2025 மே 19, திங்கட்கிழமை

நோ பிகினி, நோ கிஸ்: தமன்னா

Menaka Mookandi   / 2014 ஜூன் 09 , மு.ப. 08:19 - 0     - {{hitsCtrl.values.hits}}


இனி பொலிவூட், கொலிவூட், டொலிவூட் என எந்த மொழித் திரைப்படமாக இருந்தாலும் நீச்சல் உடை, முத்தக் காட்சிகளில் நடிக்க மாட்டேன் என்று நடிகை தமன்னா அறிவித்துள்ளார். தமன்னா நாயகியாக நடித்துள்ள பொலிவூட் திரைப்படம் ஹம்சகல்ஸ். இந்த திரைப்படத்தில் அவருடன் ஈஷா குப்தா, பிபாஷா பாசு ஆகியோர் நடித்துள்ளனர்.

இந்த திரைப்படத்திலுள்ள ஒரு காட்சியில் மூவரும் நீச்சல் உடையில் தோன்றுவது போன்ற காட்சி இடம் பெறுகிறது. மற்ற இருவரும் நீச்சலுடையில் தோன்ற, தமன்னா மட்டும் மறுத்துவிட்டாராம். பிகினிக்கு பதில், நன்கு மூடப்பட்ட ஒரு உடையை அவர் தெரிவு செய்தாராம். மேலும் நீச்சலுடை, முத்தக் காட்சிகளில் தன்னால் நடிக்க முடியாது என்றும் உறுதியாக அறிவித்துள்ளாராம்.

இதுகுறித்து தமன்னா கூறுகையில், முத்தக்காட்சி, நீச்சலுடைக் காட்சிகளில் நடிப்பதில்லை என்பதை ஆரம்பத்திலிருந்தே ஒரு கொள்கையாக வைத்துள்ளேன். இனியும் இந்த முடிவில் மாற்றமிருக்காது. அத்தகைய காட்சிகளில் நடிப்பதில் எனக்கு வசதியாகவும் இல்லை என்று கூறியுள்ளாராம் தமன்னா.



சவால்விடும் அஞ்சலி


என்னை வைத்து படம் தயாரிக்க விரும்புபவர்கள் கவலைப்பட வேண்டாம். என் படப்பிடிப்பை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது என்று கூறியுள்ளார் நடிகை அஞ்சலி.

என் படத்தில் நடிக்கும் வரை, யார் படத்திலும் அஞ்சலியை நடிக்கவிடமாட்டேன் என்று இயக்குநர் மு.களஞ்சியம் பேட்டியளித்திருந்தார். இதற்கு பதிலளிக்கும் வகையிலேயே அஞ்சலி மேற்படி அறிவிப்பை விடுத்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியுள்ளதாவது,

என் பிரச்சினைகள் அனைத்தும் தீர்ந்துவிட்டன. நான் ஒரு தெலுங்கு திரைப்படத்தின் படப்பிடிப்பை எந்த பிரச்சினையும் இல்லாமல் முடித்துவிட்டேன். அடுத்து, புனித் ராஜ்குமாருடன், நான் ஒரு கன்னட படத்தில் நடிக்கிறேன். அந்த படத்தின் படப்பிடிப்பு இப்போது நடைபெற்று வருகிறது.

நடிப்பது என் தொழில். நான் படப்பிடிப்புக்கு சென்றால், என்னை தடுத்து நிறுத்தப்போவதாக யாரோ ஒருவர் கூறுவதாக கேள்விப்பட்டேன். என்னை யாரும் தடுத்து நிறுத்த முடியாது. நான் எந்த தவறும் செய்யாதவள் என்பது எல்லோருக்கும் தெரியும். அதனால்தான் எனக்கு எல்லோரும் ஆதரவாக இருக்கிறார்கள். 

அஞ்சலியை வைத்து சில ஆண்டுகளுக்கு முன் ஊர் சுற்றிப் புராணம் என்ற பெயரில் ஒரு திரைப்படம் ஆரம்பித்தார் களஞ்சியம். ஆனால் அந்த திரைப்படம் பின்னர் வளரவில்லை. மேலும், சித்தி பாரதிதேவியுடன் சேர்ந்து, களஞ்சியம் தன் சொத்துக்களை அபகரிக்க முயன்றதாக குற்றம்சாட்டினார் அஞ்சலி. இதைத் தொடர்ந்து ஹைதராபாத் போன அஞ்சலி, அதன் பிறகு சென்னை திரும்பவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


அனுஷ்காவுக்கு டும்... டும்... டும்...


நடிகை அனுஷ்காவுக்கு அவரது பெற்றோர் மாப்பிள்ளை பார்க்கிறார்களாம்.  அனுஷ்காவுக்கு 32 வயது ஆகிறது. 2005இல் சூப்பர் என்ற தெலுங்கு திரைப்படம் மூலம் சினிமாவில் அறிமுகமானார். தமிழில் விஜய், விக்ரம், சூர்யா, கார்த்தி, ஆர்யா என முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்துள்ளார்.

தற்போது தமிழில் லிங்கா திரைப்படத்தில் ரஜினி ஜோடியாகவும் சத்யா திரைப்படத்தில் அஜீத்துக்கு ஜோடியாகவும் நடித்து வருகிறார்.

தெலுங்கில் ருத்ரமாதேவி, பாகுபலி என இரு சரித்திர கதையம்சம் உள்ள திரைப்படங்களிலும் நடிக்கிறார். இந்த திரைப்படங்களை முடித்ததும் அனுஷ்காவுக்கு திருமணத்தை முடிக்க பெற்றோர் திட்டமிட்டுள்ளனர்.

இதற்காக மூன்று வரன்களை ஏற்கனவே பார்த்து இருக்கிறார்களாம். இதில் ஒருவர் தொழிலதிபர். மற்றையவர்கள் டாக்டர், எஞ்ஜினியர் ஆவர். இவர்கள் தவிர, மேலும் நல்ல வரன்கள் பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள். அடுத்த வருடம் அனுஷ்கா திருமணம் நடக்கும் என்கின்றனர்.


முடிந்தது நிச்சயதார்த்தம்: 12இல் கல்யாணம்


இயக்குநர் விஜய்க்கும், நடிகை அமலா போலுக்கும் கொச்சியில் உள்ள தேவாலயம் ஒன்றில் சனிக்கிழமை (07) நிச்சயதார்த்தம் நடைபெற்றது.

திரைத் துறையில் உள்ளவர்கள் வீட்டுத் திருமணம் எப்போதுமே மக்களிடத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்துவது சகஜமான ஒன்று தான். அதிலும் நடிகைகள் திருமணம் என்றால் சொல்லவே வேண்டாம்.

அந்தவகையில், இயக்குநர் விஜய்க்கும் நடிகை அமலா போலுக்கும் சனிக்கிழமை நிச்சயதார்த்தம் நடந்து முடிந்தது. இதையடுத்து எதிர்வரும் 12ஆம் திகதி சென்னையில் திருமணம் நடைபெறவுள்ளது.

மதராசபட்டணம், தெய்வமகள், தரைவா உள்ளிட்ட வெற்றிப்படங்களைத் தந்தவர் இயக்குநர் விஜய். இவரது தெய்வமகள் மற்றும் தலைவா திரைப்படங்களில்  நாயகியாக நடித்தார் அமலா போல்.

முதலில் நட்பாக ஆரம்பித்த இவர்களது பழக்கம், ஊடகங்களின் கிசுகிசுவால் நாளடைவில் காதலாக கனிந்தது. இருவீட்டார் சம்மதத்துடன் திருமணமும் ஏற்பாடு செய்யப்பட்டது.
அதன்படி, விஜய் - அமலாபால் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. கிறிஸ்தவ முறைப்படி இருவரும் மோதிரம் மாற்றிக்கொண்டார்கள். அதனைத் தொடர்ந்து எதிர்வரும் 12ஆம் திகதி சென்னையில் மேயர் ராமநாதன் செட்டியார் மண்டபத்தில் திருமணம் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


ரூ.200 கோடியில் எந்திரன் 2


ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடித்த எந்திரன் (ரோபோ) படம் 2010இல் வெளிவந்தது. ஜோடியாக ஐஸ்வர்யாராய் நடித்து இருந்தார். இதில் ரஜினி விஞ்ஞானி, ரோபோ என இரு கதாபாத்திரங்களில் நடித்திருந்தார் ரஜினி. பிரமாண்ட திரைப்படமாகத் தயாரிக்கப்பட்ட எந்திரன், வசூலிலும் கோடிகளைக் குவித்தது.

இதன் இரண்டாம் பாகம் எந்திரன் - 2 என்ற பெயரில் எடுக்க ஷங்கர் திட்டமிட்டதாக முன்பே தகவல் வெளியானது. ஒளிப்பதிவாளர் ரத்தினவேல் இதனை உறுதிப்படுத்தினார். ஆனால் ரஜினியோ ராணாவை அப்போது அறிவித்தார். ராணா நின்றதும், கோச்சடையான் உருவானது.

இப்போது ரஜினி - ரவிக்குமார் இணைப்பில் லிங்கா திரைப்படம் விறுவிறுப்பாக உருவாகி வருகிறது. இந்தத் திரைப்படம் முடிந்ததுமே, ஷங்கருக்குத்தான் அடுத்த படம் பண்ணுவார் ரஜினி என தகவல் வெளியாகியுள்ளது.

ஷங்கரும் ஐ படத்தின் படப்பிடிப்பை முடித்து, வெளியீட்டுக்கு தயார் செய்து கொண்டுள்ளார். இன்னொரு பக்கம் ரோபோ 2க்கான பணிகள் விறுவிறுப்பாக ஆரம்பித்துள்ளனவாம். திரைப்படத்துக்கான கதை மற்றும் திரைக்கதையை ஷங்கர் தயார் செய்து ரஜினியிடம் சொல்லி ஒப்புதல் வாங்கி விட்டதாக கூறப்படுகிறது.

இந்த திரைப்படத்தை எடுக்க ரூ.200 கோடி செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன், எந்திரனில் நடித்த ஐஸ்வர்யா ராய் மற்றும் இன்னொரு முன்னணி நடிகையை இந்த திரைப்படத்துக்காக பேசி வருவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.


பின்னணி பாடும் சூர்யா


நடிகர் சூர்யாவின் அஞ்சான் திரைப்படத்தின் முன்னோட்டக் காட்சி வரும் 12ஆம் திகதி வெளியாகவுள்ளது. லிங்குசாமி இயக்கத்தில் சூர்யா - சமந்தா நடித்து வரும் திரைப்படம் அஞ்சான். மனோஜ் பாஜ்பாய், வித்யுத் ஜம்வால், ராஜ்பல் யாதவ், திலீப் தஹில் என பொலிவூட் நடிகர்கள் நிறைய பேர் இதில் நடித்துள்ளனர்.

யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். சூர்யா இரு வேடங்களில் நடிக்கும் இந்த திரைப்படம், தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் நேரடிப் படமாக உருவாகிறது.

இதன் படப்பிடிப்பு பெரும்பகுதி முடிந்த நிலையில் இறுதிகட்ட பணிகள் நடந்து வருகிறது. இப்படத்தில் முதன்முறையாக சூர்யா சொந்த குரலில் பாடல் பாடப்போவதாக கூறப்படுகிறது.

இதுபற்றி பட குழுவினர் கூறியதாவது, இத்திரைப்படத்துக்காக சூர்யா சொந்த குரலில் பாடும் ஐடியா உள்ளது. ஆனால் இன்னும் அந்த பாடல் ஒலிப்பதிவாகவில்இஷ என்றனர்.

எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 15ஆம் திகதி சுதந்திர தினத்தன்று இத்திரைப்படத்தை வெளியிடப் போவதாக லிங்குசாமி அறிவித்துள்ளார். இத்திரைப்படத்தையடுத்து வெங்கட் பிரபு இயக்கும் படத்தில் சூர்யா நடிக்கவுள்ளார். இத்திரைப்பட ஷூட்டிங்கிற்கான ஆரம்ப கட்ட பணிகளில் வெங்கட் பிரபு மும்முரமாக ஈடுபட்டுள்ளாராம்.


8 மணிநேரம் கழிவு நீரில் கிடந்த விஷால்


இயக்குநர் ராதாகிருஷ்ணன் பார்த்திபன் இயக்கி வரும் படம், கதை திரைக்கதை வசனம் இயக்கம். இந்த திரைப்படத்தில் விஷால், பார்த்திபனின் நட்புக்காக சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார்.

கழிவு நீர் தொட்டிக்குள் விழுந்துவிட்ட ஒரு குழந்தையை விஷால் காப்பாற்றுவதாக ஒரு காட்சி. இந்தக் காட்சியை சென்னையில் உள்ள ஒரு தனியார நீச்சல் குளத்தில் படமாக்கினார் பார்த்திபன். நீச்சல் குளத்தில் உள்ள தண்ணீரை வெளியேற்றிவிட்டு அதில் கருப்பு நிறம் கலந்த கழிவுநீரை நிரப்பினார்கள்.

இந்த கழிவு நீருக்குள் இறங்கி குழந்தையை காப்பாற்றுவது போல காட்சியாம். ஒரு நாள் முழுவதும் இந்த காட்சிக்கான படப்பிடிப்பு நடத்தப்பட்டுள்ளது. சுமார் 8 மணிநேரம் விஷால் அந்த தண்ணீருக்குள் இருந்தாராம்.

பின்னர் படப்பிடிப்பு முடிந்ததும் தடுப்பூசி போட்டுக்கொண்டு சென்றாராம். இந்த காட்சியில் நடித்தற்காக விஷால் சம்பளம் எதுவும் பெற்றுக்கொள்ளவில்லையாம். பார்த்திபனின் நட்புக்காக இக்காட்சியை நடித்துக்கொடுத்தாராம்.


கண்தானம் செய்த ஷில்பா


பிரபல இந்தி நடிகையும், ராஜஸ்தான் ரோயல்ஸ் கிரிக்கெட் அணியின் உரிமையாளருமான ஷில்பா ஷெட்டி, தனது கண்களை தானம் செய்துள்ளார்.

இந்தியாவின் மராட்டிய மாநிஷலத்தில் உள்ள ஷிர்டி சாய்பாபா ஆலயம் சென்ற ஷில்பாவும் அவரது கணவர் ராஜ் குந்த்ராவும் அங்கு பாபா தரிசனம் செய்தனர். பின்னர் ஷானி ஷிங்கனாபூர் சேவை அமைப்புக்கு சென்ற நடிகை ஷில்பா ஷெட்டி, முறைப்படி தனது கண்களை தானம் செய்தார்.

இதுகுறித்து ஷில்பா கூறுகையில், நான் இறந்த பிறகு எனது கண்களால் பயன் இல்லை. எனது மரணத்துக்கு பின்னர், எனது கண்கள் மற்றவர்களுக்கு பார்வை வழங்கும் என்ற செய்தியே இப்போது மகிழ்ச்சி அளிக்கிறது என்று கூறியுள்ளார் ஷில்பா.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X