2025 நவம்பர் 05, புதன்கிழமை

'1,200 பஸ்களில் GPS ஓப்'

Kogilavani   / 2016 ஜூலை 21 , மு.ப. 04:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கனகலிங்கம் கோபிகிருஷ்ணா

தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவினால் ஆரம்பிக்கப்பட்ட GPS தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் கருத்திட்டத்தின்படி, பஸ்களில் பொருத்தப்பட்ட சுமார் 2,085 GPS கருவிகளில், சுமார் 800 மாத்திரமே இன்னமும் இயங்கிக் கொண்டிருப்பதாக, போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் பிரதியமைச்சர் அஷோக் அபேசிங்க தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் வாய்மொழிமூல விடைக்கான வினாக்கள் நேரத்தின்போது, ஜே.வி.பியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தியால் கேட்கப்பட்ட வினாவுக்குப் பதிலளிக்கும்போதே, பிரதியமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

2013ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்தக் கருத்திட்டத்தின் மூலம், பஸ்களின் அமைவிடம், பொருத்தமற்ற இடங்களில் பஸ் தரிக்கிறதா, பாதுகாப்பற்ற முறைகளில் பஸ் செலுத்தப்படுகிறதா, பஸ்களுடன் உடனடியாகத் தொடர்பை ஏற்படுத்துவதன் மூலம் நேரடியான நடவடிக்கைகளை எடுத்தல், வாகனங்களின் பாதையை முகாமை செய்தல் உள்ளிட்டவை இலக்கு வைக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

இந்தக் கருத்திட்டத்தில் தனியார் பஸ்கள் சுமார் 2,085 இணைக்கப்பட்டதாகத் தெரிவித்த பிரதியமைச்சர், இதற்காக தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவால் 61 மில்லியன் ரூபாய் செலவுசெய்யப்பட்டதோடு, தனியார் பஸ் உரிமையாளர்களிமிருந்து உபகரணங்களுக்காக 23 மில்லியனும் உபகரணங்களின் பராமரிப்புக்காக வருடாந்த அறவீடாக 3 மில்லியன் ரூபாயும் அறவிடப்பட்டதாகத் தெரிவித்தார்.

2014ஆம் ஆண்டின் முடிவில், பொருத்தப்பட்ட அனைத்து GPS சாதனங்களும் செயலிழந்து விட்டனவா என்ற கேள்விக்குப் பதிலளித்த பிரதியமைச்சர், அவ்வாண்டின் ஆரம்பப் பகுதியில், சுமார் 600 சாதனங்கள் செயலிழந்ததாகக் குறிப்பிட்டார். ஆனால், இவ்வாண்டில் தற்போது, சுமார் 800 சாதனங்கள் மாத்திரமே இயங்கிக் கொண்டிருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

பல்வேறு காரணங்களுக்காக அவை செயலிழந்துள்ளதாகத் தெரிவித்த அவர், அவற்றைப் பழைய நிலைக்குக் கொண்டுவருவதற்காக, பொருத்தமான சேவைகள் வழங்கும் நிறுவனமொன்றைத் தேர்ந்தெடுப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாகத் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X