2025 மே 19, திங்கட்கிழமை

சூர்யா வீட்டில் தீ; ஹன்சியின் சிறுவர் இல்லம்; நயனின் ஆயுர்வேதம்; முஸ்லிமானார் யுவன்

Menaka Mookandi   / 2014 பெப்ரவரி 09 , மு.ப. 10:09 - 0     - {{hitsCtrl.values.hits}}


சூர்யா வீட்டில் தீ...


நடிகர் சூர்யாவின் தியாகராய நகரில் கட்டி வரும் புதிய வீட்டில் தீ விபத்து ஏற்பட்டது. தீயணைப்பு மற்றும் கட்டிடத் தொழிலாளர்களின் உடனடி நடவடிக்கையால் உரிய நேரத்தில் தீ அணைக்கப்பட்டு பெரும் சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது.

நடிகர் சிவக்குமாரின் மூத்த மகன் நடிகர் சூர்யா. பிரபல நடிகரான இவரது மனைவி ஜோதிகாவும், தம்பி கார்த்தியும் திரைத் துறையைச் சேர்ந்தவர்களே. நடிகர் சூர்யா, சென்னை தியாகராயநகர் சரவண முதலி தெருவில் புதிய வீடு ஒன்றைக் கட்டி வருகிறார். தனது பெற்றோர் மற்றும் தம்பி குடும்பத்தார் என அனைவரும் தங்கள் குடும்பத்துடன் இணைந்து வாழும் வகையில் அந்த வீடு கட்டப்பட்டு வருகிறது.

அந்த வீட்டிற்கான கட்டுமானப்பணியில் ஈடுபட்டுள்ளவர்கள் தங்குவதற்கென புதிய கட்டிடம் அருகிலேயே ஒரு கழிவறை கட்டப்பட்டு, அதன் கூரை மீது ஓலைகள் போடப்பட்டு இருந்தன. எதிர்பாராத விதமாக அந்தக் கூரையில் தீ பிடித்துள்ளது. உடனடியாக அங்கு வேலை செய்து கொண்டிருந்தவர்கள் அனைவரும் ஓடிவந்து தண்ணீரை ஊற்றி தீயை அணைத்துள்ளனர்.

அதற்குள் தகவல் அறிந்து விரைந்து வந்த தியாகராயநகர் தீயணைப்பு படையினர் தீ விபத்துக் குறித்து விசாரணை நடத்தினார்கள். யாரோ கட்டிடப் பணியாள் குடித்து விட்டு வீசிய சிகரெட் துண்டே தீவிபத்திற்குக் காரணமாக இருக்கலாம் எனக் கூறப்படுகிறது. எனினும், உரிய நேரத்தில் தீ அணைக்கப்பட்டதால், பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.



சிறுவர் இல்லம் கட்டுகிறார் ஹன்சிகா...

ஹன்சிகா தான் தத்தெடுத்துள்ள குழந்தைகளுக்காக ஒரு இல்லத்தை கட்டவிருக்கிறார். நடிகை ஹன்சிகா தனது ஒவ்வொரு பிறந்தநாள் அன்றும் ஒரு குழந்தையை தத்தெடுக்கிறார். இது தவிர ஆதரவற்று நிற்கும் குழந்தைகளையும் தத்தெடுத்துக்கொள்கிறார். இப்படி அவர் இதுவரை மொத்தம் 24 குழந்தைகளை தத்தெடுத்து அவர்களின் கல்விச் செலவை கவனித்து வருகிறார்.

தான் தத்தெடுத்துள்ள குழந்தைகளுக்காக மும்பையில் ஒரு இல்லம் கட்ட வேண்டும் என்று ஹன்சிகா ஆசைப்படுகிறார். அவரது ஆசை நிறைவேறும் காலம் தூரத்தில் இல்லை. ஹன்சிகா நாகர்ஜுனாவின் மகன் நாக சைதன்யா ஜோடியாக தெலுங்கில் துர்கா என்ற திரைப்படத்தில் நடிக்கிறார். இந்த திரைப்படத்தில் தனக்கு கிடைக்கும் சம்பளத்தை ஹன்சிகா தொடப்போவதில்லை.

துர்கா திரைப்படத்தின் சம்பளத்தை வைத்து மும்பையில் ஒரு இடம் வாங்கிப் போட்டு அதில் தான் தத்தெடுத்துள்ள குழந்தைகளுக்காக ஒரு இல்லத்தை கட்டவிருக்கிறார் ஹன்சிகா. ஹன்சிகா இளம் நடிகர்களுடன் நடித்து வருகிறார். இதனால் உடல் எடையைக் குறைக்க உணவுக் கட்டுப்பாட்டில் உள்ளார். தான் நடிக்கும் ஹீரோக்கள் ஒல்லியாக இருந்து தான் மட்டும் குண்டாக இருக்கக் கூடாது என்று அவர் நினைக்கிறாராம்.



நயனின் ஆயர்வேத குளியல்...


மேனியை மினுமினுப்பாக வைத்துக்கொள்ள மிகுந்த பொருட் செலவில் நயன்தாரா ஆயுர்வேத குளியல் எடுத்து வருகிறாராம். இரண்டாவது இன்னிங்ஸில் நயன்தாராவின் கெரியர் சூப்பராக உள்ளது என்று தான் கூற வேண்டும். கடந்த ஆண்டு ராஜா ராணி, ஆரம்பம் ஆகிய 2 வெற்றித் திரைப்படங்களில் நடித்தார். இந்த ஆண்டும் அவருடைய திரைப்படங்கள் ரிலீஸாகின்றன.

காதலர் தினத்தன்று நயன்தாரா உதயநிதி ஸ்டாலினுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ள இது கதிர்வேலன் காதல் திரைப்படம் ரிலீஸாகிறது. இந்த ஜோடி அடுத்ததாக நண்பேன்டா திரைப்படத்திலும் சேர்ந்து நடிக்கவிருக்கிறது.

நயன்தாரா தனது முன்னாள் காதலரான சிம்புவுடன் சேர்ந்து இயக்குனர் பாண்டிராஜின் இது நம்ம ஆளு திரைப்படத்தில் நடித்து வருகிறார். முன்னாள் காதலர்கள் ஜோடி சேர்ந்துள்ளதால் இந்த திரைப்படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

பல ஆண்டுகளாக நடித்து வருகின்ற போதிலும் நயன்தாராவுக்கு மவுசு மட்டும் குறையவில்லை. அவருடன் சேர்ந்து நடிக்க இளம் நடிகர்கள் ஆசைப்படுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. நயன்தாரா ஜெயம் ரவி ஜோடியாக ஒரு திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த திரைப்படத்தில் அவர் அக்ஷனில் கலக்கவிருப்பதாகக் கூறப்படுகிறது.

நயன்தாரா தனது மேனியை மினுமினுப்பாக வைத்துக்கொள்ள அடிக்கடி ஆயுர்வேத குளியல் போடுகிறாராம். இதற்காகவே அவர் மாதாமாதம் பெரிய தொகையை செலவு செய்கிறார் என்று கூறப்படுகிறது.


இஸ்லாத்தை தழுவினார் யுவன்...

நான் இஸ்லாத்தை பின்பற்றுகிறேன். அதற்காக நான் பெருமைப்படுகிறேன் என்று இசை அமைப்பாளர் யுவன்சங்கர் ராஜா தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே இதுகுறித்து செய்திகள் வெளியாகி வந்தன. தற்போது யுவனே தனது டிவிட்டர் சமூக வலையமைப்பில் வெளியிட்டுள்ள தகவலில் உறுதிப்படுத்தியுள்ளார்.

யுவன் சங்கர் ராஜாவின் இந்த டிவிட்டர் தகவல் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தும் என்று தெரிகிறது. அதேசமயம், தான் 3ஆவதாக யாரையும் திருமணம் செய்யவில்லை என்றும் யுவன் மறுத்துள்ளார்.

கோடம்பாக்கத்தின் பிசியான இசை அமைப்பாளர் யுவன்சங்கர் ராஜா. அவர் தற்போது அஞ்சான் படத்திற்கு இசை அமைத்துக் கொண்டிருக்கிறார்.

இந்நிலையில் யுவன் முஸ்லிமாக மாறிவிட்டதாகக் கூறப்பட்டது. மேலும் யுவன் 3வதாக ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டதாகவும் வேறு செய்திகள் வெளியாகின.

இது குறித்து யுவன் ட்விட்டரில் கூறியிருப்பதாவது, நான் இஸ்லாத்தை பின்பற்றுகிறேன். அதற்காக நான் பெருமைப்படுகிறேன். அல்ஹம்துலில்லாஹ். என் முடிவை எனது குடும்பத்தார் ஆதரிக்கின்றனர்.

எனக்கும் என் தந்தைக்கும் இடையே எந்தவித கருத்து வேறுபாடும் இல்லை. எனக்கு 3வது முறையாக திருமணம் நடக்கவில்லை. அது பொய்யான தகவல் என்று தெரிவித்துள்ளார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X