2025 செப்டெம்பர் 16, செவ்வாய்க்கிழமை

ஆயுத வியாபாரிகள் உள்ளிட்ட 15 பேர் மாட்டினர்

Princiya Dixci   / 2016 ஜூன் 01 , மு.ப. 03:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பில், பாதாள உலகக் கோஷ்டியினருக்கு ஆயுதங்களை வழங்கியதாகக் கூறப்படும் இரு ஆயுதக் களஞ்சியசாலைகளை சோதனையிட்ட பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினர், ஆயுத வியாபாரத்தில் ஈடுபட்டுவரும் முக்கியஸ்தர்கள் உள்ளடங்களாக 15 சந்தேகநபர்களை, கடந்த திங்கட்கிழமை (30), ஆயுதங்களுடன் கைது செய்துள்ளனர். 

இதன்போது கைப்பற்றப்பட்ட ஆயுதங்களில், ரீ 56 ரக துப்பாக்கிகள் 2, 9 மில்லிமீற்றர் ரக பிஸ்டள்கள் 3, ரிவோல்வர்கள் 3, ரிப்பீட்டர் ரக துப்பாக்கியொன்று, மைக்ரோ ரக துப்பாக்கியொன்று, அரோகன் ரக துப்பாக்கியொன்று, சினைப்பர் ரக துப்பாக்கியொன்று மற்றும் பல்வேறு ரகங்களைச் சேர்ந்த ரவைகள் 3,000 என்பன உள்ளடங்குகின்றன என்று புலனாய்வுப் பிரிவினர் தெரிவிக்கின்றனர்.

அண்மையில் கைது செய்யப்பட்ட, பாதாள உலகக் கோஷ்டி உறுப்பினர்களான ஆமி சம்பத் மற்றும் புளுமெண்டல் சங்க ஆகியோரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போதே, மேற்படி சந்தேகநபர்கள் தொடர்பான தகவல்களும் அவர்கள் வசமிருந்த ஆயுதங்கள் தொடர்பிலும் தகவல் கிடைத்துள்ளது. 

மேற்படி பாதாள உலகக் கோஷ்டியினர், தங்களுக்கு எதிரான பாதாள உலகக் கோஷ்டியினர் மீது தாக்குதல்களை நடத்துவதற்கும் மேலும் பல குற்றச்செயல்களில் ஈடுபடுவதற்கும், மேற்படி ஆயுத வியாபாரிகளிடமிருந்து பெறப்பட்ட தானியங்கி ஆயுதங்களையே பயன்படுத்தியுள்ளனர் என்று விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது. 

பாதாள உலகக் கோஷ்டியைச் சேர்ந்த தெமட்டகொட சமிந்தவை இலக்கு வைத்து, ஆமி சம்பத் மற்றும் புளுமெண்டல் சங்க ஆகியோர் தெமட்டகொட சந்தியில் நடத்திய தாக்குதலுக்கும், மேற்படி ஆயுத வியாபாரிகளிடமிருந்து பெற்றுக்கொள்ளப்பட்ட ஆயுதங்களே பயன்படுத்தப்பட்டுள்ளன என்பதும் தெரியவந்துள்ளது. 

இவ்வாறு சோதனையிடப்பட்டுள்ள ஆயுத களஞ்சியசாலைகள் இரண்டும், நீர்கொழும்பு மற்றும் கம்பளை ஆகிய பிரதேசங்களிலேயே காணப்பட்டுள்ளன. பிரான்ஸிலிருந்து வந்த ஒருவரே, நீர்கொழும்பு பிரதேசத்தைச் சேர்ந்த ஆயுதக் களஞ்சியசாலையை நடத்தி வந்துள்ளாரென்றும் பாதாளவுலகத்தைச் சேர்ந்த மற்றுமொரு நபரொருவரே, கம்பளை ஆயுதக் களஞ்சியசாலையை நடத்தி வந்துள்ளாரென்றும் தெரியவந்துள்ளது. 

இவ்வாயுத வியாபாரிகள், கூலி அடிப்படையிலும் மாற்று நடவடிக்கையாகவும், உடன் காசுக்குக் கொள்வனவு என்ற அடிப்படையிலுமே ஆயுதங்களை வழங்கியுள்ளனர் என்றும் இந்த வியாபாரத்துடன் தொடர்புடைய மேலும் சிலரைக் கைது செய்வதற்கும் அவர்கள் வசமுள்ள ஆயுதங்களைக் கைப்பற்றவும், பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினர் நடவடிக்கை எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X