Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 21, புதன்கிழமை
George / 2016 ஜூலை 25 , மு.ப. 04:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
மலேசியாவிலுள்ள சிறைச்சாலையில் 24 வருடங்களாக தண்டனை பெற்றுவரும் ரஜினி, விடுதலையாகி கோட் ஷூட் அணிந்தபடி வெளியே வருகின்றார். மலேசியாவில் கூலி வேலை செய்த தமிழர்களின் உரிமைக்காக போராடி சிறைக்குச் சென்று வெளியே வரும் ரஜினியை நண்பரான ஜோன் விஜய், காரில் அழைத்துச் செல்வதுடன் கபாலி, சிறையில் இருந்த காலத்தில் மலேசியாவில் நடந்த மாற்றங்களை சொல்லிக்கொண்டு வருகின்றார்.
இதேவேளை, 43 கேங்க் என்ற குழுவினர், மாணவர்களை போதை பொருளுக்கு அடிமையாக்குவதுடன் கொலை, கடத்தல், பெண்கள் வியாபாரம் போன்ற குற்றச்செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இது பற்றி ரஜினிக்கு தெரியவர, சிறையிலிருந்து வெளியேறும் ரஜனி, நேராக 43ஆவது கேங்கை சேர்ந்த லிங்கேஷை சென்று சந்திக்கிறார். அங்குதான ரசிகர்கள் எதிர்பார்த்த முதலாவது சண்டை ஆரம்பமாகிறது.
'நான் வந்துட்டேனு சொல்லு, திரும்பி வந்துடேனு உங்க தலைவனிடம் சொல்லு' என்று அவனிடம் சொல்லிவிட்டு சென்று விடுகிறார். போதை பொருளுக்கு அடிமையானவர்களுக்காக கபாலி பெயரில் நடத்தப்படும் மறுவாழ்வு நிலையத்தில் ஆசிரியராக கலையரசன் இருக்கிறார். போதைக்கு அடிமையான ரித்விகாவும் சிகிச்சை பெற்று வருகிறார். ஒரு கட்டத்தில், மறுவாழ்வு நிலையத்தில் நடக்கும் நிகழ்வில் மாணவர்களிடையே உரையாடும்போது தான் கேங்ஸ்டாராக மாறியதை சொல்கிறார்.
25 வருடங்களுக்கு முன்னர் ரஜினி, சிறைக்கு போகும்போது, கர்ப்பிணியான தனது மனைவி ராதிகா ஆப்தே, துப்பாக்கி சூடுபட்ட நிலையில் இருப்பதை பார்த்துவிட்டு செல்கிறார். சிறையில் இருந்து வெளியே வந்தவுடன் தனது மனைவி, குழந்தைக்கு என்னவாயிற்று? என்ற குழப்பத்திலேயே இருக்கிறார். இதன்போது, 43 கேங்கில் போதை பொருள் விநியோகிக்கும் மைம் கோபியை, ரஜினி கொன்றுவிடுகிறார். அதனையடுத்து, ரஜினியை கொலை செய்ய கிஷோர் குழுவினர் தீர்மானிக்கின்றனர்.
இந்த நேரத்தில் திடீரென தன்ஷிகாவும் ரஜினியை கொலை செய்ய தேடுவதுடன் ரஜினி கூடவே இருக்கும் சிலரும் ரஜினியை தீர்த்துக்கட்டப் பார்க்கின்றனர். ஒருக்கட்டத்தில் கலையரசன், கபாலியை சுட முயற்சிக்கின்றார்.
தனது மனைவியையும் குழந்தையையும் கபாலி கண்டுபிடித்தாரா?, தன்ஷிகாவுக்கும் ரஜினிக்கும் உள்ள உறவு என்ன?, கிஷோரின் கும்பலை அழித்தாரா?, கலையரசனின் வஞ்சத்துக்கு காரணம் என்ன? என்பதை நீங்களே திரையரங்கில் பார்த்து தெரிந்துக்கொள்ளுங்கள்.
ஒரு நடிகர் திரையில் தோன்றும் போது ரசிகர்களிடம் இருந்து எழும் கைத்தட்டல்களே அந்த நடிகருக்கான அங்கிகாரம். அதை எப்போதும் போல கபாலியிலும் தக்கவைத்துக்கொண்டுள்ளார் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்.
வழக்கமான பஞ்ச் வசனங்கள் இல்லை. காட்சிக்கு காட்சி வெளிநாடுகளில் சென்று டூயட் பாடும் பாடல்கள் இல்லை. ஆனாலும், மாஸ் காட்சிகளிலும் சரி அதைவிட சோகமான காட்சிகளில் தான் யாரென்பதை ரஜினி நிரூபித்திருக்கிறார்.
லிங்கேஷை அடித்து துவம்சம் செய்யும் காட்சியில், 'கோழிக்கறி' என்று நக்கலாக சொல்லிவிட்டு செல்லும் காட்சிகள் எல்லாம் மாஸ். தன்னை அப்பா என்று அழைக்கும் ரித்விகாவை பார்த்து கண்கலங்கும் போதும் சரி, தனது மனைவி - குழந்தையை நினைத்து ஏங்கும் சோக காட்சிகளில் கபாலிடா...
ரஜினியின் நண்பராக வரும் ஜோன் விஜய் நடிப்பில் அசத்தியிருக்கிறார். வசனங்கள் எல்லாம் மிகவும் எதார்த்தமாக இருக்கிறன. எதார்த்தமான நடிப்புக்காக கைதட்டல் பெறுகிறார். மாறுபட்ட கதாபாத்திரத்தில் தன்ஷிகா நடித்துள்ளார். ஸ்டைலான பெண்ணாகவும் அழகாக இருக்கிறார். இடைவேளைக்கு பிறகு இவரது கதாபாத்திரம் அப்படியே மாறுவது ஆச்சரியம்.
கிஷோர் மிரட்டலான வில்லனாக அசத்துகிறார். என்னத்தான் டாலடிக்கும் கலரு கண்ணாடி என காட்சிக்கொரு கலர் உடையில் வந்தாலும் உள்ளுர் ரௌடி போல்தான். நம்ம கலையரசனா இது... என்று சொல்லும் அளவுக்கு மெட்ராஸ் திரைப்படத்தில் பார்த்த கலையரசன், நேர் எதிராக வந்து நிற்கிறார்.
ரஜினிக்கு பாதுகாவலனாக வந்து காவலன் வடிவேலுவை போல கொமடி செய்யாமல், எந்திரன் சிட்டி போல் ரஜினி, பேஸ்புக் என்றால் கொமன்டாக வந்து நிற்கிறார் அட்டகத்தி தினேஷ். சோக காட்சியில் தினேஷ் கைத்தட்டல் பெறுகிறார்.
கபாலி மனைவியாக வரும் ராதிகா ஆப்தே, கதாபாத்திரத்தை உணர்ந்து சிறப்பாக நடித்திருக்கிறார். வயதான கெட்டப்பிலும், ரஜினியுடன் இவர் செய்யும் காதல் காட்சிகள் எல்லாம் ரசிக்கும்படியாக இருக்கிறது. கணவனை பார்த்து கண்கலங்கி நிற்கும் காட்சியில்; எல்லாம் நம்மையும் கலங்க வைத்துவிடுகிறார். போதைக்கு அடிமையான பெண்ணாக வரும் ரித்விகாவின் கதாபாத்திர வடிவமைப்பும் பாராட்டுக்குரியது. அப்பா என்று கபாலியை அழைக்கும் காட்சிகளிலும் சரி, ரஜினியை எதிர்த்து பேசும் காட்சிகளிலும் சரி அவருக்கு கைதட்டல்.
43 கேங்கின் தலைவராக வரும் மலேசியா நடிகர் வின்ஸ்டன் சா, தோற்றத்திலேயே மிரட்டுகிறார். இவருக்கும் ரஜினிக்கு இணையான மாஸ் காட்சிகள் கொடுக்கப்பட்டுள்ளன.
சந்தோஷ் நாராயணன் இசையில் உருவான பாடல்கள் ஏற்கெனவே ஹிட்டாயிருந்தாலும், திரையில் பார்க்கும்போது பாடல்களுக்கு ஜீவன் பிறந்திருக்கிறது. முரளியின் ஒளிப்பதிவு மலேசியாவை அழகாக அருகில் கொண்டு வந்திருக்கின்றது.
இது இயக்குநர் பா.ரஞ்சித்தின் திரைப்படம் அல்ல. முழுக்க முழுக்க ரஜினிக்கான திரைப்படம் மட்டுமே. ரஜினியின் வயதுக்கும் தோற்றத்துக்கும் ஏற்றக் கதையை உருவாக்கியதுக்கு அவருக்கு பாராட்டு சொல்லலாம். எதார்த்தமான வசனங்கள்தான் திரைப்படத்துக்கு மிகப்பெரிய பலமே
பஞ்ச் வசனங்கள் இல்லாவிட்டாலும், சில இடங்களில் ரஜனி பேசும் வசனங்கள் விசிலடிக்க தூண்டுகின்றன. சில காட்சிகளின் நீளத்தை சற்று குறைத்திருக்கலாம். முதல் பாதி நெருப்பாக இருக்க, இடைவேளைக்கு பின்னர் தணலாக மாறுகின்றது. எனினும் விறுவிறுப்புடன் இறுதிக் காட்சிகள் நிறைவடைந்து விடுகின்றன.
மலேசிய தமிழர்களின் பிரச்சினைகளை இன்னும் சற்று அழுத்தமாக சொல்லியிருக்கலாம். குடும்பத்துடன் சென்று பார்க்கக்கூடிய திரைப்படம். முடிவை ரசிகர்களிடமே விட்டுவிடும் ரஞ்சித்துக்கு சபாஷ். ஒரு வேளை கபாலி இரண்டாம் பாகம் வருமோ???
மொத்தத்தில் 'கபாலி' எல்லோருக்கும் 'மகிழ்ச்சி'
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .