2025 செப்டெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

‘இலட்சியத்தை யதார்த்தமாக்க திடசங்கற்பம் பூணுவோம்’

Editorial   / 2017 ஜூன் 08 , மு.ப. 06:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

சகவாழ்வுடன் வாழும் இலட்சியத்தை யதார்த்தமாக மாற்றிக் கொள்ளும் பொறுப்பு நம் அனைவருக்கும் காணப்படுகிறது. அதற்காக அர்ப்பணிப்புடன் செயற்பட இந்த பொசன் போயா தினத்தில் அனைவரும் திடசங்கற்பம் பூண வேண்டும் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, தனது வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

மஹிந்த தேரர் தலைமையிலான குழுவினரால் எமது தாய் நாட்டிற்கு அறிமுகப்படுத்தப்பட்ட சுதந்திர சிந்தனை, அகிம்சை, அன்பு என்பவற்றை அடிப்படையாகக் கொண்ட தூய பௌத்த மதம் முழு தேசத்திலும் மாபெரும் மறுமலர்ச்சியை ஏற்படுத்தியது.

பௌத்த சமயக் கோட்பாடுகளினால் முழு இலங்கை மக்களையும் மும்மணிகளின் ஆசியை வேண்டிச் செல்லும் பக்திமிகு மக்களாக மாற்றியமைக்க முடிந்தது. அந்தப் புது உயிர்ப்பு மனித உள்ளங்களில் மாத்திரம் நின்று விடாது, ஆட்சி பீடம், இலக்கியக் கலைகள், விவசாயம், நீர்ப்பாசனம் போன்ற துறைகள் உட்பட முழு நாட்டிற்கும் பரவிச் சென்றது.

தூய தேரவாத பௌத்த மதத்தின் புகலிடமான எமது நாடு, படிப்படியாக அதன் கேந்திர நிலையமாக மாற்றமடைந்தது. உலகம் முழுவதும் பௌத்த மதத்தைப் பரப்புவதற்காக எம்மால் சிறந்த பணிகளை ஆற்ற முடிந்தமை மகிழச்சியான விடயமாகும். இம்முறை சர்வதேச வெசாக் தின வைபவம் மற்றும் உலக பௌத்த மாநாடு என்பன அதன் பிரதிபலனாகவே இலங்கையில் நடைபெறுகின்றன.

அந்தப் பணியை மேலும் முன்னெடுத்துச் செல்ல பௌத்த சமயக் கோட்பாடுகளின் உண்மையான உள்ளடக்கத்தைக் கொண்டு எமது வாழ்வினை வளப்படுத்திக் கொள்ள வேண்டும். ஏனைய மதங்கள் மற்றும் கலாசாரங்களுக்கு மதிப்பளித்து, மானிடத்துக்கு மதிப்பளித்து, சகவாழ்வுடன் வாழும் இலட்சியத்தை யதார்த்தமாக மாற்றிக் கொள்ளும் பொறுப்பு நம் அனைவருக்கும் காணப்படுகிறது. அதற்காக அர்ப்பணிப்புடன் செயற்பட இந்த பொசன் போயா தினத்தில் அனைவரும் திடசங்கற்பம் பூண வேண்டும் என்றும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .