Editorial / 2026 மார்ச் 18 , மு.ப. 08:49 - 0 - {{hitsCtrl.values.hits}}

நடிகர் விஜய்யின் இறுதித் திரைப்படமாக அறிவிக்கப்பட்டுள்ள ‘ஜனநாயகன்’ வெளியாவதில் அடுத்தடுத்து முட்டுக்கட்டைகள் ஏற்பட்டு வருகின்றன. தணிக்கைக்குழுவின் புதிய பரிந்துரையால் படத்தின் வெளியீடு மீண்டும் கேள்விக்குறியாகியுள்ளது.
கேவிஎன் புரொடக்சன்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இத்திரைப்படம், முதலில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 9ஆம் திகதி வெளியாகவிருந்தது. எனினும், படத்திற்கு தணிக்கைச் சான்றிதழ் வழங்கப்படாமல் மறுஆய்வுக்கு (Revising Committee) பரிந்துரைக்கப்பட்டதால் இதன் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, தணிக்கைச் சான்றிதழ் வழங்க உத்தரவிடுமாறு தயாரிப்பு நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது. ஆனால், நீதிமன்றத் தீர்ப்பு சாதகமாக அமையாததால் படத்தின் வெளியீடு மேலும் தாமதமானது. பின்னர் உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றம் எனப் பல சட்டப் போராட்டங்களுக்குப் பிறகு, படக்குழு வழக்குகளைத் திரும்பப் பெற்றுக்கொண்டு படத்தை மீண்டும் மறுதணிக்கைக்கு அனுப்பியது.
கடந்த மார்ச் 9ஆம் திகதி திட்டமிடப்பட்டிருந்த மறுஆய்வு, குழு உறுப்பினர் ஒருவரின் உடல்நலக்குறைவு காரணமாக ஒத்திவைக்கப்பட்ட நிலையில், நேற்று மும்பையில் தணிக்கைக்குழுவினர் ‘ஜனநாயகன்’ படத்தை முழுமையாகப் பார்வையிட்டனர்.
தற்போது இப்படத்தில் அரசியல் சார்ந்த கருத்துகள் அதிகளவில் இடம்பெற்றுள்ளதால், தேர்தல் ஆணைய அதிகாரிகள் இதனைப் பார்வையிட வேண்டும் என தணிக்கைக்குழு பரிந்துரை செய்துள்ளது. இதன் காரணமாக, படம் வெளியாவது குறித்த இறுதி முடிவைத் தேர்தல் ஆணையமே எடுக்கும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. இது விஜய் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பையும் ஒருவித கலக்கத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .