2024 மே 03, வெள்ளிக்கிழமை

48 ஆண்டுகளாக நம்பர் 1 நாயகன்

Mayu   / 2023 டிசெம்பர் 12 , மு.ப. 10:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாலசந்தர். தான் இயக்கிய ‘மேஜர் சந்திரகாந்த்’ திரைப்படத்தில் வரும் ரஜினிகாந்த் எனும் கதாபாத்திரத்தின் பெயரையே வைத்ததாக பின்னாளில் கூறினார் பாலசந்தர். பின்னாளில் எத்தனை உயரத்திற்கு சென்றாலும் பாலச்சந்தர் மீது ரஜினி வைத்திருந்த மரியாதை துளியும் குறைந்தில்லை.

ரஜினிகாந்தின் தாய் மொழி மராத்தி. ரஜினியின் தந்தை ரானோஜிராவுக்கு கர்நாடக மாநில போலீஸ் இலாகாவில், போலீஸ் உத்தியோகம் கிடைத்ததால், குடும்பத்தோடு பெங்களூரில் குடியேறினார். ஆதலால் பள்ளி மற்றும் தன் இளமை கால பருவங்களை பெங்களூரில் கழித்தார் ரஜினிகாந்த். இவரின் தாய் மொழி மராத்தியாக இருந்தாலும், இதுவரை ஒரு மராத்தி படத்திலும் ரஜினிகாந்த் நடித்ததில்லை.

பேருந்து நடத்துனராக இருந்தாலும் நடிப்பு ஆசை ரஜினியை துரத்திக் கொண்டே இருந்தது. தனது நடிப்புத் தாகத்தை தீர்த்துகொள்ள கன்னடத்தில் பல்வேறு நாடக நிகழ்ச்சிகளிலும் ரஜினிகாந்த் நடித்துள்ளார்..

நடிப்பை பயில அந்நாளில் ரஜினிக்கு போதிய பண வசதி இல்லை. கூடவே வறுமையை வாட்டியதால் நடிப்புக்கு முழுக்கு போட திட்டமிட்டார். இந்த தருணத்தில் ரஜினிக்கு பக்க பலமாக இருந்து சென்னை திரைப்பட கல்லூரியில் அவரை சேர்த்து உதவி செய்தவர் அவரது நெருங்கிய நண்பர் ராஜ் பஹதூர். இன்று உலக அரங்கில் எத்தனையோ பிரபலங்கள் ரஜினியை பார்க்க காத்திருந்தாலும் ரஜினியை நினைத்த நொடியில் பார்க்க உரிமை கொண்ட ஒரே நபர் அவருடைய நண்பர் ராஜ் பஹதூர் மட்டுமே.

சென்னையில் மிட்லண்ட் தியேட்டரில் கே.பாலசந்தர் இயக்கத்தில் நாகேஷ் நடித்த “எதிர்நீச்சல்’’ படத்தை பார்த்து பிரமித்து போனார் ரஜினி. இந்த தருணத்தில்தான் ‘திரைப்பட கல்லூரிக்கு மாணவர்களுடன் கலந்துரையாட பாலசந்தர் வருகிறார்’ என்ற செய்தி ரஜினியை மேலும் திக்குமுக்காட செய்தது. மிகுந்த ஆவலுடன் பாலசந்தரை சந்தித்த ரஜினிகாந்த் தனக்கு தெரிந்த ஆங்கிலத்தில் அவரிடம் கேட்ட கேள்வி “ஒரு நடிகனிடம் அவன் நடிப்பைத் தவிர வேறு எதை நீங்கள் எதிர்பார்க்கிறீர்கள்?’’ என்பது. அதற்கு “நடிகன் வெளியே நடிக்கக்கூடாது’’ என சிரித்து கொண்டே சொன்னார் பாலசந்தர். அந்த பதிலை இப்போதும் பின்பற்றுபவர் இந்த சிவாஜிராவ் என்கிற ரஜினிகாந்த்.

இதுவரை பல ஆயிரம் பக்கங்களை வசனங்களாக பேசிய ரஜினிகாந்த் முதன்முதலில் பேசிய வசனம் “பைரவி வீடு இதுதானா? நான் பைரவியோட புருஷன்…’’ என்பதே. ‘அபூர்வ ராகங்கள்’ திரைப்படத்தில் ஒரு பெரிய பங்களாவின் ஒரு பெரிய கதவை திறந்துகொண்டு, தாடி-மீசையுடன் உள்ளே நுழையும் ரஜினிகாந்த் மாடியில் இருக்கும் கமலஹாசனை பார்த்து கேட்கும் அந்த கேள்வி அத்திரைப்படத்திற்கு மட்டுமல்ல ரஜினிகாந்தின் வாழ்க்கைக்கும் தமிழ் சினிமாவுக்கும் முக்கியமான திருப்பமாக அமைந்தது.

முதல் படம் வெற்றி பெற்றாலும் `யார் இந்த ரஜினி? புதுமாதிரி நடிக்கிறாரே?’ என்று ரசிகர்கள் கேட்கத் தொடங்கிய திரைப்படம் ’மூன்று முடிச்சு’. சிகரெட்டை மேலே தூக்கிப் போட்டு, வாய்க்கு கொண்டு வரும் ஸ்டைலை இந்தப் படத்தில்தான் ரஜினிகாந்த் அறிமுகம் செய்தார்.

