2023 மார்ச் 30, வியாழக்கிழமை

காற்றில் கலந்தார் ‘கான சரஸ்வதி’ வாணி ஜெயராம்: பிரதமர் இரங்கல்

Editorial   / 2023 பெப்ரவரி 05 , மு.ப. 10:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

“வாணி ஜெயராம் தனது இனிமையான குரலால் நினைவுகூரப்படுவார்” என பிரதமர் மோடி புகழஞ்சலி இரங்கல் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில்,

“திறமையான வாணி ஜெய்ராம் ஜி, பல்வேறு மொழிகளை உள்ளடக்கிய மற்றும் பல்வேறு உணர்வுகளை பிரதிபலிக்கும் அவரது இனிமையான குரலால் நினைவுகூரப்படுவார். அவரது மறைவு படைப்புலகிற்கு பெரும் இழப்பாகும். அவரது குடும்பத்தினருக்கும் ரசிகர்களுக்கும் இரங்கல்கள்” என தெரிவித்துள்ளார்.

பிரபல பின்னணி பாடகர் வாணி ஜெயராம் சென்னையில் உள்ள அவரது வீட்டில் சனிக்கிழமை காலமானார். அவருக்கு வயது 78. அண்மையில் அவருக்கு பத்ம பூஷண் விருது அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. அவரது மறைவுக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், குஜராத்தி, இந்தி, உட்பட பல்வேறு மொழிகளில் பாடல்களை பாடியுள்ளார் வாணி ஜெயராம். 1000-க்கும் அதிகமான படங்களில் 10,000-க்கு அதிகமான பாடல்களை பாடிய வாணி ஜெயராமுக்கு, இந்த ஆண்டு குடியரசு தினத்தையொட்டி பத்ம பூஷண் விருது அறிவிக்கப்பட்டிருந்தது. சிறந்த பாடகருக்கான தேசிய விருதை 3 முறை வென்றவர், 19 மொழிகளில் பாடல்களை பாடியுள்ளார். தமிழகம், ஆந்திரா, குஜராத், ஒடிசா மாநில அரசுகளின் விருதுகளைப் பெற்றவர்.

பிரபல பின்னணி பாடகி வாணி ஜெயராம். இவரது கணவர் ஜெயராம் கடந்த 2018-ம் ஆண்டு உடல் நலக்குறைவால் காலமானார். இதையடுத்து சென்னை நுங்கம்பாக்கம் ஹாடோஸ் சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தனியாக வசித்து வந்தார். அவருக்கு உதவியாக மலர்கொடி என்ற பணிப்பெண் வேலை பார்த்து வந்துள்ளார். இவர், நேற்று சனிக்கிழமை காலை வழக்கம் போல, சுமார் 10 மணியளவில், வாணி ஜெயராம் வீட்டுக்கு வந்தார். அப்போது வெகுநேரமாக கதவைத் தட்டியும் திறக்கவில்லை.

இதையடுத்து, தனது செல்போன் மூலம் வாணி ஜெயராமை அவர் தொடர்பு கொண்டார். அவர் அழைப்பை எடுக்காததால் சந்தேகமடைந்த அவர் அக்கம்பக்கத்தினரிடம் தெரிவித்துள்ளார்.

அவர்கள் பொலிஸாருக்கு தகவல் கொடுத்தனர். விரைந்து வந்த ஆயிரம் விளக்கு பொலிஸார், ஆழ்வார்ப்பேட்டையில் வசிக்கும் வாணி ஜெயராமின் தங்கையை வரவழைத்து அவரிடம் இருந்த மற்றொரு சாவி மூலம் கதவைத் திறந்து பார்த்தனர்.

அப்போது, வாணி ஜெயராம் நெற்றியில் காயத்துடன் படுக்கை அறையில் மயங்கிய நிலையில் விழுந்து கிடந்தார். அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.

இதையடுத்து வாணி ஜெயராம் உடலை கைப்பற்றிய பொலிஸார் ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனை முடிந்து அவரது உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

இது குறித்து பொலிஸார் தரப்பில் கூறுகையில், ‘வயது முதிர்வின் காரணமாக வாணி ஜெயராம் படுக்கை அறையில் நிலைத்தடுமாறி, கண்ணாடி மேஜை மீது விழுந்து நெற்றியில் அடிப்பட்டு உயிரிழந்திருக்கலாம். இது தொடர்பாக, சந்தேக மரணம் என்று வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறோம். அவர் நிலைத்தடுமாறி விழுந்து உயிரிழந்தாரா, வேறு ஏதும் காரணமா? என்பது பிரேத பரிசோதனை அறிக்கைக்கு பின் தெரியவரும்’ என்றனர்.

பணிப்பெண் மலர்கொடி கூறும்போது, ‘நான் கடந்த 10 ஆண்டுகளாக இவர் வீட்டில் பணிபுரிகிறேன். தினமும், காலை 10.15 மணி முதல் மதியம் 12 மணி வரை வீட்டு வேலை செய்வேன். அவர் நல்ல உடல் நலத்துடன் தான் இருந்தார். பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டதில் இருந்து அவருக்கு வாழ்த்து தெரிவிக்க பலர் வந்து சென்றுகொண்டிருந்தனர். அவர் இறப்பு மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது’ என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .