2026 ஜனவரி 08, வியாழக்கிழமை

கரூா் விவகாரம்: விஜய்க்கு அழைப்பாணை

S.Renuka   / 2026 ஜனவரி 06 , பி.ப. 04:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

கரூா் கூட்ட நெரிசல் சம்பவம் வழக்கில் நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய்யை விசாரணைக்கு நேரில் ஆஜராக இந்திய புலனாய்வுத் துறை (சிபிஐ) அழைப்பாணை அனுப்பியுள்ளது.

கடந்த செப்டெம்பா் 27 ஆம் திகதி கரூரில் தவெக தலைவா் விஜய் பங்கேற்ற கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 போ் பலியாகினர். இதுதொடர்பான வழக்கை விசாரிக்க சிபிஐ-க்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதனைத் தொடர்ந்து, கரூரில் முகாமிட்ட சிபிஐ அதிகாரிகள் தவெக நிர்வாகிகள், தமிழக அரசின் அதிகாரிகள், காவல்துறை அதிகரிகள், நெரிசலில் பலியானோரின் குடும்பத்தினர், காயமடைந்தவர்கள் எனப் பல்வேறு தரப்பினரிடம் விசாரணை மேற்கொண்டனர்.

இந்த நிலையில், தில்லியில் உள்ள சிபிஐ தலைமை அலுவலகத்தில் தவெக பொதுச் செயலாளா் ஆனந்த், தோ்தல் தலைமைப் பொதுச் செயலாளா் ஆதவ் அா்ஜுனா, இணைப் பொதுச் செயலாளா் நிா்மல் குமாா், கரூா் மாவட்டச் செயலாளா் மதியழகன் ஆகியோா் நேரில் ஆஜராக உத்தரவிடப்பட்டது.

இதையடுத்து, கடந்த டிசெம்பர் இறுதியில் நேரில் ஆஜரான தவெக நிர்வாகிகளிடம் சிபிஐ அதிகாரிகள் மூன்று நாள்கள் விசாரணை நடத்தினர்.

அதேபோல், கரூா் மாவட்ட ஆட்சியா் எம். தங்கவேல், கரூா் மாவட்ட கண்காணிப்பாளா் ஜோஷ் தங்கய்யா, ஏடிஎஸ்பி பிரேம் ஆனந்தன், டிஎஸ்பி வி. செல்வராஜ், கரூா் நகர காவல் ஆய்வாளா் ஜி.மணிவண்ணன் உள்ளிட்டோரிடமும் டெல்லி சிபிஐ அலுவலகத்தில் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

விசாரணையின் போது, பரப்புரை கூட்டத்துக்கு விஜய் தாமதமாக வந்தது ஏன்? அவா் வருவதில் தாமதம் இருந்தால் அதற்கான காரணம் என்ன? பாதுகாப்பு ஏற்பாடுகள் என்ன செய்யப்பட்டன? கூட்ட அனுமதி எப்படி பெறப்பட்டது? கூட்டத்துக்கு எத்தனை போ் வருவாா்கள் என்று எதிா்பாா்க்கப்பட்டது? போன்ற பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டது.

மேலும், அனைவரும் அவர்கள் தரப்பு ஆவணங்களை சிபிஐ அதிகாரிகள் முன்னிலையில் சமர்ப்பித்தனர்.

இந்த நிலையில், வழக்கு விசாரணையின் இறுதிகட்டமாக தில்லியில் உள்ள சிபிஐ அலுவலகத்தில்  எதிர்வரும் 12 ஆம் திகதி  விஜய்யை நேரில் ஆஜராக அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .