2025 மே 05, திங்கட்கிழமை

ரவிராஜ் எம்.பி கொலை வழக்கு: சுட்டுக் காட்டினார் சாட்சியாளர்

Thipaan   / 2016 நவம்பர் 24 , பி.ப. 11:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

பேரின்பராஜா திபான் 

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரான நடராஜா ரவிராஜ் மீது, 2006ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 10ஆம் திகதியன்று காலை துப்பாக்கிப் பிரயோகம் நடத்தப்பட்டபோது, செனவிரத்ன என்ற சந்தேகநபர், கறுப்புநிறப் பையினுள் ரி-56 ரகத் துப்பாக்கியை வைத்து எவ்வாறு சுட்டார் என்பதை, முதலாவது சாட்சியாளரான மனம்பேரிகே பிருதிவிராஜ் சம்பத், கொழும்பு மேல்நீதிமன்றத்தில், நேற்று வியாழக்கிழமை செய்துகாட்டினார். 

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தபோது படுகொலை செய்யப்பட்ட நடராஜா ரவிராஜ் எம்.பியின் படுகொலை தொடர்பான சாட்சியமளிப்பு, கொழும்பு மேல்நீதிமன்ற நீதிபதி மணிலால் வைத்தியதிலக தலைமையில், விசேட சிங்கள ஜூரிகள் எழுவர் அடங்கிய ஜூரி சபை முன்னிலையில், நேற்று வியாழக்கிழமை (24) நடைபெற்றது. 

இக்கொலை வழக்கின் சந்தேகநபராக இருந்து, அரச தரப்புச் சாட்சியாளராக மாறிய, முதலாவது சாட்சியாளரான மனம்பேரிகே பிருதிவிராஜ் சம்பத், 2ஆவது நாளாக நேற்றுச் சாட்சியமளித்தார். 

வழக்கு, முற்பகல் 11.30க்கு, சிரேஷ்ட பிரதி சொலிசிட்டர் ஜெனரல் ரோஹந்த அபேசூரிய வழக்கை நெறிப்படுத்த, சாட்சியாளர் சாட்சியமளிக்கத் தொடங்கினார். 

அந்த விவரங்கள் வருமாறு,  

கே: 2006.11.10ஆம் திகதி பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்திலிருந்து காலை 6.05க்கு புறப்பட்டதாகக் கூறினீர்கள்? 

ஆம். 

கே: புறப்படும்போது, அந்தப் பயணத்துக்கு வாகனத்தைப் பயன்படுத்தினீரா? 

ஆம். 

கே: என்ன வாகனம்? 

மோட்டார் சைக்கிள். 

கே: அது, ஒருவரிமிருந்து கிடைத்ததாகக் கூறினீர்களே?  

ஆம். 

கே: பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்திலிருந்து புறப்பட்டு எங்கு போனீர்கள்?  

பொரளை, கனத்தை மயானத்துக்கு அருகில். 

கே: ஏன் போனீர்கள்? 

சாமி வரச்சொன்னதால் போனேன். 

கே: தனியாகவா சென்றீர்கள்?  

ஆம். 

கே: கனத்தையில் எங்கு சென்றீர்?  

கித்துள் வத்த வீதிக்கு. 

கே: நேராக பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்திலிருந்தா சென்றீர்கள்? 

ஆம். 

கே: அங்கு யாராவது இருந்தார்களா? 

இல்லை. 

கே: கித்துள் வத்தைக்குப் போய் என்ன செய்தீர்கள்? 

சாமி அங்கு இருக்கவில்லை. சாமிக்கு அழைப்பை ஏற்படுத்தினேன். 

கே: எதில் அழைப்பை ஏற்படுத்தினீர்கள்? 

அலைபேசியில். 

கே: என்ன கதைத்தீர்கள்? 

நான் வந்துவிட்டேன் என்றேன். அருகில் இருக்கிறோம். வந்து விடுவோம் என சாமி கூறினார். 

கே:  அங்கு இருக்கும் போது யாராவது வந்தார்களா? 

ஆம். 

கே:  யார்?  

சாமி என்பவர் வந்தார். 

கே:  எதில் வந்தார்?  

முச்சக்கரவண்டியில் வந்தார். 

 கே: முச்சக்கரவண்டியின் நிறம் என்ன? 

கறுப்பு என்று நினைக்கிறேன். 

 கே: சாமியுடன் வேறு யாராவது வந்தனரா? 

ஆம். 

கே: அவர்களது பெயர்கள் ஞாபகமா? 

ஆம்.  

கே: அவர்களது பெயர்களை மன்றில் தெரிவிக்க முடியுமா?  

சாமி, சரண்,ஹுஸைன், நிஷாந்த மற்றும் இன்னொருவர் இருந்தார் பெயர் தெரியாது. 

கே:  ஹுஸைனை முதலில் சந்தித்துள்ளீர்களா? 

ஆம். 

கே: எவ்வளவு காலத்துக்கு முன்? 

மூன்று மாதங்களுக்கு முன்னர். 

கே: அவர் எந்த இடம் என்று தெரியுமா?  

இல்லை. 

கே: அவர் என்ன வேலை செய்தார்? 

பொலிஸ் திணைக்களத்தில் பணியாற்றினார். 

கே: ஹுஸைனை வேறு எங்கு சந்தித்துள்ளீர்கள்? 

கடற்படைப் புலனாய்வு முகாமில். 

 கே: அவர் பொலிஸ் என்று எவ்வாறு அறிந்தீர்கள்? 

சாமி சொன்னார். 

கே: ஹுஸைன் இன்று மன்றில் இருக்கிறாரா? 

இல்லை. 

கே: சம்பவம் நடந்த தினத்தன்று அவர்கள் வரும் வரை அங்கேயே இருந்தீர்களா? 

ஆம். 

கே: எவ்வளவு நேரம்? 

சுமார் 10 நிமிடங்கள் வரை. 

கே: அப்போது என்ன வாகனங்கள் வந்தன?  

இரண்டு முச்சக்கரவண்டிகள் வந்தன. 

கே: அவற்றின் நிறங்கள்? 

பச்சை மற்றும் இளம் மஞ்சள் (கிறீம்) 

கே: அந்த முச்சக்கரவண்டிகளில் யார் யார் வந்தனர் என்று ஞாபகமா?  

ஆம்.  

கே: யார் யார் வந்தனர். 

வஜிர, பிரசாத், செனவிரத்ன, மென்டிஸ் மற்றும் மூன்று பேர் இருந்தனர். 

கே: நீங்கள் கூறிய வஜிர என்பவர் இங்கு இருக்கிறாரா?  

(3 பிரதிவாதிகள் அமர்ந்திருந்த கூண்டைப் பார்த்து) இடது பக்கமாக முதலாவதாக இருப்பவர்தான் அவர். 

கே: செனவிரத்ன வந்தாரா? இங்கு இருக்கிறாரா?  

ஆம், இரண்டாவதாக இருப்பவர். 

கே: பிரசாத் இங்கு இருக்கிறாரா?  

ஆம், வலது பக்கமிருந்து முதலாவதாக இருப்பவர். 

கே: இவர்கள், சாமி வந்து சில நிமிடங்களில் வந்ததாகக் கூறினீர்கள்? 

ஆம். 

 கே: ஏதாவது கொண்டு வந்தனரா? 

ஆம். 

கே:  யார்?  

பிரசாத். 

கே: எங்கு இருக்கிறார் ? 

வலது பக்கமாக முதலாவதாக இருக்கிறார். 

கே: பிரசாத் என்ன சொன்னார்? 

மாதா வீதியிலிருந்து 30, 40 மீற்றர் தூரத்தில் மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு இருக்கச் சொன்னார். வேலை முடிந்தபின் செனவிரத்னவுடன் கங்காராமைக்கு செல்லச் சொன்னார். 

கே: நீங்கள் எங்கு போய் நின்றீரகள்? 

மாதா வீதியில், நடைபாதையில் மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு காத்திருந்தேன். 

கே: அந்த நேரத்தில் உங்களது கைகளில் என்னென்ன இருந்தன?  

இரண்டு தலைக்கவசங்கள். 

கே: கைகளிலா வைத்திருந்தீர்கள்? 

ஒரு தலைக்கவசத்தை அணிந்திருந்தேன். 

கே:  மற்றையது? 

கையில் வைத்திருந்தேன். 

கே:  2,3,4ஆம் சந்தேகநபர்கள் முச்சக்கரவண்டியில் வந்ததாகக் கூறினீர்கள்? 

ஆம். 

கே: ஏதாவது கொண்டு வந்தனரா? 

ஆம், கறுப்புநிறப் பையொன்றைக் கொண்டுவந்தனர். 

கே:  யார் கொண்டுவந்தது? 

செனவிரத்ன. 

கே: அந்த கறுப்புநிறப் பையைப் பார்த்தீர்களா? 

ஆம். 

கே: அந்தப் பை தொடர்பாகக் கூறமுடியுமா? 

இரண்டரை அடி அல்லது மூன்று அடி நீளமான பை. 

கே: கறுப்பு நிறமா? 

ஆம். 

கே: பட்டி ஏதாவது இருந்தா? 

ஞாபகமில்லை. 

 அந்தப் பையைக் காட்டினால் அடையாளம் கண்டுகொள்ள முடியுமா? 

கே: ஆம். 

 கே: மாதா வீதியில் 30, 40 மீற்றர் தூரத்தில் நடைபாதையில் மோட்டார் சைக்கிளை நிறுத்தியிருந்தாகக் கூறினீர்கள்? 

ஆம். 

கே:மோட்டார் சைக்கிளின் எஞ்சின் நிறுத்திவைக்கப்பட்டிருந்தா? 

ஆம். எஞ்சினை நிறுத்தி, சுவிட்சை போட்டு வைக்கச் சொன்னார்கள். 

கே:எவ்வளவு நேரம் அங்கு நின்றீர்கள்? 

30 நிமிடங்கள் வரை. 

கே: அதன் பின்னர் என்ன நடந்தது? 

வெடிச்சத்தங்கள் கேட்டன. 

கே:எந்தப் பக்கமாக? 

எனக்குப் பின் பக்கமாக. 

கே: உங்களுக்குப் பின் பக்கம் என்ன தெரிந்தது? 

பிரதான வீதி. 

கே: துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டது யார்? 

செனவிரத்ன. 

கே:  இங்கு இருக்கிறாரா? 

நடுவில் உள்ளவர். 

கே:வெடிச் சத்தம் எவ்வளவு நேரம் கேட்டது? 

1- 2 நிமிடங்கள். 

கே: எதற்கு வெடி வைக்கப்பட்டது? 

சிவப்பு நிற ஜீப் வண்டிக்கு, 

கே: எங்கு வெடி வைக்கப்பட்டது என்று பார்த்தீர்களா? 

இல்லை. 

கே: அதன் பின்னர் என்ன செய்தீர்? 

துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டவர் ஓடிவந்தார். நான் மோட்டார் சைக்கிளை ஸ்டார்ட் பண்ணினேன். 

கே:  எப்படி துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது? 

கறுப்பு நிறப் பையைத் தூக்கி, அதற்குள் வைத்திருந்த துப்பாக்கியால் சுட்டார். 

கே:  நீங்கள் எவ்வளவு காலமாக பொலிஸில் பணியாற்றினீர்கள்? 

10 வருடங்கள். 

கே: சம்பவம் இடம்பெற்ற இடத்திலிருந்து எவ்வளவு தூரத்தில் இருந்தீர்கள்? 

சுமார் 40 மீற்றர் தூரத்தில். 

 கே: சத்தத்தை வைத்து, என்ன வகையான துப்பாக்கி என்பதை உங்களால் ஊகிக்க முடியுமா?  

ஆம், ரி-56 ரக துப்பாக்கி. 

கே: அந்தத் துப்பாக்கியை பாவித்திருக்கிறீர்களா? 

யாழ்ப்பாணம், அம்பாறை, மட்டக்களப்பில் பணியாற்றியபோது, பயன்படுத்தியிருக்கிறேன். 

கே:  துப்பாக்கி முழுமையாகத் தெரிந்ததா? 

இல்லை. 

கே:  சத்தம் கேட்டதா? 

ஆம். 

கே: உங்களுடைய மோட்டார் சைக்கிளில் அமர்ந்த அவர் என்ன சொன்னார்? 

போவோம் போவோம் என்றார். 

கே:  நீர் என்ன செய்தீர்? 

கையில் இருந்த தலைக்கவசத்தைக் கொடுத்து, எங்கே என்று கேட்டேன். கங்காராமைக்கு என்று சொன்னார். 

கே: அவரோடு எங்கு போனீர்கள்? 

நாரஹேன்பிட்டிக்குப் போய் டொரிங்டன் ஊடாக, கங்காராமைக்குச் சென்றேன். 

கே: இந்தக் கொலை தொடர்பில் யாரிமும் நீங்கள் கேட்கவில்லையா? 

செனவிரத்னவிடம் கேட்டேன், அது உனக்குத் தேவையில்லை என்றார். 

கே: அப்படியாயின், அதுவரை யாரைக் கொல்லப் போகின்றனர் என உங்களுக்குத் தெரியாதா? 

இல்லை. 

கே: அதன்பின்னர் என்ன செய்தீர்கள்? 

கங்காராமயவிலுள்ள கடற்படைப் புலனாய்வு முகாமில் வைத்து, மோட்டார் சைக்கிளை செனவிரத்னவிடம் கொடுத்துவிட்டு, நான் சென்றுவிட்டேன். 

கே:  துப்பாக்கிப் பிரயோகம் இடந்த இடத்தில் மக்கள் இருந்தனரா? வாகனங்கள் சென்றனவா?  

ஆம்.  

கே: அப்போது எத்தனை மணியிருக்கும்? 

காலை 8 மணியைத் தாண்டியிருக்கும். 

கே:அதன்பின்னர் என்ன செய்தீர்கள்? 

அலரி மாளிகையில் இருந்த, சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ரொட்ரிகோவின் வானகத்தை சுத்தம் செய்து கொண்டிருந்தேன். 

கே:  வாகனத்தை யார் கொண்டுவந்தனர் என தெரியுமா? 

இல்லை. 

கே:வாகனத்தைச் சுத்தப்படுத்தும் போது ஏதும் தகவல் கிடைத்ததா? 

ரவிராஜ் எம்.பி படுகொலை செய்யப்பட்டுள்ளார் என, விசேட செய்தி கிடைத்தது. 

கே:அந்தத் தகவல் கிடைக்கும் போது எத்தனை மணியிருக்கும்? 

11.30 மணியிருக்கும். 

கே:ரவிராஜ் எம்.பியைப் பற்றி உங்களுக்கு ஏதும் தெரியுமா?  

ஆம், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் என்று தெரியும். 

கே: தொலைக்காட்சியில் அவரது பேட்டிகளைக் கேட்டிருக்கிறீர்களா? 

ஆம்.  

கே:எந்த மொழியில்? 

சிங்களத்தில். 

கே: ரவிராஜ் எம்.பியுடன் உங்ளுக்கு ஏதும் பிரச்சினை இருந்ததா? 

இல்லை. 

கே:சம்பவம் இடம்பெற்ற பின்னர், புலனாய்வு முகாம் என்று கூறப்படும் இடத்துக்குச் சென்றீர்களா? 

ஆம், அடுத்தநாள் காலை 10.30 மணியளவில் சென்றேன். 

கே:யார் யார் இருந்தனர்? 

செனவிரத்ன, வஜிர, பிரசாத், தமிழர்கள் சிலர். 

கே:இந்த விவகாரம் தொடர்பில் அவர்களிடம் ஏதும் கதைத்தீர்களா? 

ஆம். 

கே:என்ன? 

ரவிராஜை ஏன் கொன்றீர்கள் எனக் கேட்டேன். வாயை மூடிக்கொண்டு இருக்குமாறு பிரசாத் சொன்னார். 

கே:பின்னர் அந்த இடத்துக்குச் சென்றபோது ஏதும் விசேட சம்பவம் நடந்ததா? 

ஆம், அங்குள்ள அறையொன்றினுள், மோட்டார் சைக்கிள், துண்டு துண்டாக வெட்டிப் போடப்பட்டிருந்தது. 

கே:எந்த மோட்டார் சைக்கிள்?  

படுகொலைக்குப் பயன்படுத்திய மோட்டார் சைக்கிள். 

கே:எதனால் அந்த மோட்டார் சைக்கிளை வெட்டியிருந்தனர்? 

கிரைண்டரால் வெட்டியிருந்தனர். 

கே:பின்னர் அதற்கு என்ன நடந்ததது? 

பிரசாத்திடம் கேட்டேன் கடலில் போட்டதாகக் கூறினார். 

கே:இந்த விவகாரம் தொடர்பில் உங்களுடைய அதிகாரிகளுக்குக் கூறினீர்களா? 

இல்லை. 

கே: ஏன்? 

கருணா குழுவினர் என்னையும் கொல்வரோ என அஞ்சினேன். 

கே:சாமி என்பவரைப் பற்றி சொல்ல முடியுமா? 

ஐந்தரை அடி உயரம் கொண்ட மெலிந்த நபர், சுருள் தலை முடி, இடது கையில் பச்சை குத்தியிருப்பார். 

கே:சரண் என்பவர் பற்றி சொல்ல முடியுமா? 

பருத்த உருவமுடையவர். 5.5 அடி அல்லது 5.6 அடி உயரம் கொண்டவர். 

கே:சரணை அதன்பின் சந்தித்தீர்களா? 

இல்லை, இன்றுவரை அவர்களைச் சந்திக்கவில்லை. 

கே:கறுப்புநிற பையை அடையாளம் காட்ட முடியுமா?  

ஆம். 

சம்பவம் இடம்பெற்றபோது அப்பகுதியில் விட்டுச் செல்லப்பட்ட பை, பிரவுண் நிற தாளால் சுற்றப்பட்டு, பொலித்தீன் பையினுள் போடப்பட்டிருந்தது. அது சிவப்புநிற பட்டியால் சுற்றப்பட்டு செலேடேப் இடப்பட்டிருந்தால், அதனை அகற்றுவதற்கு, பிரதி சொலிசிட்டர் ஜெனரல் நீதிபதியிடம் அனுமதி கோரினார்.  

நீதிபதி அனுமதி வழங்கியதையடுத்து, பொலித்தீன் பை வெட்டப்பட்டு, பிரவுண் பை எடுக்கப்பட்டது. அந்தப்பையைச் சுற்றியும் செலோ டேப் ஒட்டப்பட்டிருந்தாதால், அதனையும் அகற்றுவதற்கு நீதிபதியிடம் அனுமதி கோரினார். நீதிபதி அனுமதி வழங்கியதையடுத்து, கறுப்புப் பை வெளியே எடுக்கப்பட்டது. 

மன்றிலிருந்த அனைவரின் கவனமும் அந்தப் பையின் மீதே குவிந்தது. அந்தப் பை வைக்கப்பட்டிருந்த பொலித்தீன் பையில் Met Police  என எழுதப்பட்டிருந்தது. 

இது, சர்வதேச பொலிஸாரின் விசாரணையின் போது, எழுதப்பட்டதாக பிரதி சொலிசிட்டர் ஜெனரல், மன்றின் கவனத்துக்குக் கொண்டுவந்தார். 

அதன் பின்னர், சாட்சியாளரிடம் பை கொடுக்கப்பட்டு, அதைப் பார்க்குமாறு கூறப்பட்டது. அவரும் பார்த்துவிட்டு, மீண்டும் பையை ஒப்படைத்தார். அது ஜூரிகளிடமும் வழங்கப்பட்டது. அப்போது, ஜூரி சபையினால் பரிசோதனை நடத்தப்படுகிறது என நீதிபதி கூறியதையடுத்து, மன்றில் சிறிய சிரிப்பொலி எழுந்தது. அத்துடன், பையில் கார்ல்டன் இன்டர்நஷனல் எனப் பெயர் குறிப்பிடப்பட்டிருந்ததாகக் கூறப்பட்டதுடன், அதற்கும் மன்றில் சிரிப்பொலி எழுந்தது. 

துப்பாக்கியை பையினுள் வைத்து, எவ்வாறு சூடு நடத்தப்பட்டது என, மதியம் 1.14 மணியளவில் சாட்சியாளரிடம் பிரதி சொலிசிட்டர் ஜெனரல் கேட்டபோது, அவர் சுட்டுக் காட்டினார்.  

இதனையடுத்து, மதிய போசனத்துக்காக, நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டு, பிற்பகல் 2.16க்கு ஆரம்பித்தன. முச்சக்கர வண்டியிருந்து, செனவிரத்ன இறங்கும் போது எவ்வாறு பையைக் கொண்டு வந்தார் என பிரதி சொலிசிட்டர் ஜெனரல் கேட்டதற்கு, பையின் மேற்பகுதியிலும் கீழ்ப் பகுதியிலும் கையை வைத்து, சாட்சியாளர் தூக்கிக்காட்டினார். 

அதன் பின்னர் பிரதி சொலிசிட்டர் ஜெனரல், கேள்விகளைக் கேட்கத் தொடங்கினார். 

 கே:உங்கள் மீது வேறேதும் வழக்குகள் உள்ளனவா?  

ஆம். கொழும்பு மேல் நீதிமன்றம், ஹம்பாந்தோட்டை, எம்பிலிப்பிட்டிய, அத்தனகல நீதிமன்றங்களில் வழக்குகள் இருக்கின்றன. 

கே: 2008ஆம் ஆண்டுக்குப் பின்னர் 2015ஆம் ஆண்டிலேயே குற்றப்புலனாய்வுப் பிரிவில் சாட்சியமளித்துள்ளீர்கள்? காரணம்? 

கருணா தரப்பினர் வலுவிழந்திருந்தனர், அரசாங்கமும் மாறியது. அதனாலேயே. 

இதன் பின்னர் குறுக்கிட்ட, பிரதிவாதிகள் சார்பில் ஆஜரான சட்டத்தரணி ரசிக்க பாசூரிய, '2015.02.06 அன்று வாக்குமூலமளித்தீர்களா?', எனக் கேட்டதற்கு சாட்சியாளர் மறுத்தார். தான் 2015.02.26 அன்றே வாக்குமூலமளித்தாக மன்றில் அறிவித்தார். 

பிரதி சொலிசிட்டர் ஜெனரலும், 2015.02.26 அன்றே வாக்குமூலம் அளிக்கப்பட்டதாக, நீதிபதியின் கவனத்துக்குக் கொண்டு வந்த போதும், பிரதிவாதிகள் சார்பில் ஆஜரான சட்டத்தரணி, அதனை மறுத்தார்.  

மேற்குறித்த வாக்குமூம் பதிவுசெய்யபட்ட அசல் பிரதியைப் பார்க்குமாறு நீதிபதி கூறியபோது, அதில் 2015.02.06 என்றே காணப்பட்டது.  

2015.02.05 அன்றும் சாட்சியாளர் சாட்சியமளித்துள்ளார் என, பிரதிவாதிகள் சார்பில் ஆஜரான சட்டத்தரணி கூறினார்.  

சாட்சியாளர் 2015.02.05 மற்றும் 2015.02.06 ஆகிய தினங்களில் வாக்குமூம் அளித்துள்ளாரா என்பதை மன்றுக்கு அறிவிக்குமாறு, குற்றப்புலனாய்வுப் பிரிவின் உப பரிசோதகருக்கு உத்தரவிட்ட நீதிபதி, சாட்சியப்பதிவை இன்று வெள்ளிக்கிழமை வரை ஒத்திவைத்தார்.    


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X