2025 செப்டெம்பர் 16, செவ்வாய்க்கிழமை

குண்டுவீச்சில் மாமியார், மருமகள் பலி| வீசிய மந்திரவாதியும் மரணம்

Princiya Dixci   / 2016 ஜூன் 10 , மு.ப. 05:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

பத்தரமுல்ல, தலங்கம பொலிஸ் நிலையத்துக்கு அருகில், நேற்று வியாழக்கிழமை (09) முற்பகல் இடம்பெற்ற கைக்குண்டுத் தாக்குதல் சம்பவமொன்றில் இரு பெண்கள் உட்பட மூவர் உயிரிழந்துள்ளதுடன், 9 வயதுச் சிறுமியொருவர் படுகாயமடைந்த நிலையில், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவத்தில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சிறிமதி வல்பொல (வயது 72) என்ற மாமியாரும் புத்திகா நீலநயனி (வயது 40) என்ற மருமகளுமே உயிரிழந்துள்ளனர். சம்பவத்தில் உயிரிழந்த ஆண், இராணுவத்திலிருந்து தப்பிச்சென்று, மந்திரவாதியாகச் செயற்பட்டு வந்த பிரதீப் குமார பெரேரா (வயது 54) என்பவராவார்.

அத்துடன், குண்டுவெடிப்பு இடம்பெற்ற இடத்திலிருந்து, வெடிக்காத நிலையிலிருந்த குண்டொன்றும் மீட்கப்பட்டு, செயலிழக்கச் செய்யப்பட்டது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

நீலநயனி என்ற பெண், தன்னுடைய கணவரை விட்டுப் பிரிந்து, மாமியாருடனும் தனது இரண்டு பிள்ளைகளுடனும் வாழ்ந்து வந்துள்ளார். எனினும், பிரிந்த குடும்பத்தை மீண்டும் இணைக்க வேண்டும் என்பதற்காக, மந்திரவாதியொருரை நாடியுள்ளார். இந்நிலையில், அந்த மந்திரவாதி, குறித்த பெண்ணின் வீட்டுக்கு அடிக்கடி சென்று வந்துள்ளார். சிறிது காலத்தில், இவ்விருவருக்கும் இடையில், திருமணத்துக்குப் புறம்பான காதல் மலர்ந்ததாக தெரியவருகிறது.

இந்த விடயம் குறித்து, குறித்த பெண்ணின் உறவினர்களுக்குத் தெரியவரவே, தங்களது வீட்டுக்கு வர வேண்டாம் என அப்பெண்ணின் வீட்டார், குறித்த மந்திரவாதிக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர். இருந்தும், அவ்விருவருக்கு இடையிலான தொடர்பு நீடித்துள்ளது. பின்னர், மந்திரவாதியின் உதவியுடன், குறித்த பெண்ணிடமிருந்த காணியொன்றை, அந்தப் பெண் விற்பனை செய்துள்ளார். அதற்காக 1 மில்லியன் ரூபாய் பணத்தை, மந்திரவாதிக்குக் கொடுப்பதாகவும் அப்பெண் உறுதியளித்துள்ளார். எனினும், அவரால் அப்பணத்தைக் கொடுக்க முடியாமல் போனதால், அவ்விருவருக்கும் இடையில், அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டு வந்துள்ளது.

இந்த வாக்குவாதம் அதிகரித்ததை அடுத்தே, குறித்த பெண், பொலிஸ் நிலையத்தில் இது தொடர்பில் முறைப்பாடு செய்துள்ளார். விசாரணைக்கு வருமாறு பொலிஸ் நிலையத்தால் மந்திரவாதிக்கு அழைப்பு விடுக்கப்பட்ட போது, ஆத்திரம் கொண்ட மந்திரவாதி, கைக்குண்டொன்றை எடுத்துச் சென்று, குறித்த பெண்ணும் அவரது மாமியாரும் மகளும் நின்றிருந்த இடத்துக்குச் சென்று வெடிக்கவைத்துள்ளார்.

இதன்போதே, மேற்படி மூவரும் உயிரிழந்துள்ளனர். அப்பெண்ணின் மகளான 9 வயது சிறுமி, படுகாயங்களுக்கு உள்ளான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில், தலங்கம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X