Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை
George / 2016 ஓகஸ்ட் 15 , மு.ப. 09:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
மறைந்த நா.முத்துக்குமார் தமிழ் சினிமா மீதும் தன்னுடைய எழுத்துக்கள் மீதும் எந்தளவுக்கு பற்று வைத்திருந்தாரோ, அதே அளவுக்கு தனது குடும்பத்தின் மீதும் அளவு கடந்த பாசம் வைத்திருந்தார்.
நா.முத்துக்குமார் தனது மரணத்திற்கு முன்பு தனது மகனுக்கு ஒரு தந்தையாக அவருடைய நடையில் ஒரு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அந்த கடிதம் தற்போது வெளிவந்துள்ளது.
அன்புள்ள மகனுக்கு அப்பா எழுதுவது,
இது நான் உனக்கு எழுதும் முதல் கடிதம். இதைப் படித்துப் புரிந்துகொள்ளும் வயதில் நீ இல்லை. மொழியின் விரல் பிடித்து நடக்கப் பழகிக்கொண்டு இருக்கிறாய். வயதின் பேராற்றாங்கரை உன்னையும் வாலிபத்தில் நிறுத்தும். சிறகு முளைத்த தேவதைகள் உன் கனவுகளை ஆசீர்வாதிப்பார்கள். பெண் உடல் புதிராகும். என் தகப்பன் என்னிடமிருந்து ஒளித்து வைத்த இரகசியங்கள் அடங்கிய பெட்டியின் சாவியை நான் தேட முற்பட்டதைபோல நீயும் தேடத் தொடங்குவாய். பத்திரமாகவும் பக்குவமாகவும் இருக்க வேண்டிய பருவம் அது. உனக்குத் தெரியாதது இல்லை. பார்த்து நடந்து கொள்.
நிறைய பயணப்படு. பயணங்களின் ஜன்னல்களே முதுகுக்குப் பின்னாலும் இரண்டு கண்களைத் திறக்கின்றன. புத்தகங்களை நேசி. ஒரு புத்தகததை தொடுகிறபோது நீ ஓர் அனுபவத்தைத் தொடுவாய். உன் பாட்டனும் தகப்பனும் புத்தகங்களின் காட்டில் தொலைந்தவர்கள். உன் உதிரத்திலும் அந்த காகித நதி ஓடிக்கொண்டே இருக்கட்டும்.
கிடைத்த வேலையைவிட பிடித்த வேலையைச்செய். இனிய இல்லறம் தொடங்கு. யாராவது கேட்டால் இல்லை எனினும் கடன் வாங்கியாவது உதவி செய். அதில் கிடைக்கும் ஆனந்தம் அலாதியானது. உறவுகளிடம் நெருங்கியும் இரு. விலகியும் இரு. இந்த உலகில் எல்லா உறவுகளையும்விட மேன்மையானது நட்பு மட்டுமே. நல்ல நண்பர்களைச் சேர்த்துக்கொள். உன் வாழ்க்கை நேராகும்.
இவையெல்லாம் என் தகப்பன் எனக்கு சொல்லாமல் சொன்னவை. நான் உனக்கு சொல்ல நினைத்துச் சொல்பவை. என் சந்தோஷமே நீ பிறந்த பிறகுதான். என் தகப்பனின் அன்பையும் அருமையையும் நான் அடிக்கடி உணர்கிறேன்.
நாளை உனக்கொரு மகன் பிறக்கையில் என் அன்பையும் அருமையையும் நீ உணர்வாய். நாளைக்கும் நாளை நீ உன் பேரன் பேத்திகளுடன் ஏதோ ஒரு ஊரில் கொஞ்சிப்பேசி விளையாடிக்கொண்டு இருக்கையில் என் ஞாபகம் வந்தால், இந்தக் கடிதத்தை எடுத்துப் படித்துப்பார். உன் கண்களில் இருந்து உதிரும் கண்ணீர்த் துளியில் வாழ்ந்து கொண்டிருப்பேன் நான்.
இவ்வாறு அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
44 minute ago