மு.ப. 09:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
பேரின்பராஜா திபான்
கருணா குழுவின் செயலாளராக இருந்த இனியபாரதியின் மனைவியுடன், அரச புலனாய்வு சேவையின் முன்னாள் உத்தியோகத்தரான லியனாராச்சிகே அபேரத்னவுக்கு (16ஆவது சாட்சியாளர்) தகாத உறவு இருப்பது தொடர்பான குற்றச்சாட்டு விசாரிக்கப்பட்டு, நிரூபிக்கப்பட்டது. இதுவும் அவர், புலனாய்வு சேவையிலிருந்து விலக்கப்படுவதற்கு காரணமாகும் என, 63 ஆவது சாட்சியாளரும் அரச புலனாய்வு சேவையின் உத்தியோகத்தருமான கெலும் திஸாநாக்க, கொழும்பு மேல் நீதிமன்றத்தில், நேற்று (14) சாட்சியமளித்தார்.
3,4ஆம் பிரதிவாதிகள் சார்பில் ஆஜரான சட்டத்தரணி அனுஜ பிரேமரத்னவின் குறுக்கு விசாரணையின் போதே, அவர் மேற்கண்டவாறு சாட்சியமளித்தார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எம்.பியாக இருந்த நடராஜா ரவிராஜ், 2006.11.10அன்று படுகொலை செய்யப்பட்டமை தொடர்பான வழக்கு விசாரணையின் நேற்றைய அமர்வு, கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மணிலால் வைத்தியதிலக தலைமையில், சிங்கள ஜூரிகள் எழுவர் அடங்கிய விசேட ஜூரி சபை முன்னிலையில், பிற்பகல் 2.35க்கு ஆரம்பிக்கப்பட்டது.
இதன்போது, சிரேஸ்ட பிரதி சொலிசிட்டர் ஜெனரல் ரோஹந்த அபேசூரிய கேள்விகளைக் கேட்கத் தொடங்கினார்.
நீங்கள், கடந்த சாட்சியத்தின் போது, கடற்படை அதிகாரிகள் 15 பேர், அரச புலனாய்வு சேவையில் இணைத்துக்கொள்ளப்பட்டனர் என்றும் இதில் சிரேஷ்ட அதிகாரி எம்.எல்.ஏ.டி.சில்வா உட்பட 15 பேர் இணைந்திருந்ததாகவும் சாட்சியளித்திருந்தீர்கள்?
ஆம்.
கே: ஹெட்டியாராச்சி என்ற அதிகாரி, எம்.எல்.ஏ.டி.சில்வா என்பர் அரச புலனாய்வு சேவையிலிருந்து மாற்றப்பட்டதன் பின்னர் அவரது இடத்துக்கு இணைக்கப்பட்டதாகக் கூறியிருந்தீர்கள்?
ஆம்.
கே: உங்களுக்குத் தெரியாமல், ஒருவர் இணையவோ அல்லது மாற்றம் பெறவோ முடியுமா?
அதிகாரி என்ற அடிப்படையில் எனக்குத் தெரியப்படுத்தப்படும்.
கே: அரச புலனாய்வு சேவை ஆவணத்தின் மூலமா?
ஆம்.
கே: அதன்படி, எம்.எல்.ஏ.டி.சில்வா என்ற லெப்டினன், அரச புலனாய்வு சேவையிலிருந்து எப்போது மாறினார்?
2006.10.26
கே: அரச புலனாய்வு சேவையில் அவரது இடத்துக்கு நியமிக்கப்பட்டவர் யார்?
எச்.ஏ.பி.சி.ஹெட்டியாராச்சி
கே: எப்போது?
2006.10.26
கே: மாற்றம் தொடர்பில், கடற்படைத் தளபதிக்கு கடிதம் அனுப்பப்பட்டதா?
ஆம்.
கே: அந்தக்கடிதத்தில் என்ன குறிப்பிடப்பட்டிருந்தது?
சில்வா மாற்றம் பெற்றுச் செல்வதால், அந்த இடத்துக்கு இன்னோர் அதிகாரியை நியமிக்குமாறு குறிப்பிடப்பட்டிருந்தது.
கே: அந்தக் கடிதத்தின் பிரதி உள்ளதா?
ஆம்.
கே: அப்போது அதில் யார் கையொப்பமிட்டிருந்தார்?
பிரதிப் பொலிஸ்மா அதிபர் கீர்த்தி கஜநாயக்க
கே: அப்போது, கடற்படைத் தளபதியாக யார் இருந்தார்?
வைஸ் அட்மிரல் வசந்த கருணாகொட (அப்போது எழுந்த, 3,4ஆம் பிரதிவாதிகள் சார்பில் ஆஜரான சட்டத்தரணி அனுஜ பிரேமரத்ன, ஆவணமொன்றில் கையெழுத்து இல்லை எனச் சுட்டிக்காட்டினார்)
கே: முதலில் கூறிய அதிகாரிகள் 15 தொடர்பான ஆவணங்கள், அரச புலனாய்வுச் சேவையில் உள்ளனவா?
ஆம்.
கே: உங்களுடைய புலனாய்வுப் பிரிவில் தனிப்பட்ட ஆவணத்தின் பிரதி உள்ளதா?
ஆம்.
கே: என்ன திகதியிடப்பட்டுள்ளது?
2005.06.02
கே: 2005.06.02 ஆவணத்தில், senior non commissioned officer என்று இருந்தது அதில் உள்ள பெயர்?
P.O கே.ரி.சி. சமிந்த (XS 10625)
எச்.இ.எம்.ஜே.சி.பண்டார (XS 29205)
கே: P.O என்றால் என்ன அர்த்தம்?
petty officer (சிறு அலுவலகர்)
கே: கடந்த சாட்சியத்தில், பி.ஜி.ஜி செனவிரத்ன என்பவர், அரச புலனாய்வு சேவையில் தொடர்புபட்டுள்ளதாகக் கூறினீர்கள்?
ஆம்.
கே: அதிகாரியொருவர் இடமாற்றம் பெற்றுச் சென்றபின், அவ்விடத்துக்கு நியமிக்கப்பட்டாரா?
ஆம்.
கே: பி.ஜி.ஜி.செனவிரத்ன என்ற அதிகாரி, அரச புலனாய்வு சேவையில் இணைக்கப்பட்டது எப்போது?
2005.7.6
கே: அவர், அரச புலனாய்வு சேவையில் இணைக்கப்பட்டபோது, அடையாள அட்டை வழங்கப்பட்டதா?
ஆம்.
கே: அதிகாரிகள் விலகும் போது அடையாள அட்டையை என்ன செய்வீர்கள்?
மீளப்பெற்று, அழித்துவிடுவோம்.
கே: ஏன் அழிப்பீர்கள்?
அதனை வேறுயாரும் பயன்படுத்த முடியாது என்பதால்.
கே: அதனால் தான் அழிப்பீர்களா?
ஆம்.
கே: அதேபோல், நீங்கள் கூறிய, பெரஹரா மாவத்தையிலுள்ள கட்டடம் அரச புலனாய்வு சேவைக்குச் சொந்தமானதா?
ஆம்.
கே: அதற்கு வரி கட்டியது யார்?
பாதுகாப்பு அமைச்சு.
கே: அரச புலனாய்வு சேவை எந்த அமைச்சின் கீழ் இயங்கியது?
பாதுகாப்பு அமைச்சின் கீழ்.
இதனையடுத்து, தனது கேள்விகள் நிறைவடைந்தாக, சிரேஸ்ட பிரதி சொலிசிட்டர் ஜெனரல் ரோஹந்த அபேசூரிய, நீதிபதியின் கவனத்துக்குக் கொண்டுவந்ததையடுத்து, 2ஆவது பிரதிவாதியின் சார்பில் ஆஜரான சட்டத்தரணி ரசிக்க பாலசூரிய குறுக்குக் கேள்விகளைக் கேட்கத் தொடங்கினார்.
கே: நீங்கள் கூறினீர்கள் 1986ஆம் ஆண்டு பொலிஸில் இணைந்ததாக, 2004இல் அரச புலனாய்வு சேவையில் இணைந்ததாக?
ஆம்.
கே: என்னவாக இணைந்தீர்கள்?
பொலிஸ் அதிகாரியாக.
கே: அரச புலனாய்வு சேவையில் 2004இல் இணைந்தாக் கூறினீர்கள்?
ஆம்.
கே: அப்போது யுத்தம் நிலவி, யுத்தநிறுத்தம் காணப்பட்ட காலம். அப்போது பாதுகாப்புப் படையினரின் தேவை, அரச புலனாய்வு சேவைக்குத் தேவைப்பட்டது?
ஆம்.
யுத்தகாலத்தில், கொழும்பின் பல பகுதிகளில் குண்டு வெடிப்புகள் இடம்பெற்றன. அப்பாவிப் பொதுமக்கள் கொல்லப்பட்டனர். அதில் சிறுவர்களும் அடங்குகின்றனர். 2006ஆம் ஆண்டு கட்டுநாயக்க விமான நிலையத்தின் மீது புலிகளால் நடத்தப்பட்ட தாக்குதலில் விமானங்கள் நாசமாக்கப்பட்டன. அதற்கு முன்னர், 1996ஆம் ஆண்டு கொழும்பு துறைமுகத்தில் தற்கொலைத் தாக்குதல் நடத்தப்பட்டது என வினவியதற்கு சாட்சியாளர் ஆம் என பதிலளித்தார்.
அதன்பின்னர், முப்படைகளையும் சேர்ந்த அதிகாரிகள், அரச புலனாய்வுப் பிரிவில் சேர்க்கப்பட்டனர். துறைமுக தாக்குதலின் பின்னர் கடற்படை அதிகாரிகளை அரச புலனாய்வு சேவையில் இணைக்கப்பட்டதாக சாட்சியம் வழங்கினீர்கள். ஏன் கடற்படையினர் இணைக்கப்பட்டனர்?
பொலிஸ் அதிகாரிகளை துறைமுக கடமைகளில் ஈடுபடுத்துவது, சிரமமானது என்பதால், கடற்படை அதிகாரிகளை புலனாய்வு சேவையில் இணைத்தோம்.
கே: சில்வா என்பவர் இடமாற்றம் பெற்றுச் சென்ற பின்னர் வேறு அதிகாரி வந்ததாகக் கூறினீர்கள், எப்போது?
ஆம், 2006.10.26
கே: சாட்சியத்தின் போது கூறிய அவரின் பெயர்?
எச்.ஏ.பி.சி. ஹெட்டியாராச்சி
கே: அந்த ஆவணத்தின் படி, அவருடைய பதவி?
பராக்கிரம கடற்படை பிரிவில் விசேட அதிகாரி
அதன்பின்னர், 3,4ஆம் பிரதிவாதிகள் சார்பில் ஆஜரான சட்டத்தரணி அனுஜ பிரேமரத்ன கேள்விகளைக் கேட்கத் தொடங்கினார்.
கே: 1986 இல் பொலிஸில் சேர்ந்ததாகக் கூறினீர்கள், பாடசாலைக் கல்வி முடிந்த பின்னரா சேர்ந்தீர்கள்?
ஆம்.
கே: சகோதர, சகோதரிகள் இருக்கின்றனரா?
ஆம், 3பேர், ஒருவர் இறந்து விட்டார்.
கே: சகோதரர் இறந்ததாகக் கூறினீர்கள், என்னவாக இருந்தார்?
பொலிஸ் அதிகாரியாக,
கே: எப்போது இறந்தார்?
2009 டிசெம்பர் 09 (சிறிது நேரத்தின் பின்னர் வேறொரு ஆண்டைக் கூறினார்)
இதன் பின்னர் சட்டத்தரணி அனுஜ, கடந்த 9ஆம் திகதி சாட்சியமளிக்கத் தொடங்கினீர்கள், அது உங்களுடைய சகோதரர் இறந்த தினம். (இதன்போது குறுக்கிட்ட பிரதி சொலிசிட்டர் ஜெனரல் வழக்குக்குச் சம்பந்தமில்லாத கேள்விகள் கேட்கப்படுவதாக நீதிபதியின் கவனத்துக்குக் கொண்டுவந்தார். 1ஆவது சாட்சியாளர், அவரது பிறந்த தினத்தின் போது சாட்சியளித்ததாவும் அதன் போது கரிசனை கொள்ளப்படவில்லை எனவும் கூறினார்.)
கே: துறைமுக தாக்குதலின் பின்னர் கடற்படையினர் சேர்க்கப்பட்டனர், விமான நிலையத் தாக்குதலின் பின்னர் விமானப் படையினர் சேர்க்கப்பட்டனர்?
ஆம்.
கே: அபேரத்ன என்பவரை தெரியும் என கூறியுள்ளீர்கள்?
ஆம்.
கே: எல்.ரீ.ரீ.ஈயிலிந்து கருணா குழுவினர் பிரிந்திருந்தனர்?
ஆம்.
கே: கருணா அம்மான் என்ற விநாயகமூர்த்தி முரளிதரனின் செயலாளராக இனியபாரதி இருந்தார்?
ஆம்.
கே: அபேரத்ன அவர்களிடமிருந்து தகவல் பெற்று உங்களுக்கு வழங்கினார்?
ஆம்.
கே: அபேரத்னவை அரச புலனாய்வு சேவையிலிருந்து நீக்கப்பட்டார்?
ஆம்.
கே: அதற்குச் சில காரணங்கள் இருக்கின்றன?
2 காரணங்கள்
கே: அதில் ஒன்றுதான், இனியபாரதியின் மனைவிக்கும் அபேரத்னவுக்கும் தகாத உறவு இருந்தமை?
கருணா குழுவின் செயலாளராக இருந்த இனியபாரதியின் மனைவியுடன், அரச புலனாய்வு சேவையின் முன்னாள் உத்தியோகத்தரான லியனாராச்சிகே அபேரத்னவுக்கு (16வது சாட்சியாளர்) தகாத உறவு இருப்பது தொடர்பான குற்றச்சாட்டு விசாரிக்கப்பட்டு, நிரூபிக்கப்பட்டது.
கே: அதனால் தான் நீக்கினீர்களா?
அதுமட்டுமின்றி, 2011ஆம் ஆண்டு, கிரிந்திவெலவிலுள்ள காட்சியறையிலிருந்து 22,000 ரூபாய் பெறுமதியான மடிக்கணினியைக் கொள்வனவு செய்திருந்தார். பணம் செலுத்தத் தவறியமையால் பொலிஸாருக்குப் புகார் கொடுக்கப்பட்டு, பொலிஸார் அதைப் பறிமுதல் செய்தனர், அதுவும் காரணம்.
இதன்போது குறுக்கிட்ட பிரதி சொலிசிட்டர் ஜெனரல், இன்னொருவரின் தனிப்பட்ட விடயங்கள் தொடர்பில் கேட்க சட்டத்தில் இடமில்லை என சுட்டிக்காட்டியதையடுத்து, 146 ஆவது பிரிவின் 9ஆம் சரத்தின்படி கேட்கலாம் என அனுஜ பிரேமரத்ன கூறியதுடன், தனது கேள்விகளை நிறைவு செய்தார். இதையடுத்து, பிரதி சொலிசிட்டர் ஜெனரல் நெறிப்படுத்தலில் ஈடுபட்டார்.
கே: குறுக்குக் கேள்வியில் ஆயுதக் குழு அதாவது கருணாகுழு தொடர்பில் கேட்கப்பட்டது, இனியபாரதி தொடர்பிலும் கேட்கப்பட்டது?
ஆம்.
அதன்பின்னர், அடையாள அட்டை தொடர்பில் ஆவணங்கள் உள்ளனவா என எதற்காக வழங்கப்படுகிறது என ஜூரி சபையினர் கேட்டதற்கு, குறித்த பிரவில் பணியாற்றுகிறார் என்பதை உறுதிப்படுத்த என, சாட்சியாளர் கூறினார்.
இதனையடுத்து, வழக்கை இன்று வியாழக்கிழமைக்கு ஒத்திவைத்த நீதிபதி, 38,41,42,52,65ஆம் சாட்சியாளர்களை மன்றில் ஆஜராகுமாறு உத்தரவிட்டார்.
இதேவேளை, கடந்த வெள்ளிக்கிழமை (2016.12.09) ரவிராஜ் கொலை வழக்கின் சாட்சியாளர்களுக்கு குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் அச்சுறுத்தல் விடுக்கப்படுவதாக, 3,4ஆம் பிரதிவாதிகள் சார்பில் ஆஜரான சட்டத்தரணி அனுஜ பிரேமரத்ன, நீதிபதியின் கவனத்துக்குக் கொண்டுவந்ததையடுத்து, சாட்சியாளர்களை அச்சுறுத்துவது நீதிமன்றத்தை அவமதிப்பதாகக் கருதப்படுமெனவும் அச்சுறுத்துபவர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.
ஜூரிகள் நீதிமன்றத்தை விட்டு வெளியேறியதன் பின்னர் 3,4ஆம் பிரதிவாதிகள் சார்பில் ஆஜரான சட்டத்தரணி அனுஜ பிரேமரத்ன, சாட்சியங்களுக்கு எதிராக அச்சுறுத்தல் விடுக்கப்படுவதாகவும் அது, பிரதிவாதிகள் தரப்புக்கு பாதகமாக அமையும் எனவும் நீதிபதிக்கு சுட்டிக்காட்டினார்.
4 ஆவது சாட்சியாளரான, வினோத் ஜோசப் அஞ்சலோ ரோய் (வயது 38) என்பவரே, அச்சுறுத்தப்பட்டதாகவும், புகைப்படமொன்றைக் காண்பித்து, அந்த நபரை நீதிமன்றத்தில் அடையாளம் காட்டுமாறு, அவர் வற்புறுத்தப்பட்டதாகவும் தெரிவித்தார். பிரதிவாதிகள் சார்பில் ஆஜரான சட்டத்தரணியின் கருத்தை கவனத்தில் எடுத்த நீதிபதி, சாட்சியாளரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும் குற்றப்புலனாய்வுப் பிரிவினர், அவர்களை அச்சுறுத்தக் கூடாது எனவும் அவ்வாறான செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டால், அவர்களுக் கெதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
6 hours ago
7 hours ago