Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 14, புதன்கிழமை
George / 2016 ஓகஸ்ட் 15 , மு.ப. 04:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
திருஷ்டி கழிந்தது என்றார்கள்
தீர்க்காயுசு என்றார்கள்
படபடத்தோம் என்றார்கள்
எப்போதோ எழுதிய
என் கவிதையைச் சொன்னேன்..
'இறந்துபோனதை
அறிந்த பிறகுதான்
இறக்க வேண்டும் நான்'
இந்த கவிதை வரிகளுக்கு சொந்தத்காரரான பாடலாசிரியர் நா.முத்துக்குமார் இன்று நம்மிடத்தில் இல்லை... நேற்றுவரை எழுதிக் கொண்டிருந்த கைகள், இப்படி திடீரென்று ஸ்தம்பித்து விடுமென்று யாரும் எண்ணவில்லை. சதா காலமும் கவிதை கவிதை என்று சிந்தித்துக் கொண்டிருந்த மூளை இப்படி நிரந்தரமாக ஓய்வெடுக்கும் என்று யாரும் நினைத்துக்கூட பார்க்கவில்லை. காணும் காட்சிகளை கவிதையாக பார்த்துக் கொண்டிருந்த அந்த கவிக் கண்கள் இப்படி நிரந்தரமாக மூடிக்கொள்ளும் என்று யாருக்கு தெரியும்.
'கடவுளுடன் சீட்டாடுவது
கொஞ்சம் கடினமானது
எவ்வளவு கவனமாக இருந்தாலும்
பார்க்காமலே அறிந்துக்கொள்கிறார்'
என்று வாழக்கையை வரிகளில் சொன்னவர் இன்று அதனை கடவுளிடம் நேரில் காட்டுவதற்கு சென்று விட்டார்.
தமிழ் திரையுலகுக்கு கொஞ்ச காலமாக சோகம் தரும் நிகழ்வுகளே நடைபெற்று வருகின்றன. தமிழ் சினிமாவின் வளர்ச்சிக்கு கைகொடுத்த பலர் எம்மைவிட்டு காணாமல் போய்கொண்டிருக்கின்றனர். வியட்நாம் வீடு சுந்தரம், பஞ்சு அருணாச்சலம், ஜோதிலட்சுமி ஆகிய திரையுலக பிரமுகர்கள் மறைவு என அடுத்தடுத்து நடந்த அதிர்ச்சியை விட்டு தமிழ் திரையுலகம் இன்னும் மீளவில்லை.
இந்நிலையில், மேலும் ஒரு அதிர்ச்சியாக இளம் பாடலாசிரியர் நா.முத்துக்குமாரின் மரணம் நேற்று காலையில் எல்லோரையும் கண்கலங்க வைத்துள்ளது. மஞ்ச காமாலை நோயால் பாதிக்கப்பட்டிருந்த அவர், கடந்த சில நாட்களாக வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் நேற்று காலை வைத்தியசாலையில் இருந்தவாறு அவரது உயிர் பிரிந்தது.
தமிழ் சினிமாவில் பிரபல கவிஞராக, பாடலாசிரியராக வலம் வருபவர் நா.முத்துக்குமார். காஞ்சிபுரம் மாவட்டம் கன்னிகாபுரத்தில் 1975ஆம் ஆண்டு பிறந்தார். ஆரம்பத்தில் இயக்குநராக பணியாற்ற விரும்பினார். அதற்காக இயக்குநர் பாலுமகேந்திராவிடம் நான்கு வருடங்கள் பணியாற்றினார்.
இந்நிலையில், சீமான் இயக்கத்தில் வெளிவந்த வீரநடை திரைப்படத்தின் மூலம் பாடலாசிரியராக அறிமுகமானார்.
அதன்பிறகு, பாடல்கள் எழுவதில் அவருக்கு அதீத ஆர்வம் ஏற்பட்டு விட்டது. இதுவரை 1500க்கும் அதிகமான பாடல்களை எழுதியுள்ளார். தற்போதும் கூட 100 திரைப்படங்களுக்கு பாடல்கள் எழுதி வந்தார். இதில் ரஜினிகாந்த் நடித்து வரும் 2.ஓ திரைப்படமும் அடங்கும்.
பல முன்னணி நட்சத்திரங்களின் திரைப்படங்களுக்கு, முன்னணி இசையமைப்பாளர்களுடன் இணைந்து பணியாற்றியிருக்கிறார்.
2012ஆம் ஆண்டில் மட்டும் சுமார் 103 பாடல்கள் எழுதியவர் என்ற பெருமையை பெற்ற முத்துகுமார், தங்கமீன்கள், சைவம் ஆகிய திரைப்படங்களில் எழுதிய பாடலுக்காக இரண்டு முறை தேசிய விருதைப் பெற்றுக் கொண்டார்.
தங்கமீன்கள் திரைப்படத்தில் 'ஆனந்த யாழை மீட்டுகிறாய்...' என்ற பாடலுக்காகவும், சைவம் திரைப்படத்தில் 'அழகே அழகே எதுவும் அழகே...' என்ற பாடலுக்குமே தேசிய விருது கிடைத்தது.
வெயில், சிவாஜி, கஜினி, சிவா மனசுல சக்தி, அயன்... போன்ற திரைப்படங்களுக்கு பாடல் எழுதி சிறந்த பாடலாசிரியருக்கான விருதுகளை வாங்கியிருக்கிறார்.
நியூட்டனின் மூன்றாம் விதி (கவிதைத் தொகுப்பு), கிராமம் நகரம் மாநகரம், பட்டாம்பூச்சி விற்பவன் (கவிதைத் தொகுப்பு), ஆணா ஆவண்ணா, என்னை சந்திக்க கனவில் வராதே, சில்க் சிட்டி, பால காண்டம், குழந்தைகள் நிறைந்த வீடு, வேடிக்கை பார்ப்பவன் ஆகிய நூல்கள் இவரால் எழுதப்பட்டவைதான்.
சென்னை அண்ணாநகரில் வசித்து வந்த முத்துகுமார், காஞ்சிபுரத்தில் இளநிலை இயல்பியல் பட்டம் முடித்ததுடன் சென்னையில் எம்எஸ்சி மற்றும் டொக்டர் பட்டம் பெற்றுள்ளார்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் இவரது தந்தை, அன்னை புத்தகம் என்ற நூலத்தை தனது சொந்த முயற்சியில் வைத்திருந்தார். தனது தந்தையின் ஆர்வத்தால் முத்துக்குமாருக்கு கவிதை, பாடல்கள் எழுதும் ஆர்வம் ஏற்பட்டது.
41 வயதாகும் நா.முத்துக்குமாருக்கு தீபலட்சுமி என்ற மனைவி (37), மகன் ஆதவன் (9) மற்றும் மகள் யோகலட்சுமி (8) உள்ளனர்.
பெரும்பாலான இசையமைப்பாளர்களுடன் நா.முத்துகுமார் பணியாற்றியிருந்தாலும் அதில் யுவன் சங்கர் ராஜாவின் இசையிலேயே அதிக பாடல்களை எழுதி உள்ளார். 2007ஆம் ஆண்டு க்ரீடம் திரைப்படத்தின் மூலம் வசனகர்த்தாவாகவும் அறிமுகம் ஆனார்.
2005ஆம் ஆண்டு தமிழக அரசின் சிறந்த பாடலாசிரியர் விருதினையும், பல பிலிம்பேர் விருதுகளையும் இவர் பெற்றுள்ளார். சுமார் 11 புத்தகங்களுக்கு மேல் எழுதி உள்ளார்.
திரையுலக பிரபலங்கள் இரங்கல்
அவரது மறைவு செய்தியை கேட்டு திரையுலக பிரபலங்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். பலர் இரங்கல் தெரிவித்ததுடன், நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
பாடலாசிரியர் ஸ்நேகன் : 'நா.முத்துக்குமார் மிகவும் எளிமையானவர். குழந்தைகளிடமும், குடும்பத்திடமும் மிகவும் பாசம் கொண்டவர். அவரை காலம் இவ்வளவு சீக்கிரம் அழைத்துச் சென்றதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை'.
கங்கை அமரன் : 'முத்துக்குமாரின் மறைவு அதிர்ச்சியளிக்கிறது'.
இயக்குநர் விக்ரமன் : 'முத்துக்குமாரின் மறைவு எழுத்துலகுக்கு மிகப் பெரிய இழப்பு'.
மதன் கார்க்கி : 'பழகுவதற்கு மிகவும் இனிமையானவர் முத்துக்குமார்'.
இயக்குநர் வெற்றிமாறன் : 'முத்துக்குமார் அனைவரிடமும் எளிமையாக பழகக் கூடியவர். உதவி இயக்குநர்களுக்கு பல்வேறு உதவிகளை செய்தவர்'.
இயக்குநர் சமுத்திரக்கனி : 'சமூகத்தின் மீது மிகுந்த மரியாதை கொண்டவர். அவரது மறைவு மிகுந்த வேதனை அளிக்கிறது'.
இயக்குநர் சீமான் : 'மிகச் சிறந்த எழுத்தாளர், பாடலாசிரியர், கவிஞர். அறிவுமதியின் அரவணைப்பில் நாங்கள் அனைவரும் இருந்து வந்தோம். இயக்குநராக வேண்டும் என ஆசைப்பட்டார். ஆனால், அவரிடம் இருந்த கவிதை ஆற்றலை பார்த்து நான் தான் கவிஞராக அறிமுகம் செய்தேன். மரணச் செய்தி பேரதிர்ச்சியாக உள்ளது. மதிப்பு மிக்க பேரறிஞரை இழந்து விட்டது பேரதிர்ச்சியாக, பேரிழப்பாக உள்ளது'.
தமிழ் சினிமாவுக்கு அவரது தேவை, சேவை இத்துணை விரைவில் முடிவுக்கு வரும் என்று யாரும் விளையாட்டுக்குக்கூட நினைத்திருக்க மாட்டார்கள். அவர் எம்மைவிட்டு சென்றாலும் அவர எழுதிய பாடல் வரிகள் மூலம் தன்னை ஞாபகப்படுத்தி கொண்டிருப்பார். அவர் எழுதிய 100 திரைப்படங்களின் பாடல்கள் வெளிவரும்போது இன்றைய சோகம் இன்னும் அதிகமாகுமே தவிர குறையாது.
தேசிய விருது பெற்ற கவிஞர் அமரர் நா.முத்துகுமாரின் ஆன்மா சாந்தியடை பிரார்த்திப்பதுடன் அவரது உறவினருக்கு தமிழ்மிரரின் ஆழ்ந்த அனுதாபங்கள்.
'நான் ஏன் நல்லவனில்லை
என்பதற்கு மூன்று காரணங்கள்.
ஒன்று
நான் கவிதை எழுதுகிறேன்.
இரண்டு
அதைக் கிழிக்காமலிருக்கிறேன்.
மூன்று
உங்களிடம் அதைப்
படிக்கக் கொடுக்கிறேன்.'
- நா.முத்துக்குமார்
- ஜே.ஏ.ஜோர்ஜ்
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
2 hours ago