2025 செப்டெம்பர் 14, ஞாயிற்றுக்கிழமை

‘விலை குறைப்பால் ரூ.100 மட்டுமே சலுகை’

Kogilavani   / 2016 நவம்பர் 17 , மு.ப. 04:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

2017 ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டத்தில் அத்தியாவசியப் பொருட்களின் விலைகளை குறைத்திருப்பதன் ஊடாக, நான்கு பேர் கொண்ட குடும்பத்தில் மாதமொன்றுக்கு 100 ரூபாய் மாத்திரமே சலுகை கிடைப்பதாக ஜே.வி.பியின்
எம்.பியான டொக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ குற்றஞ்சாட்டினார்.  

நாடாளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற வரவு - செலவுத் திட்டம் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.  

அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,  

வீதி விபத்துக்களைக் குறைப்பதற்கு வீதி ஒழுங்கை மீறுவோருக்கு எதிரான அபராதமும், வழக்குகள் அதிகம் குவிவதையும் தடுக்க விசேட கட்டணமும் வைத்தியசாலைகளில் அனுமதிப்பதைக் குறைக்கும் நோக்கிலான அறவீடும் விதித்துள்ள அரசாங்கம், குளிப்பதை குறைப்பதற்கான நீர் கட்டணத்தை உயர்த்தவும் தயாராவதாக அவர் கிண்டல் செய்தார்.  

2014ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், 2015இல் அரச வருமானம் 9.4 சதவீதத்தினாலேயே அதிகரிக்கப்பட்டது. ஆனால், 2016ல் இருந்து 2017ஆம் ஆண்டில் அரச வருமானத்தை 26.5 சதவீதத்தினால் உயர்த்தத் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக 385 பில்லியன் வரி வருமானம் பெற வரவு - செலவுத் திட்டத்தினூடாக பிரேரிக்கப்பட்டுள்ளது.  

99 பில்லியன் (18 சதவீதம்) நேரடி வரியாகவும் 290 பில்லியன் (82 சதவீதம்) மறைமுக வரியாகவும் அறவிடப்படவுள்ளது. ஆனால் 80 சதவீதமாக உள்ள மறைமுக வரியை 60 சதவீதமாக பிரதமர் அறிவித்திருந்தார்.   

தலா 4 வீட்டில் ஒரு வீட்டிலே கணனி இருப்பதால் தொழில்நுட்ப சார் சுயதொழிலில் ஈடுபட முடியும் என்றும் கூறியுள்ள நிதி அமைச்சர் இன்டர் நெட்டுக்கான வரியை 10இல் இருந்து 25 ஆக உயர்த்தியுள்ளார்.  

நீதிமன்றங்களில் வழக்குகள் குவிந்துள்ளதாகவும் இதனால் நீதிமன்ற நடவடிக்கைகள் தாமதடைந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ள அவர், வழக்கு தாக்கல் செய்வதைக் குறைக்க வழக்கு தாக்கல் வரி விதித்துள்ளார். வீதியில் வாகனங்கள் அதிகரித்துள்ளதோடு வீதி விபத்துக்களினால் இறப்போர் உயர்ந்துள்ளதாகவும் குறிப்பிட்டு குறைந்த பட்ச அபராத தொகையை 2,500 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .