2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

ஃபர்ஸ்ட் ஹாஃப் வெறித்தனம்.... சார்பட்டா பரம்பரை விமர்சனம்

J.A. George   / 2021 ஜூலை 22 , பி.ப. 01:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

பா.ரஞ்சித் இயக்கத்தில் குத்துசண்டையை மையமாக வைத்து ஆர்யா நடிப்பில் வெளியாகியுள்ள திரைப்படம் சார்பட்டா பரம்பரை.

ஆர்யாவுக்கு ஜோடியாக துஷாரா விஜயன் நடித்துள்ளார்.இந்த படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்க, முரளி.ஜி ஒளிப்பதிவு செய்துள்ளார்.

பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இந்த திரைப்படம் நேரடியாக அமேசான் ப்ரைம் வீடியோவில் வெளியாகி நல்ல பலதரமான விமர்சனங்களை பெற்று வருகிறது.

இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் கடைசியாக காலா திரைப்படம் வெளியானது. 3 வருடத்திற்கு பிறகு சார்பட்டா பரம்பரை படத்தின் மூலம் சிறப்பான கம்பேக் கொடுத்துள்ளார். 

வெள்ளையர்கள் நம் நாட்டை விட்டு சென்ற போதிலும் அவர்கள் நம்மிடத்தில் விட்டுச்சென்ற பொழுதுபோக்கு விளையாட்டான குத்துச்சண்டை பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. அதனை பின்புலமாக வைத்து படத்தின் கதையை தயார் செய்துள்ளார். 

தனக்கே உரிய பாணியில் அரசியல் கருத்துக்களையும் அழுத்தமாக இந்த படத்தின் மூலம் பதிவு செய்துள்ளார். 80'களில் வடசென்னையில் நடக்கும் ரோஷமான ஆங்கில குத்துசண்டையை இந்த படத்தின் மூலம் கண்முன்னே காட்டியுள்ளார். 

கதையில் ஒரு தெளிவை கொண்டு வர கதை சார்ந்த விஷயங்களை பா.ரஞ்சித் ஆராய்ந்து செய்துள்ளது பாராட்டிற்குரியது. அதிகமான ஜாதி குறியீடுகள் இல்லாமல் மிகவும் மேலோட்டமாக ரஞ்சித் சொன்ன விதம் சிம்ப்லி சூப்பர் .

பாக்ஸிங் மற்றும் அதன் பின்புலத்தால் கணவனை இழந்த ஒரு பெண் தன் மகனையும் இழந்து விடக்கூடாது என்று போராடுகிறாள் . இந்த ஒன் லைன் பல தமிழ் சினிமாவில் பல விதமாக எடுக்க பட்டது தான், இருந்தாலும் காட்சி அமைப்பு திரைக்கதை சென்ற விதம் என்று கொஞ்சம் ஸ்வாரஸ்யங்களை சேர்த்து இருக்கிறார் பா .ரஞ்சித். 

குத்து சண்டை வாத்தியாரை அவமானப்படுத்தும் தாயாக கபிலனுடைய ( ஆர்யா ) அம்மாவாக அனுபமா அழுகை ,பாசம் என்று கிடைத்த வாய்ப்பை நன்கு பயன் படுத்தி இருக்கிறார் .

இந்த படத்திற்காக ஆர்யா கடின உழைப்புடன் நடித்துள்ளார். தனது உடல் எடையை ஏற்றியும், அதனை குத்துச்சண்டை வீரர் போல மெருகேற்றியும் நடித்துள்ளார். ஆர்யா கபிலன் எனும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவருக்காகவே வடிவமைத்த கதை போல கதையுடன் ஒன்றி சிறப்பான தனது நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். 

குத்துச்சண்டை போடும் காட்சிகளை நம்மை அறியாமல் அவருக்கு குரல் கொடுக்கும் வகையில் ரோஷமான சண்டையை செய்துள்ளார். உடல் எடையை அதிகப்படுத்தி சில காட்சிகளில் தொப்பையும் தொந்தியுமாக வந்து பின்னர் மீண்டும் கட்டுடல் பாக்ஸராக மாறுவது மிரள வைக்கிறது .

இந்த படத்திற்காக ஆர்யா எடுத்து கொண்ட உடல் பயிற்சி , பாக்சிங் முயற்சி மிகவும் பாராட்டத்தக்கது . வழக்கமான தனது பல படங்களின் சாயல் வராமல் பார்த்து கொண்டு ஒரு பீரியட் ஃபிலமுக்காக என்னவெல்லாம் செய்ய முடியுமோ அத்தனையும் செய்து அசத்தி உள்ளார் ஆர்யா .

இந்த படத்தில் ஆர்யாவுக்கு ஜோடியாக துஷாரா நடித்துள்ளார். இதற்குமுன் போதை ஏறி புத்தி மாறி படத்தில் நடித்திருந்தார். மாரியம்மா எனும் கதாபாத்திரத்தில் நேர்த்தியாக நடித்து அசத்தியுள்ளார். 

காதல் , கோவம் , பாசம் , வீரம் , வெட்கம் ,சத்தம் கொஞ்சம் முத்தம் என்று எல்லா விதமான உணர்ச்சிகளையும் காட்டும் ஒரு சிறந்த வாய்ப்பை கச்சிதமாக பயன்படுத்தி மாரியம்மாவாக மிரளுகிறார் துஷாரா. முதல் இரவு காட்சியில் குத்தாட்டம் ஆடி விட்டு கட்டிப்பிடிப்பது குறும்புத்தனத்துடன் ரசிகர்கள் மத்தியில் கண்டிப்பாக கை தட்டு வாங்கும் காட்சி .

இவரை அடுத்து சஞ்சனா நடராஜன் லக்ஷ்மி எனும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஜகமே தந்திரம் படத்தில் ஒரு பாடலில் மட்டும் நடனமாடி ட்ரெண்ட் ஆன இவர் இந்த படத்தில் சிறப்பாக நடித்துள்ளார். சில காட்சிகள் மட்டுமே வந்தாலும் அழுத்தமான முக்கியமான காட்சிகள் இவருக்கு கிடைத்தது வரம்.

பசுபதி, கலையரசன், அனுபமா குமார், ஜீ எம் சுந்தர் , ஜான் விஜய் , சந்தோஷ் பிரதாப், ஜான் கொக்கென், காளி வெங்கட் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். வாத்தியாராக நடித்துள்ள பசுபதி அந்த கதாபாத்திரமாகவே மாறி தன்னுடைய ஆளுமையை வெளிப்படுத்தி மிகச்சிறந்த நடிகன் என்பதை மீண்டும் நிலை நாட்டியுள்ளார். 

மெட்ராஸ், கபாலி போலவே இந்த படத்திலும் முக்கிய வேடத்தில் கலையரசன் நடித்துள்ளார். சார்பேட்டாவுக்கு எதிர் அணியாக இடியாப்ப பரம்பரையின் வழிகாட்டியாக ஜி.எம் சுந்தர் எதார்த்த வசனங்களை பதார்த்தமாக பதம் பார்க்கிறார் . வட சென்னையின் வாழ்க்கை அந்த வட்டார வழக்கு என்று வசனங்கள் வரும் போது கொஞ்சம் கெட்ட வார்த்தைகளும் வருகிறது. 

சென்னையில் அதிகம் கேட்ட வார்த்தைகளையும் எல்லா கதாபாத்திரங்களும் பயன்படுத்துகிறார்கள் . அதிகமான கதாபாத்திரங்கள் படத்தில் இடம் பெற்றாலும் டாடி என்று செல்லமாக அழைக்க படும் ஜான் விஜய் கதாபாத்திரம் மனதில் நிற்கும் . ஜான் விஜய் பேசிய ஆங்கில வசனங்கள் , வார்த்தைகளின் உச்சரிப்பு பாடி லாங்குவேஜ் அனைத்தும் தனித்துவத்துடன் ரசிக்க வைக்கிறது .

இரண்டு பரம்பரை பாக்ஸிங் செய்து சண்டை போடுவதும் , அதற்கு நடுவில் அரசியல் வந்தால் என்னவெல்லாம் நடக்கும் என்பதையும் நன்கு அலசி ஆராய்ந்து , தமிழ்நாட்டில் எமர்ஜென்சி காலகட்டத்தில் நடந்த பல நிகழ்வுகளையும் ரீவைண்ட் செய்து காட்டி உள்ளார் இயக்குனர் பா.ரஞ்சித் . 

திமுக அதிமுக போன்ற கட்சிகளின் அன்றைய நிலைப்பாடு ,தலைவர்கள் எடுத்த முடிவுகள் , பாமர மக்கள் சந்தித்த விளைவுகள் இதற்கு மத்தியில் பாக்ஸிங் ஸ்போர்ட் அதற்கு மக்கள் கொடுத்த சப்போர்ட் என்று சர்பேட்டா ஒரு பக்கா சர்வே கொடுக்கிறது , வெற்றி தோல்விகளுக்கு அப்பாற்பட்டு குத்து சண்டையை உயிர் மூச்சாக நினைத்து வாழ்ந்தவர்கள் ,அவர்களது எண்ணங்கள் என்று மிகவும் அருமையாக யோசித்து கதாபாத்திரங்களுக்கு நல்ல நடிகர்களை சரியாக தேர்வு செய்தது ரஞ்சித்தின் மிக பெரிய வெற்றி .

படத்தின் முழு கதை மூல கதை என்பது எத்தனை முறை சண்டை போட்டார்கள் எந்த பரம்பரை வெற்றி பெற்றது என்பது தான் .

படத்தின் நீளம் கொஞ்சம் அதிகம் தான் என்று பலர் சொன்னாலும் பீரியட் ஃபிலிம் என்று வரும்போது அதை இன்னமும் கொஞ்சம் கவனம் செலுத்து சில காட்சிகள் ட்ரிம் செய்து இருக்கலாம் . 

கலையரசன் கதாபாத்திரம் அதிக குழப்பங்கள் நிறைந்த மனநிலையில் படம் முழுக்க வந்து போவதை கொஞ்சம் தவிர்த்திருக்கலாம் . படத்தின் கிளைமாக்ஸ் இது தான் என்று ஒட்டு மொத்த ரசிகர்களுக்கும் முதல் காட்சியிலியே புரிந்து விடுகிறது . தமிழ் சினிமாவின் வழக்கமான கிளைமாக்ஸ் என்பது அனைவருக்கும் மிக எளிதில் தெரிந்து விடுகிறது

தொழில்நுட்ப ரீதியாக படக்குழுவினர் மிகவும் மெனக்கெட்டுள்ளனர். சின்ன திரையிலேயே அவர்களுடைய உழைப்பு அமேசான் வழியாக கண்கூடாக தெரிகிறது. படத்தின் கலை இயக்குனர் ராமலிங்கம் 80'களில் இருந்த வடசென்னையை பிசிறு தட்டாமல் வடிவமைத்துள்ளார். 

குத்துச்சண்டை மைதானம் செட்டும் வியக்க வைக்கிறது. இதனை காட்சிப்படுத்திய ஒளிப்பதிவாளர் முரளி முக்கிய பங்கு வகித்துள்ளார். குத்துச்சண்டை மைதானம், சண்டையை காட்சிப்படுத்திய விதம் பிரம்மிப்பாக இருந்தது. படத்தின் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் படத்திற்கு படம் முன்னேற்றம் கண்டு சிறப்பான சம்பவங்களை செய்து வருகிறார். 

பாடல்கள், பின்னணி இசை ஆகியவற்றை சிறப்பாக அமைத்து சந்தோஷ் நாராயணன் படத்தை தூக்கி பிடித்துள்ளார்.நீயே ஒளி நீ தான் வழி பாடல் பல பேருக்கு ரிங்க்டோனாக மாற வாய்ப்பு உள்ளது . படத்தொகுப்பாளர் செல்வா, சண்டை பயிற்சிக்கு அன்பறிவு என படக்குழு சிறப்பாக செயல்பட்டுள்ளது. 

அன்பறிவு மீண்டும் இந்த படத்திற்காக பல விருதுகள் வாங்க வாய்ப்பு உண்டு என்பது பல காட்சிகளில் புரிகிறது . சர்பேட்டா பரம்பரை படத்தை கண்டிப்பாக குடும்பத்துடன் உட்கார்ந்து காணலாம் என்பது மிக பெரிய ஒரு பிளஸ் . 

பாக்ஸிங் பற்றியும் அதன் சிறப்பு பற்றியும் நிறைய தெரிந்த கொள்ள எதிர்கால இளைஞர்கள் கண்டிப்பாக இந்த படத்தை பார்க்கலாம் என்பது கூடுதல் சிறப்பு.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X