‘16 வயதினிலே’ திரைப்படத்திற்காக பாரதிராஜா ரஜினிகாந்தை அணுகியபோது சம்பளமாக ஐந்தாயிரம் ரூபாய் கேட்ட ரஜினிகாந்திற்கு, குறைந்த பட்ஜெட் படமென்பதால் 2500 ரூபாய் சம்பளமாக பேசி அவரை நடிக்க சம்மதிக்க வைத்தார் பாரதிராஜா.

அதே படத்தில் ஹீரோவாக நடித்த கமலுக்கு சம்பளம் 30,000 ரூபாய். ஸ்ரீதேவிக்கு சம்பளம் 5000 ரூபாய். 16 வயதினிலே படத்தின் படப்பிடிப்பு சமயத்தில் ஸ்ரீ தேவியின் தாயாருடன் தனது எதிர்காலம் குறித்து பேசிய ரஜினி, “ ஒருநாள் நானும் கமல் போல 30,000 சம்பாதிப்பேனா?” என தயங்கியபடியே கேட்டிருக்கிறார். ஆனால் தனது விடா முயற்சியால் இன்று ஆசியாவிலேயே அதிக சம்பளம் வாங்கும் நடிகராக ரஜினி உருமாறியிருக்கிறார்.

1988ல் ரஜினி ‘பிளட் ஸ்டோன்’ என்ற ஆங்கிலப் படத்தில் நடித்தார். பாலிவுட் நடிகர்களுக்குக் கூட கிடைக்காத இந்த அரிய வாய்ப்பு ரஜினியை தேடி வந்தது அவரது ஸ்டைலுக்காகத்தான். இந்தப் படத்தில் அவர் பேசிய ‘மணி மணி மணி’ என்ற வசனத்தை அஜித், தான் நடித்த ‘மங்காத்தா’ படத்தில் கிட்டத்தட்ட அதே ஸ்டைலில் பேசியிருந்தார் என்பது பலருக்கும் தெரியாத விஷயம்.

தான் பிசியான நடிகராக வலம் வந்து கொண்டிருந்த போது தன்னை பேட்டி எடுக்க வந்த லதா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார் ரஜினிகாந்த். ’திருமணம் செய்து கொள்வீர்களா’ என்று கேள்வி கேட்ட லதாவிடம் ‘உங்களை மாதிரி பெண் கிடைத்தால் உடனே திருமணம் செய்து கொள்வேன்’ என தடாலடியாக கூறியவர் ரஜினிகாந்த்.

இந்தியாவிலேயே முதன் முறையாக, யானை, முயல், குரங்கு முதலான கார்ட்டூன் படங்களுடன் “அனிமேஷன்’’ காட்சியில் நடித்தார் ரஜினிகாந்த். “ஏவி.எம்’’ தயாரித்த “ராஜா சின்ன ரோஜா’’ படத்துக்காக, மிகுந்த பொருட்செலவில் தயாரான இந்த அனிமேஷன் பாடல் அன்றைய ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது.

சிறுநீரக பாதிப்புக்காக நவீன டயாலிஸிஸ் செய்வதற்காக ரஜினி சிங்கப்பூர் செல்கிறார் எனும் செய்தி நாடெங்கும் பரப்பரப்பை ஏற்படுத்தியது. அவரை ஆம்பூலன்ஸ் மூலம் மருத்துவமனையில் இருந்து அழைத்து சென்றபோது ஏராளமான ரசிகர்கள் அங்கு கூடி கண்ணீர் விட்டனர்.

கிட்டத்தட்ட ஒரு மாத காலம் சிங்கப்பூரில் ரஜினிக்கு சிகிச்சை வழங்கப்பட்டது. அந்த சமயத்தில் தமிழகம் முழுவதும் பல ஊர்களில் அவர் உடல்நலம் குணமடைய வேண்டி அவருடைய ரசிகர்கள் சிறப்பு வழிபாடுகளில் ஈடுபட்டனர்.

தமிழக அரசின் கலைமாமனி, ஆந்திர அரசின் நந்தி விருது உட்பட ஏராளமான விருதுகளை ரஜினிகாந்த் குவித்துள்ளார். சிவாஜி கணேசனுக்கு பிறகு நாட்டின் உயரிய மூன்றாவது விருதான பத்மபூஷண் விருதை பெற்ற முதல் தமிழ் நடிகர் ரஜினிகாந்த் தான். அதேபோல் இவரது கலை சேவையை பாராட்டி கடந்த 2016-ம் ஆண்டு இவருக்கு நாட்டின் இரண்டாவது உயரிய விருதான பத்ம விபூஷன் விருதை வழங்கி கௌரவித்தது மத்திய அரசு.

1975-ல் நடிகராக அறிமுகமான ரஜினி கடந்த 48 ஆண்டுகளாக நம்பர் 1 நாயகனாக வலம்வருகிறார். ஆரம்பத்தில் இருந்த வசீகரம் துளியும் குறையாமல் இன்றும் இவர் நடிக்கும் படங்கள் ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பையும் தமிழகத்தின் பேச்சுபொருளாகவும் மாறுகின்றன. இது உலகளவில் வேறெந்த நடிகரும் செய்யாத மகத்தான சாதனையாகும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .