2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

கொலை, 45 கொள்ளை சம்பவங்கள்; ஐவர் கைது

Suganthini Ratnam   / 2012 நவம்பர் 25 , மு.ப. 09:27 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எஸ்.எம்.மும்தாஜ், ஜூட் சமந்த, அப்துல்லாஹ்)


கொலை, கொள்ளை  மற்றும் பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடைய குற்றச்சாட்டின் பேரில் நீதிமன்றத்தினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட  ஐவரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

வென்னப்புவ மற்றும் கொஸ்வத்தை பொலிஸாரே இவர்களை கைதுசெய்துள்ளனர்.

கொஸ்வத்தை பொலிஸ் பிரிவில் உள்ள வீடு ஒன்றின் முன்பாக துப்பாக்கிப் பிரயோகம் செய்தமை தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளை அடுத்து இரண்டு சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டனர்.

இவ்வாறு கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்களிடமிருந்து ரி 56 ரக இரண்டு துப்பாக்கிகளுடன் அவற்றுக்கு பயன்படுத்தப்படும் 51 ரவைகளும் ஏனைய ரவைகள் சிலவற்றையும் கொஸ்வத்தைப் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

இந்த சந்தேக நபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின்போது அவர்களால் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படும் சுமார் 9 கொள்ளைச் சம்பவங்கள் தொடர்பான விபரங்கள் தெரியவந்ததாக கொஸ்வத்தைப் பொலிஸார் தெரிவித்தனர். 

இவர்களிடமிருந்து 3 மோட்டார் சைக்கிள்கள், ஒரு மடிக்கணினி, 24 கையடக்கத்தொலைபேசிகள்,  14.5 பவுன் நகைகளையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

இதேவேளை, வென்னப்புவ பொலிஸார் மேற்கொண்ட திடீர் சோதனையின்போது முச்சக்கரவண்டி ஒன்றுடன் 3 சந்தேக நபர்களைக் கைதுசெய்துள்ளனர்.

அவர்களிடமிருந்து ரி 56 ரக துப்பாக்கியும் அந்த துப்பாக்கிக்கு பயன்படுத்தப்படும் 30 ரவைகளையும் ஒரு ரம்போ ரக கத்தியையும் பொலிஸார்  கைப்பற்றியுள்ளனர்.

இவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின்போது இவர்களில் இருவர் சிறைச்சாலை அதிகாரிகளிடமிருந்து தப்பிவந்ததாக பொலிஸாரின் விசாரணையிலிருந்து தெரியவந்துள்ளது.

இந்த இருவரில் ஒருவர் தம்புத்தேகம நீதிமன்றத்திலிருந்தும் மற்றையவர் மாவனெல்லை பிரதேசத்தில் சிறைச்சாலை பஸ்ஸிலிருந்தும் தப்பிச்சென்றுள்ளனர்.

இந்த சந்தேக நபர்களினால் கொலை உள்ளிட்ட 36 கொள்ளைச் சம்பவங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் ஒருவருக்கு நீதிமன்றத்தினால் 20 பிடியாணைகள் பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. அவர்களால் கொள்ளையிடப்பட்டதாகக் கூறப்படும் முச்சக்கரவண்டி, 3 மோட்டார் சைக்கிள்கள் மற்றும் 11.5 பவுன் தங்கநகைகளையும் பொலிஸார்  கைப்பற்றியுள்ளனர்.

வென்னப்புவ பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி அசோக வீரக்கொடி, கொஸ்வத்தை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஓசித சில்வா ஆகியோரின் தலைமையிலான குழுவினர் இச்சம்பவங்கள் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .