2025 மே 05, திங்கட்கிழமை

‘ரணவிருவை கொல்ல மாட்டேன்’

Thipaan   / 2016 டிசெம்பர் 23 , மு.ப. 03:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

பேரின்பராஜா திபான் 

“ரவிராஜ் எம்.பி மற்றும் அவரின் பாதுகாப்பு உத்தியோகத்தரின் படுகொலை தொடர்பில், எனக்கும் கடற்படைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அதுமட்டுமின்றி, பாதுகாப்பு உத்தியோகத்தரொருவரை (ரணவிரு) நான் கொல்லவும் மாட்டேன்” என, 3ஆவது பிரதிவாதியான காமினி செனவிரத்ன, கொழும்பு மேல் நீதிமன்றத்தில், நேற்று (22) சாட்சியமளித்தார். 

முறைப்பாட்டாளர்களின் சாட்சியங்கள் அனைத்தும், புதன்கிழமையுடன் (21) நிறைவடைந்ததையடுத்து, பிரதிவாதிகள், நேற்று சாட்சியமளித்தனர். பிரதிவாதிகள் கூண்டிலிருந்தவாறே அவர்கள் மூவரும் சாட்சியமளித்ததுடன், 2ஆவது பிரதிவாதியான பிரதீப் ஹெட்டியாராச்சி அழுதுகொண்டே சாட்சியமளித்தார். 

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எம்.பியாக இருந்த நடராஜா ரவிராஜ், 2006.11.10அன்று படுகொலை செய்யப்பட்டமை தொடர்பான வழக்கு விசாரணையின் நேற்றைய அமர்வு, கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மணிலால் வைத்தியதிலக தலைமையில், சிங்கள ஜூரிகள் எழுவர் அடங்கிய விசேட ஜூரி சபை முன்னிலையில், முற்பகல் 10.50க்கு ஆரம்பிக்கப்பட்டது.  

பிரதிவாதிகளின் சாட்சியமளிப்பு இடம்பெறும் என அறிவிக்கப்பட்ட நிலையில், 2ஆவது பிரதிவாதி சார்பில் ஆஜரான சட்டத்தரணி யுரான் லியனகே, இரண்டாவது பிரதிவாதி, பிரதிவாதிகள் கூண்டிலிருந்து சாட்சியமளிப்பார் எனக் கூறியதையடுத்து, 2ஆவது பிரதிவாதியான பிரசாத் ஹெட்டியாராச்சி, பிரதிவாதிகள் கூண்டிலிருந்து சாட்சியமளிக்கத் தொடங்கினார். 

“நான், 1978ஆம் ஆண்டு பிறந்தேன். என்னுடைய தாயும் தந்தையும் உயிருடன் இருக்கின்றனர். தந்தையார், நோயினால் பாதிக்கப்பட்டுள்ளார். 1996ஆம் ஆண்டு கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை எழுதிய பின்னர், பாதுகாப்புப் பிரிவில் இணைய ஆசை இருந்தது. அந்தக் காலத்தில் யுத்தம் நிலவியதால், பலருக்கு பாதுகாப்புப் படைகளில் இணைய விருப்பமில்லை. வீட்டாரின் எதிர்ப்பையும் மீறி, கடற்படையில் இணைந்து கொண்டேன். 

1998.12.15இல், கடற்படை கடெட் அதிகாரியாக இணைந்தேன். திருகோணமலையிலுள்ள கடற்படை பயிற்சி முகாமில் இணைந்து கொண்டேன். அதன்பின்னர் ஒட்டுசுட்டானிலுள்ள கடற்படை முகாமில் பணியாற்ற சந்தர்ப்பம் கிடைத்தது. 

1999.11.11அன்று எல்.ரீ.ரீ.ஈயினரினரால் தாக்குதல் நடத்தப்பட்டது. அந்தக் காலத்தில் எங்களுக்கு வழங்கப்பட்ட பயிற்சிகளைக் கொண்டு உயிர்தப்பினோம். அதன் பின்னர், திருகோணமலையின் மூதூர் பகுதயில் பணியாற்றினேன்.  

அந்தக் காலத்தில் குண்டு வெடிப்புகள் இடம்பெற்றமை அனைவருக்கும் தெரியும். அப்போது, எங்களுடைய பிரிவிலிருந்த ஆறு பேர் கொல்லப்பட்டனர். அந்தக் காலப்பகுதியில், நான் நன்றாக வேலை செய்தேன் என நினைக்கின்றேன். அந்தப் பகுதியில் சிறப்பாக பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டதாக நம்புகிறேன்.  

மூதூரில் கடுமையாக வேலை செய்ததன் பலனாக, 2004ஆம் ஆண்டு அதிகாரியானேன். அதன் பின்னர், யாழ்ப்பாணத்தில் பணியாற்ற வாய்ப்புக் கிடைத்ததுடன், அங்குள்ள தீவுகளில் பாதுகாப்புக் கடமைகளில் ஈடுபட்டேன். பருத்தித்துறை, மாதகல் உட்பட பல பகுதிகளிலும் பணியாற்றியிருந்தேன். 

இராணுவ புலனாய்வில் 5 பாடநெறிகளைக் கற்றதுடன், வெளிநாட்டுப் பாடநெறிகளைக் கற்பதற்கான 4 சந்தர்ப்பங்களும் கிடைத்தன. 

2004-2006ஆம் ஆண்டு வரை வடக்கில் பணியாற்றியதன் பின்னர், கொழும்பு துறை முகத்தில் புலிகளினால் தாக்குதல் நடத்தப்படும் எனக் கிடைத்த தகவலுக்கு அமைய, கொழும்பில் பணியாற்றினேன். 

எனக்கு எதிராக சாட்சியமளித்த சாட்சியாளரான சம்பத் பிருதிவிராஜ் சாட்சியமளித்த போதே எனக்கு விளங்கியது, நான் வேலை செய்த காலத்தில், 16 நாட்களே என்னைச் சந்தித்த அவர், அந்தக் காலப்பகுதிக்குள் 5-6 தடவைகள் என்னைச் சந்தித்துள்ளதாகக் கூறியுள்ளார். இது சாத்தியமில்லாதாகும். இது தவிர, நான் கப்டென் என்றும் கூறியுள்ளார். 

சாதாரண வழக்குகளில் பிணை கிடைக்கும் எனினும், இந்த வழக்கில் பிணை வழங்கப்படாது. பணியாற்றிய காலத்திலும் வீடு செல்ல சந்தர்ப்பம் கிடைத்தது குறைவு. பயங்கரவாதத் தடுப்புச்
சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டிருந்ததால், வழக்கு முடிவதற்கு நிறைய வருடங்கள் எடுக்கும்.  

அதிர்ஷ்ட வசமாக, ஜூரிகள் முன்னிலையில் எங்களுக்கு சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டவர்கள், 10-15 வருடங்களாக தடுப்பில் வைக்கப்பட்டுள்ளனர். எங்களுக்கு ஜூரி சபைமுன் விசாரிக்க சந்தர்ப்பம் கிடைத்துள்ளது.  

எனக்கு 2 பிள்ளைகள் உள்ளனர். பாடசாலை செல்லும் வயதில் உள்ளவர்கள், 2 வருடங்களாக சிறையில் வைக்கப்பட்டுள்ளமை அவர்களுக்குத் தெரியாது. நானும் அவர்களைப் பார்க்கவில்லை. 

இவ்வளவு காலத்துக்கு 2-3 நாட்கள் வீட்டில் இருக்க சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. இந்த வழக்கில் உரிய நீதி கிடைக்கவேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்” என, கண்ணீர் மல்கக் கூறினார். 

3,4 ஆவது பிரதிவாதிகள் சார்பில் ஆஜரான சட்டத்தரணி அனுஜ பிரேமரத்தனவும் பிரதிவாதிகள், பிரதிவாதிகள் கூண்டிலிருந்தே சாட்சியமளிப்பர் என அறிவித்ததையடுத்து, அவர்களும் சாட்சியமளிக்க ஆரம்பித்தனர். 

3ஆவது சாட்சியாளரான காமினி செனவிரத்ன சாட்சியமளித்தார் 

“எனக்கு எதிராகச் சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களை நான் மறுக்கிறேன். நான், காமினி செனவிரத்ன. எனது மனைவி அரச உத்தியோகத்தர். எனக்கு இரண்டு பிள்ளைகள். மகள் 8ஆம் தரத்திலும் மகன் 5ஆம் தரத்திலும் கல்விபயில்கின்றனர். நான், மாவனெல்லையில் படித்து, உயர் படிப்பை திருகோணமலையில் மேற்கொண்டேன்.  

அதன்பின்னர், திருகோணமலையிலுள்ள கடற்படைப் பயிற்சி முகாமில் பயின்றேன். பின்னர் கற்பிட்டியில் கடமையாற்றியபோது, 650 பேருக்கு இராணுவப் பயிற்சி வழங்கப்பட்டது. நீண்ட காலமாக வடக்குக் கிழக்கில் நான் பணியாற்றினேன். திருகோணமலையிலிருந்து காங்கேசன்துறைக்குச் சென்றபோது, கடற்புலிகளின் தாக்குதல் நடத்தப்பட்டது. அதில் சில கடற்படையினர் கொல்லப்பட்டனர். 

யாழ்ப்பாணத்தில், புலனாய்வு அதிகாரியாகப் பணியாற்றியபோது, ரி56 ரகத் துப்பாக்கியைக் கொண்டு செல்ல முடியாது. சிவில் உடையில்தான் செல்ல வேண்டும். 21மாதங்களாக தடுப்பில் வைக்கப்பட்டுள்ளேன். ரவிராஜ் எம்.பி மற்றும் அவரின் பாதுகாப்பு உத்தியோகத்தரின் படுகொலை தொடர்பில் எனக்கும் கடற்படைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அதுமட்டுமின்றி, பாதுகாப்பு உத்தியோகத்தரொருவரை நான் கொல்லவும் மாட்டேன். 21மாதங்களாக என்னிடமிருந்து இரத்தமாதிரி எடுக்கப்பட்டு, மரபணுப் பரிசோதனை மேற்கொள்ளப்படவில்லை. அதனை உடனடியாக எடுக்கவேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன். 

மனம்பேரி என்பர் சொல்வது பொய். அவர் என்னை, நீதவான் நீதிமன்றத்தின் அறை எண் 8இல் வைத்தே கண்டார். சரண், சுரேஷ் என்பவர்களை எனக்குத் தெரியாது. அவர்களது தகவல்கள் எங்களுக்குத் தேவையில்லை. அவர்களுக்கு எல்.ரீ.ரீ.ஈயிடமிருந்து தகவல்கள் கிடைக்காது. எங்களுக்குத் தகவல் தர வேறு நபர்கள் உள்ளனர். 

நான் சுட்டதாகப் பொய்ச்சாட்சி கூறிய மனம்பேரிக்கு எதிராக நிறைய வழக்குகள் உள்ளன. 21வருடங்களாகச் சேவையாற்றும் எனக்கு எதிராக எந்தவித வழக்குகளும் இல்லை. அவருடைய சாட்சியில் எனக்குத் தண்டனை வழங்குவது அசாதாரணமானது” என்றார். 

4ஆவது சாட்சியாளரான பிரதீப் சாமிந்த 

“எனக்கு எதிரான குற்றச்சாட்டுக்களுக்கு நான் ஆட்சேபணை தெரிவிக்கிறேன். நான் பிரதீப் சாமிந்த. எனது பெண் பிள்ளை 9ஆம் தரத்திலும் மகன் 6ஆம் தரத்திலும் கல்வி பயில்கின்றனர். 1986-05-23இல், கடற்படையில் சேர்ந்தேன். காங்கேசன் துறையில் ஒன்றரை வருடங்களும் நெடுந்தீவிலும் பணியாற்றினேன். அதனையடுத்து திருகோணமலையிலும் பணியாற்றினேன். 1998ஆம் ஆண்டு, கடற்படை புலனாய்வுப் பிரிவில் பணியாற்றி, 2005ஆம் ஆண்டு, கடற்படையின் உத்தரவின் பேரில் 15பேருடன் அரச புலனாய்வு சேவையில் இணைந்தேன். 

கொழும்புத் துறைமுகத்தில், புலிகளால் தாக்குதல் நடத்தப்படும் என்ற தகவலுக்கு அமையவே நாங்கள் பணியாற்றினோம். கொழும்பில் பணியாற்றியதால் வீட்டுக்குச் செல்லவும் கிடைக்கவில்லை. 22வருடங்கள் கடமையாற்றியுள்ளேன். 9 பதக்கங்களைப் பெற்றுள்ளேன்.  

எங்களுக்கு எதிராகச் சாட்சியமளித்த சம்பத் பிருதிவிராஜ், நீதவான் நீதிமன்றத்திலேயே எங்களைப் பார்த்துள்ளார். இந்த வழக்கிலிருந்து என்னை முழுமையாக விடுதலை செய்யவேண்டும்” என சாட்சியமளித்தார். 

இதனையடுத்து, பிரதிவாதிகள் சார்பில் ஆஜரான சாட்சியாளரான அரச புலனாய்வு சேவையின் பிரதி பொலிஸ்மா அதிபர் நிலந்த ஜயவர்தன சாட்சியமளிக்க அழைக்கப்பட்டார். 

அரச புலனாய்வுச் சேவையின் தலைமையகம் கொழும்பு 7இலா அமைந்துள்ளது எனக் கேட்டதற்கு ஆம் எனப் பதிலளித்த அவர், அரச புலனாய்வுச் சேவையின் தலைமையகங்கள் எங்கு உள்ளன என வினவியதற்கு, தேசிய பாதுகாப்புக் காரணங்களுக்காக அவற்றைத் தெரிவிக்க முடியாது என்றார். 

தங்களுடைய சேவையின் கீழ் பொலிஸ் கான்ஸ்டபிள்கள் உள்ளார்கள் எனவும் தனது பதவிநிலையின் அடிப்படையில், அவர்கள் இன்னும் சில அதிகாரிகளைக் கடந்தே தன்னிடம் வரவேண்டும் எனவும் கூறினார்.  

அவர்கள் வழங்கும் தகவல்களை ஆய்வுசெய்து, அது புலனாய்வுத் தகவலா இல்லையா எனக் கண்டறியப்பட்டதன் பின்னரே, தாங்கள் அவை தொடர்பில் இறுதி முடிவு எடுப்பதாகவும் தெரிவித்தார். 

டுஸைன் என்பவர், பொலிஸில் சாரதியாகப் பணியாற்றியதாகவும் கூறிய அவர், அபேரத்ன என்பவர் பற்றிய தகவல்களை தெரியாது என்றும் அவர்கள், அரச புலனாய்வு சேவையில் இருந்த காலத்தில், தான் பிரதி அத்தியேட்சகராக இருந்ததாகவும், தனக்கு கீழ் உள்ள அதிகாரிகளே அவர்களிடமிருந்து தகவல் பெற்று தனக்கு வழங்குவார்கள் எனவும் தெரிவித்தார். 

இந்த வழக்குத் தொடர்பில் தான், அதிக அக்கறை செலுத்தவில்லை எனவும் தெரிவித்ததுடன், வழக்கு தொடர்பில் 2015ஆம் ஆண்டு வாக்குமூலம் வழங்கியுள்ளதாகவும் தெரிவித்தார். 

இவர்கள் தொடர்பில், வினவப்படும் என அறிவித்திருந்தால், தான் அதற்குத் தயாராகி வந்திருப்பேன் எனவும் தம்முடைய பிரிவில் பணியாற்றும் கெலும் திஸாநாயக்க என்பவர் சாட்சியமளித்தமை தனக்குத் தெரியும் எனவும் கூறினார். 

அத்துடன், பிரதிவாதிகளின் மனைவியொருவர், தேசிய புலனாய்வு சேவையில் இருப்பதாகவும் அவரை உங்களுக்குத் தெரியுமா என, சிரேஷ்ட பிரதி சொலிசிட்டர் ஜெனரல் ரோஹந்த அபேசூரிய கேள்வியெழுப்பியதற்கு, தனக்கு அதுதொடர்பில் தெரியாது என மறுத்தார். 

‘எச்’ பிரிவு தொடர்பில் வினவியபோதும், பாதுகாப்புக் காரணங்கள் காரணமாக, தனக்கு அதுதொடர்பில் கூற முடியாது என அவர் தெரிவித்ததுடன், பெரஹரா மாவத்ததையில் அரச புலனாயவுச் சேவைக்கு கட்டடம் ஒன்று இருப்பதாகவும் தெரிவித்தார். 

இதன்போது குறுக்கிட்ட சட்டத்தரணி
எம்.ஏ சுமந்திரன், சாட்சியாளர் பொய் கூறுவதாகவும் பாதிக்கப்பட்டவர்கள், சாட்சியாளர்களைப் பாதுகாக்கும் சட்டத்தின் கீழ், பிரதி சொலிசிட்டர் ஜெனரல் ரோஹந்த அபேசூரியவின் அனுமதிக்கிணங்க, சாட்சியாளரைக் குறுக்கு விசாரணைக்கு உட்படுத்த அனுமதிக்கவேண்டும் எனக் கூறினார். 

அதன் போது எழுந்த 3,4 ஆவது பிரதிவாதிகள் சார்பில் ஆஜரான சட்டத்தரணி அனுஜ பிரேமரத்தன, சாட்சியாளரிடம் குறுக்கு விசாரணையில் ஈடுபட முறைப்பாட்டாளர் தவிர ஏனையோருக்கு அனுமதி வழங்கப்படக்கூடாது எனவும், அப்படி வழங்கப்பட்டால், சட்டமா அதிபர் திணைக்களத்துக்கு வழக்கு நடத்த திராணியில்லை என்று நீதிபதி அறிவித்து, பின்னர், சுமந்திரனுக்கு வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என கூறினார். 

அதனையடுத்து, சட்டத்தரணி
எம்.ஏ சுமந்திரனின் கோரிக்கையை நிராகரித்த நீதிபதி, அவ்வாறு குறுக்குக் கேள்வி கேட்க முடியாது என உத்தரவிட்டார். 

தான் சமர்ப்பிப்பு ஒன்றை மேற்கொள்ளவேண்டியுள்ளதாகவும் அதற்கு அனுமதி தருமாறும் சட்டத்தரணி
எம்.ஏ சுமந்திரன் கோரியதற்கு அமைய அவருக்கு அனுமதியளிக்கப்பட்டது. 

அதனையடுத்து, வழக்கில் சாட்சியமளித்த சாட்சியாளர்களின் கோவைகளில், எழுத்து மற்றும் சொற் பிழைகள் திருத்தப்பட்டதுடன், முறைப்பாட்டாளர் மற்றும் பிரதிவாதிகளின் சமர்ப்பிப்புகள், இன்று (23) இடம்பெறும் என அறிவித்த நீதிபதி, வழக்கை இன்றைய தினத்துக்கு ஒத்திவைத்தார். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X