Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை
Princiya Dixci / 2016 ஒக்டோபர் 27 , மு.ப. 03:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
அழகன் கனகராஜ்
சேர் பெறுமதி வரி (திருத்த) சட்டமூலம் மற்றும் ஒதுக்கீடு (திருத்த) சட்டமூலம் ஆகியன, நாடாளுமன்றத்தில், நேற்றுப் புதன்கிழமை மேலதிக வாக்குகளினால் நிறைவேற்றப்பட்டன.
ஒதுக்கீடு (திருத்தச்) சட்டமூலத்துக்கு ஆதரவாக 112 வாக்குகளும் எதிராக 45 வாக்குகளும் கிடைத்தன. ஒன்றிணைந்த எதிரணியினர், கறுப்புப் பட்டியைக் கட்டிக்கொண்டிருந்தனர்.
அவ்வணியின் எம்.பியான வாசுதேவ நாணயக்காரவும் அப்பட்டியை அணிந்திருந்தார் எனினும், இந்தச் சட்டமூலம் மீதான வாக்கெடுப்பின் போது நடுநிலைவகித்தார். அதன்போது ஆளும் தரப்பினர் ஊ...ஊ... என்று கோஷமெழுப்பி, மேசைகளில் தட்டி வரவேற்றனர்.
சேர் பெறுமதி வரி (திருத்த) சட்டமூலமானது, இரண்டு தடவைகள் வாக்கெடுப்புக்கு விடப்பட்டது. இரண்டாவது வாசிப்பு மீதான வாக்கெடுப்பின் போது, ஆதரவாக 112 வாக்குகளும் எதிராக 46 வாக்குகளும் கிடைத்தன. 85 பேர் சமுகமளிக்கவில்லை. அந்தச் சட்டமூலம் மீது நடத்தப்பட்ட மூன்றாவது வாசிப்பு மீதான வாக்கெடுப்பின் போது, ஆதரவாக 76 வாக்குகளும் எதிராக 23 வாக்குகளும் கிடைத்தன.
இந்த மூன்று வாக்கெடுப்புகளின் போதும், ஜே.வி.பி எதிர்த்து வாக்களித்தது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் மற்றும் ஈ.பி.டி.பி ஆகியவற்றின் எம்.பிக்கள் சமுகமளித்திருக்கவில்லை. அமைச்சர்களான மனோ கணேசன், ரிஷாட் பதியுதீன், எம்.பிக்களான வடிவேல் சுரேஷ் மற்றும் வேலுகுமார் ஆகியோர் உள்ளிட்ட இன்னும் பலரும் சமுகமளிக்கவில்லை.
வாக்களிப்பின் போது, ஒலிவாங்கிகளை முடுக்கிவிடுவது வழக்கமாகும். எனினும், ஒலிவாங்கித் தொகுதியில் ஏற்பட்டுள்ள கோளாறு காரணமாக, ஒலிவாங்கிகளை உடனடியாக முடுக்கிவிடுவதில், உறுப்பினர்கள் பெரும் சிரமங்களுக்கு, நேற்றுப் புதன்கிழமை காலையிலிருந்தே முகங்கொடுத்திருந்தனர்.
இந்நிலையில், சேர் பெறுமதி வரி (திருத்த) சட்டமூலத்தின் இரண்டாவது வாசிப்பு மீதான வாக்கெடுப்பின் போது, பெயர் குறிப்பிட்டு நடத்துமாறு, விமல் வீரவன்ச எம்.பி கோரினார்.
ஒலிவாங்கியை முடுக்குவதில் ஏற்பட்ட சிக்கல் காரணமாக, எழுந்துநின்று தங்களுடைய வாக்குகளை அளிக்குமாறு, அவைக்குத் தலைமை தாங்கிக் கொண்டிருந்த பிரதி சபாநாயகர் திலங்க சுமதிபால கேட்டுக்கொண்டார்.
உறுப்பினர்களைப் பெயர் கூப்பிட்டு அழைக்கும் போது, உறுப்பினர்கள் எழும்பும் போது, அதில் உறுப்பினர் உயரமாக இருந்தால் காவலாளி என்றும் உயரம் குறைந்த உறுப்பினராக இருந்தால் தொழிலாளி என்றும், பெண் உறுப்பினர்களாயின் பெண் தொழிலாளி என்றும் பெண் காவலாளி என்றும், ஒன்றிணைந்த எதிரணியினர் கிண்டல் செய்தனர்.
இதனால், உறுப்பினர்கள் எவருமே எழுந்து நிற்காமல், கைகளை உயர்த்தியும் உரத்த குரலிலும் தங்களின் வாக்குகளை அளித்தனர்.
தேர்தல் காலத்தில் தனக்கு உதவிய ஆதரவாளர்களுக்கு, அமைச்சர் சஜித் பிரேமதாஸ, வேலைவாய்ப்புகளை வழங்கினார். அதில், உயரம் குறைந்தவர்களாக இருந்தால் அவர்களுக்கு தொழிலாளர் பதவியும் உயரமாக இருந்தால் காவலாளி பதவியும் வழங்கப்படும் என்று தெரிவித்திருந்தார் என்று தகவல்கள் வெளியாகியிருந்தன.
அதனை அடிப்படையாக வைத்தே ஒன்றிணைந்த எதிரணியினர், தொழிலாளி மற்றும் காவலாளி என்று கிண்டல் செய்தனர். இதனால், எந்தவோர் உறுப்பினரும், நேற்றையதினம் வாக்களிப்பின் போது எழும்பவில்லை என்பதுடன், வாக்கெடுப்பு பெரும் சிரிப்பொலியுடன் கலகலப்பாகவே இருந்தது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
25 minute ago
44 minute ago