2025 மே 19, திங்கட்கிழமை

கமலுக்கு 'பத்மபூஷண்' விருது...!

Menaka Mookandi   / 2014 ஜனவரி 26 , மு.ப. 10:27 - 0     - {{hitsCtrl.values.hits}}


இந்திய அரசின் உயரிய விருதுகளில் மூன்றாவது நிலையில் இருக்கும் பத்மபூஷண் விருது, உலக நாயகன் கமல் ஹாஸனுக்கு இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக அவருக்கு பாராட்டுகளும் வாழ்த்துகளும் குவிந்து வருகின்றன. ஏற்கெனவே மத்திய அரசின் பத்மஸ்ரீ விருது பெற்றவர் கமல்ஹாஸன். அவரை அனைத்து நிகழ்ச்சிகளிலும் பத்மஸ்ரீ கமல் ஹாஸன் என்றே அழைத்து வந்தனர். இந்த ஆண்டு பத்மபூஷண் விருது அவருக்குக் கிடைத்துள்ளது.

தமிழ் திரையுலகைச் சேர்ந்த பலரும் வரிசையாக அவரது ஆழ்வார்ப்பேட்டை அலுவலகத்துக்கு வந்து மாலைகள் அணிவித்தும், பூங்கொத்து வழங்கியும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த கமல் ஹாஸன், 'பத்மபூஷண் விருதுக்கு தகுதி பெற வைத்த மக்கள், பாரத ரத்னாவுக்கும் என்னைத் தகுதி பெற வைப்பார்கள்' என்றார்.

'இந்த விருதுக்கு தகுதியானவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். எனக்கு கற்றுக் கொடுத்தவர்கள் கூட இந்த விருதை வாங்காமலேயே போய் உள்ளனர். எனக்கு இந்த விருது கிடைத்துள்ளது. செய்ததற்காக மட்டும் இது கிடைக்கவில்லை. செய்யப் போவதற்காக கிடைத்துள்ள விருதாக இந்த விருதினை நான் கருதுகிறேன்.

பல துறைகளிலும் திறமை கொழிக்கும் நாடு நம் நாடு. முக்கியமாக நான் பணியாற்றும் துறையில் தகுதியானவர்கள் பலரும் இருக்கையில் என் பெயர் பத்மபூஷண் பட்டியலில் இடம் பெற்றது எனக்கு கிடைத்த பெரும் பேறாக நான் கருதுகிறேன்.

அரசுக்கு நன்றி, தேர்வாளர்களுக்கு நன்றி. இந்த பட்டத்திற்கு தகுதி உள்ளவனாக இனிமேல்தான் நான் ஆக வேண்டும் என்ற எண்ணம் என்னுள் இருக்கிறது. நன்றி இந்தியாவிற்கு, நன்றி அன்பிற்கு, பத்மபூஷண் விருது பெற்ற மற்ற சாதனையாளர்களுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகள் முக்கியமாக என் நண்பர் வைரமுத்துக்கும் வாழ்த்துகள்.

இந்த நாட்டில் மக்கள் கொடுக்கும் விருதுதான் முதன்மையானது. மற்றதெல்லாம் அடுத்த கட்டம். இந்த விருதும் அப்படித்தான். இது சுதந்திர போராட்டம் மாதிரி. இதற்கு சம்பளம் கேட்க கூடாது. கிடைத்தாலும் சரி, கிடைக்காவிட்டாலும் சரி. இந்த விருதுக்கு மக்கள் என்னை தகுதியாக்கியது மாதிரி பாரத ரத்னா விருதுக்கும் ஒரு நாள் தகுதி பெற வைப்பார்கள்.

எனக்கு கற்றுக் கொடுத்தவர்களுக்கும், எனது குடும்பத்தினருக்கும் இந்த விருதை சமர்ப்பணம் செய்கிறேன். பொதுவாக எல்லோரும் பணம் வாங்கிக் கொண்டு கற்றுக் கொடுப்பார்கள். ஆனால் எனக்கு சம்பளம் கொடுத்து கற்றுக்கொடுத்தனர். கே.பாலச்சந்தர், சண்முகம் அண்ணாச்சி போன்றோர் எனக்கு சம்பளம் தந்து கற்றுத்தந்தனர். இது மறக்க முடியாத நன்றிக் கடன். தீர்க்க முடியாத நன்றிக் கடன்.

எனக்கு வரும் இகழ்வுகளை மட்டுமே என் தனிச்சொத்தாக எடுத்துக் கொள்வேன். புகழ் வரும்போது மற்றவர்களுடன் பங்கிட்டுக் கொள்வேன். நாம் இந்த ஊரில் வியாபாரம் செய்கிறோம். நமக்கு ஐ.எஸ்.ஐ. தான் (தரச்சான்று) தேவை. அந்த நாட்டுக்கு போகும் போதுதான் யு.எஸ்.ஐ. வேண்டும். தேவைப்பட்டால் போய்தான் ஆக வேண்டும். அவர்களுக்கு நான் தேவைப் பட்டாலோ எனக்கு அவர்கள் தேவைப்பட்டாலோ அது நடக்கும். விஸ்வரூபம் 2 திரைப்படம் முடிந்து விட்டது. இசை மற்றும் தொழில் நுட்ப பணிகள் நடந்து வருகின்றன' என்றார்.


சினிமா உலகில் இரு சிகரங்களாகத் திகழ்பவர்கள் ரஜினியும் கமலும். இருவரும் ஒருவரை ஒருவர் நேசிப்பதிலும் மதிப்பதிலும் இளம் தலைமுறை கலைஞர்களுக்கே எடுத்துக்காட்டாக உள்ளனர். ஒருவருக்குச் சோதனை என்றாலும் கௌரவம் கிடைத்தாலும் உடனடியாக அதில் பங்கேற்கும் உன்னதமான நண்பர்களாகத் திகழ்கின்றனர்.

கடந்த முறை விஸ்வரூபம் திரைப்படத்துக்கு பிரச்சினை வந்தபோது, ரூ 100 கோடியைக் கொட்டி படமெடுத்துவிட்டு, அதை வெளியிட முடியாத சூழலில் உள்ள கமலின் தவிப்பை நினைத்து மனம் கலங்குகிறேன், என அறிக்கை வெளியிட்டவர் ரஜினி. கமல் பிறந்த நாள் அல்லது அவருக்கு விருதுகள் கிடைக்கும்போது முதல் வாழ்த்து ரஜினியிடமிருந்துதான் வரும். இப்போது கமல் பத்மபூஷண் விருது பெற்றிருப்பதால், அதற்கு ரஜினி வாழ்த்து தெரிவித்தாரா என்று நிருபர்கள் கமலிடம் கேட்டனர்.

அதற்கு பதிலளித்த கமல், 'ரஜினியை நான் அறிவேன்... என்னை அவர் அறிவார்... அவர் கடைசியாக வாழ்த்தினாலும் முதலில் வாழ்த்தினாலும் எனக்கு ஒன்றே. அவருக்கும் நான் அப்படியே. எங்களுக்குள் அந்த புரிதல் இருக்கிறது. அவர் கண்டிப்பாக வாழ்த்துவார். எதிலும் அவர் நிதானமாகத்தான் செயல்படுவார் என்பது எனக்கு தெரியும்' என்றார்.

நாட்டின் மூன்றாவது உயரிய விருதாகக் கருதப்படும் பத்மபூஷண் விருது, தமிழ் நடிகர்களில் இதற்கு முன் சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு ஏற்கெனவே வழங்கப்பட்டுள்ளது. இசைஞானி இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மானுக்கும் இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. தற்போது உலக நாயகன் கமல் ஹாஸனுக்கும் கவிப் பேரரசு வைரமுத்துவுக்கும் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X