2024 ஏப்ரல் 23, செவ்வாய்க்கிழமை

சட்டத்தரணி ஹிஜாஸுக்காக இரண்டு மனுக்கள் தாக்கல்

Editorial   / 2020 ஏப்ரல் 20 , மு.ப. 12:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் சம்பவங்கள் தொடர்பில், குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ்வை, நீதிமன்றத்தில் உடனடியாக ஆஜர்படுத்துமாறு ரிட் கட்டளை பிறப்பிக்குமாறு, மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் இரண்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

சட்டத்தரணியின் தந்தை மற்றும் சகோதரனால் தாக்கல் செய்யப்பட்டுள்ள இரண்டு மனுக்களிலும் பதில் பொலிஸ் மா அதிபர் சீ.டீ. விக்கிரமரத்ன, குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளர், சட்டமா அதிபர் ஆகியோர் பிரதிவாதிகளாகக் குறிப்பிடப்பட்டுள்ளனர். 

சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ் கைதுசெய்யப்பட்டுள்ளமை சட்டவிரோதமாகும். அவரை உடனடியாக விடுதலை செய்ய கட்டளையிடவேண்டுமென மனுதாரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சட்டத்தரணிகளான சனத் விஜேவர்தன, கௌரி சங்கர் தவராசா ஆகியோரின் ஊடாகவே இந்த மனுக்கள் இரண்டும் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. 

தற்போது கைதுசெய்யப்பட்டுள்ள இந்த சட்டத்தரணி, 'Save the Pearl' எனும் நிதியத்தின் பொறுப்பாளர் ஆவார். இந்த நிதியத்தின் ஊடாக, அநாதை பிள்ளைகளுக்கு உதவி ஒத்தாசைகள் வழங்கப்படுகின்றன. அது தொடர்பில், குற்றப்புலனாய்வு பிரிவினரால் வாக்குமூலமும் அளிக்கப்பட்டுள்ளது. 

அதற்கு மேலதிகமாக உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் சம்பவம் தொடர்பிலான சந்தேகநபரான இப்றாஹிம் என்பவருக்கு எதிரான வழக்கில் ஆஜராகியமை தொடர்பிலும் குற்றப்புலனாய்வு பிரிவினரால் வாக்குமூலம் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. 

நிலைமை இவ்வாறிருக்கையில், கடந்த 14ஆம் திகதியன்று சட்டத்தரணி வீட்டிலிருந்த போது, அவருடைய வீட்டுக்குச் சென்ற குற்றப்புலனாய்வு குழுவினர், அலைபேசி இலக்கங்கள் சிலவற்றைக் காண்பித்து, அந்த இலக்கங்களுடன் தொடர்புகளை ஏற்படுத்தியமைக்கான காரணங்களைக் கேட்டறிந்துள்ளனர். 

அத்துடன், இப்றாஹிம் என்பவருக்கு எதிராக கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணைக்கு உட்படுத்தப்படும் வழக்கின் ஆவணங்கள் தொடர்பிலும் விசாரணைகளை மேற்கொண்டு, சி.ஐ.டியினர் குறிப்பெடுத்துக்கொண்டுள்ளனர். 

மறுநாள் 15ஆம் திகதியன்று, குற்றப்புலனாய்வு திணைக்களத்துக்கு அழைக்கப்பட்ட அவர், கைதுசெய்யப்பட்டுள்ளார். 

கைது செய்யப்பட்டுள்ள சட்டத்தரணி, அரசியல் மற்றும் சிவில் உரிமைகளுக்கான முன்னின்று செயற்படுகின்றனவர். விசேடமாக சிறுபான்மை முஸ்லிம் மக்களுக்காகவும் குரல் கொடுப்பவர் ஆவார். 

அதேபோல், கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மரணமடைந்த முஸ்லிம்களின் ஜனாஸாக்கள் தொடர்பில், அதிகாரிகள் எடுத்த தீர்மானங்களைக் கடுமையான விமர்சனத்துக்கு உட்படுத்திய ஒருவர் ஆவார். 

இவ்வாறான நிலையிலேயே சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ் கைது செய்யப்பட்டுள்ளார். அது சட்டத்துக்கு முரணானதாகுமென அம்மனுக்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆகையால், சட்டத்தரணியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு பிரதிவாதிகளுக்கு ரிட் கட்டளையை பிறப்பிக்குமாறு அம்மனுக்களில் கோரப்பட்டுள்ளன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X