Thipaan / 2016 நவம்பர் 23 , பி.ப. 11:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
பேரின்பராஜா திபான்
“‘எல்.ரீ.ரீ.ஈ தலைவரொருவர் இருக்கிறார். அவரை, நாளை கொல்லப்போகிறோம். போவோமா?’ என, கருணா அமைப்பைச் சேர்ந்த சாமி என்பவர் கேட்டார். அதற்கு நான், சரி எனக் கூறினேன்” என, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தபோது, படுகொலை செய்யப்பட்ட நடராஜா ரவிராஜ் கொலை வழக்கின் முதலாவது சாட்சியாளரான பிருதிவிராஜ் மனம்பேரி, நேற்றுப் புதன்கிழமை (23), கொழும்பு மேல் நீதிமன்றத்தில் சாட்சியமளித்தார்.
அதுமட்டுமின்றி, இந்த வழக்கின் சந்தேகநபரான சாமி என்றழைக்கப்படும் பழனிச்சாமி சுரேஷை, கொழும்பு கங்காராமை, லொன்றிவத்தை பகுதியில் வைத்து, ரவிராஜ் எம்.பி கொல்லப்படுவதற்கு முந்தைய தினம் சந்தித்தபோது, அவருடன் இருந்த கடற்படை வீரர்கள் மூவரையும் மன்றுக்கு அடையாளம் காட்டினார்.
த.தே.கூ எம்.பியான நடராஜா ரவிராஜ், படுகொலை செய்யப்பட்டமை தொடர்பான வழக்கு, கொழும்பு மேல்நீதிமன்ற நீதிபதி மணிலால் வைத்தியதிலக தலைமையில், சிங்கள ஜூரிகள் எழுவர் அடங்கிய ஜூரிகள் சபை முன்னிலையில், நேற்று முற்பகல் 11.17 மணிக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது, இந்த வழக்கின் முதலாவது சந்தேகநபராக இருந்து, அரச தரப்புச் சாட்சியாக மாறிய பிருதிவிராஜ் மனம்பேரி சாட்சியமளிக்க, சாட்சிக் கூண்டில் ஏற்றப்பட்டார்.
அவரிடம், சிரேஷ்ட பிரதி சொலிசிட்டர் ஜெனரலான ரோஹந்த அபேசூரிய கேள்வி கேட்டபோதே, அவர் மேற்கண்ட விடயத்தைக் கூறியதோடு, பிரதி சொலிசிட்டர் ஜெனரலின் கேள்விகளுக்குப் பதிளித்து, சாட்சியம் வழங்கினார்.
அவர் சாட்சியமளித்த போது தெரிவித்த விடயங்களாவன,
“கிழக்கு மாகாணத்தில், பொலிஸ் அதிகாரியாக நான் பணியாற்றியபோது, எல்.ரீ.ரீ.ஈ அமைப்பிலிருந்து பிரிந்த கருணா குழுவினர் எங்களுடன் சேர்ந்து செயற்பட்டனர். இதன்போதே சாமி என்றழைக்கப்படும் பழனிச்சாமி சுரேஷுடன் பழக்கம் ஏற்பட்டது.
அவர்களுடன் இணைந்து, எல்.ரீ.ரீ.ஈ அமைப்பின் முகாமொன்றைத் தாக்க முயன்றபோது, விசேட அதிரடிப்படையினர் எங்களைத் தடுத்தனர். அதனையடுத்து, ஜனாதிபதி பாதுகாப்புப் பிரிவுக்கு நான் மாற்றப்பட்டேன்.
நான், கொழும்பில் பணியாற்றிக்கொண்டிருந்த 2006ஆம் ஆண்டு காலப்பகுதியில், கருணா குழுவைச் சேர்ந்த சாமி என்பவர், கொட்டாஞ்சேனைப் பகுதியிலேயே தங்கியிருந்தார். 2006.11.09 அன்று மாலை 4.30 மணியளவில், சாமியிடமிருந்து கிடைத்த தொலைபேசி அழைப்பின் பின்னர், கங்காராமை, லொன்றிவத்தை பகுதியிலுள்ள கட்டடத்தில் அவரைச் சந்தித்தேன்.
அங்கேயே, கடற்படை அதிகாரிகளான பிரசாத் ஹெட்டியாராச்சி, செனவிரத்ன, வஜிர என்ற கடற்படை அதிகாரிகளுடன் பழக்கம் ஏற்பட்டது. அதற்கு முன்னரும், அப்பகுதியில் வைத்து அவர்களைச் சந்தித்துள்ளேன்.
“எல்.ரீ.ரீ.ஈ தலைவரொருவர் இருக்கிறார். அவரை, நாளை கொல்லப்போகிறோம். போவோமா?” என, சாமி கேட்டார். நானும் சரி என்றேன். அன்றையதினம், தனது மோட்டார் சைக்கிளையும் தலைக்கவசங்கள் இரண்டையும் என்னிடம் தந்த சாமி, நாளை (2006.11.10) காலை 6 மணிக்கு பொரளை கனத்தை மயானத்துக்கு அருகில் வருமாறு என்னிடம் கூறினார். நானும், அந்த இடத்துக்குச் சென்றேன்” எனச் சாட்சியமளித்தார்.
அத்துடன், சாட்சியமளிப்பு நிறுத்தப்பட்டது. முதலாவது சந்தேகநபரின் சாட்சியமளிப்பு, இன்றும் தொடரவுள்ள நிலையில், வழக்கு விசாரணையை, இன்று காலை 10.30க்கு, நீதிபதி ஒத்திவைத்தார்.
3 minute ago
2 hours ago
6 hours ago
02 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 minute ago
2 hours ago
6 hours ago
02 Nov 2025