2021 ஜூன் 13, ஞாயிற்றுக்கிழமை

‘ஜோடி சப்பாத்துக்கு நான் தயங்கினேன்’

George   / 2017 மே 24 , மு.ப. 05:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

“,ஜனாதிபதி உள்ளிட்ட அரசாங்கத் தலைவர்களின் வழிகாட்டலின் கீழ், திறைசேரியானது இனிமேல் சிறந்த முறையில் நடத்திச் செல்லப்படும். அதற்காக அதியுச்ச பலத்தை நான் பயன்படுத்துவேன்” என்று, நிதியமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்தார்.  

“கடன் சுமையிலிருந்து நாட்டை முற்றாக விடுவித்து, 2025ஆம் ஆண்டுக்குள் இந்து சமுத்திரத்தின் கேந்திர நிலையமாக இலங்கையை மாற்றுவதே எமது பிரதான நிலைப்பாடு” என்றும் அவர் குறிப்பிட்டார்.  

நிதி மற்றும் ஊடக அமைச்சராகப் பொறுப்பேற்ற பின்னர், தனது கன்னி உரையை நாடாளுமன்றில் நேற்றைய தினம் ஆற்றியபோதே இதனைக் கூறினர்.  

அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், “எனக்கு புதிய அமைச்சுப் பதவி வழங்கப்பட்டமைக்காக ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். நிதி மற்றும் ஊடகம் எனும் ஒரு ஜோடி சப்பாத்துகளைப் பொறுப்பேற்றுக் கொள்வதற்காக, ஆரம்பத்தில் நான் தயங்கினேன்.  

“ஜோன் கொத்தலாவல, என்.எம்.பெரேரா போன்ற ஜாம்பவான்கள் பயன்படுத்திய சம்பாத்து ஜோடி எனக்கு பெரிதாக இருக்கும் என்றே நான் தயங்கினேன்.  

“எனினும், 1994ஆம் ஆண்டு தொலைத்தொடர்பு அமைச்சராக இருந்து புதிய மாற்றங்களுடன் எவ்வாறு பயணித்தேனோ, அதேபோல தற்போதும் இந்த நூற்றாண்டின் மாற்றங்களுக்கான திட்டங்களை வகுத்து, நாட்டை முன்னோக்கிக் கொண்டு செல்ல முடியும் என்றே நான் கருதுகிறேன். இதற்காக எனது அதியுச்ச சக்தியை பயன்படுத்தவும் நான் தயாராகவே இருக்கிறேன்.  

“நான் கடமை வகித்த அமைச்சுகள் நான் சென்றபோது இருந்ததைவிட முன்னேறிய நிலையிலேயே ஒப்படைத்துவிட்டு வந்திருக்கின்றேன். இதனையே இனியும் செய்வேன்.  

“2015ஆம் ஆண்டு பாரிய கடன் சுமையுடன் காணப்பட்ட இந்த நாடானது, எமது அரசாங்கத்தின் சிறப்பான நிர்வாகத்தால் தான் தற்போது சீராகப் பயணித்துக்கொண்டிருக்கிறது. இந்த அத்திபாரத்தை மேலும் பலப்படுத்தும் வகையில் தான், எனது அடுத்தகட்ட செயற்பாடுகள் அமையும்.  

“அத்தோடு, மீதொட்டமுல்லை குப்பை மேடை போன்று தான், கடந்த காலங்களில் இந்நாட்டில் அநீதிகள் குவிக்கப்பட்டிருந்தன. மனித உடல்களாலும் கடன்களாலும் பெரிய மலையொன்றே உருவாக்கப்பட்டிருந்தது.  

“இதனால் சர்வதேச அழுத்தங்களுக்கு முழுநாடும் முகம்கொடுக்க நேரிட்டதோடு, ஐ.நாவின் விசாரணையும் நாட்டுக்குள் வரவிருந்தது. கடன் சுமையைப் பொறுத்தவரை ரூபாய் 8.503 பில்லியன் 2015 ஆம் ஆண்டுவரை காணப்பட்டது. ஜி.எஸ்.பி. பிளஸ், ஐரோப்பிய ஒன்றியத்துக்கான மீன் ஏற்றுமதி என அனைத்தும் கடந்த காலங்களில் இல்லாதொழிக்கப்பட்டது.  

“எனினும், நாம் ஆட்சிபீடமேறி இரண்டு வருட நிறைவுக்குள் நாட்டின் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் முடிவு கண்டுள்ளோம். சர்வதேசத்தின் மத்தியில் காணப்பட்ட இலங்கை தொடர்பான நிலைப்பாடு மாற்றமடைந்து, அனைத்து அரசாங்கத் தலைவர்களும் மதிக்கக் கூடிய தலைவர்களாக ஜனாதிபதியும் பிரதமரும் இருக்கின்றனர்.  

இந்நிலையில், நானும் எனக்கான கடமைகளைச் சிறப்பான முறையில் முன்னெடுத்துச் செல்வேன் என்று இங்கு கூறிக்கொள்கிறேன். ஜனாதிபதி உள்ளிட்ட அரசாங்கத்தின் வழிகாட்டலின் கீழ், திறைச்சேரியை சிறப்பான முறையில் வழிநடத்தி, நாட்டை முழுமையாக கடன் சுமையிலிருந்து விடுவிப்பேன்.  

இதற்காக, உள்நாட்டில், வெளிநாடுகளில் கிடைக்கும் வாய்ப்புகளையும் சரியான முறையில் பயன்படுத்தி, 2025ஆம் ஆண்டில் நாட்டை இந்து சமுத்திரத்தின் பிரதான கேந்திர நிலையமாகவும் நான் மாற்றுவேன்” என்றார். 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .