2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

குற்ற உணர்ச்சியில் தவிக்கும் யாஷிகா

Princiya Dixci   / 2021 ஓகஸ்ட் 07 , பி.ப. 01:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

விஜய் தொலைக்காட்சி புகழ், ‘பிக்பொஸ்’ நிகழ்ச்சி மூலம், இரசிகர்கள் மனதில் இடம்பிடித்து  கொண்டவர் நடிகை யாஷிகா ஆனந்த்.

ஜீவா நடிப்பில் வெளியான ‘கவலை வேண்டாம்’ திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான இவர், அதனைத் தொடர்ந்து ‘துருவங்கள் பதினாறு’, ‘இருட்டு அறையில் முரட்டுக் குத்து’, ‘சோம்பி’ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

எனினும், இவருக்கென அதிக இரசிகர்களைப்  பெற்றுக் கொடுத்தது ‘பிக்பொஸ்’ நிகழ்ச்சியே. இதில் இவர், தனது ஆற்றல்களை வெளிப்படுத்தச் சந்தர்ப்பம் வாய்த்திருந்தது. வெற்றியாளராகும் வாய்ப்புகள் அதிகம் இருந்த சந்தர்ப்பத்தில், இவர் நிகழ்ச்சியை விட்டு வெளியேறியது இரசிகர்களுக்குப் பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியிருந்தது. எனினும், குறித்த தொலைக்காட்சியின் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றதோடு, தன்னை ஒரு நட்சத்திர அந்தஸ்துக்கு உயர்த்தியிருந்தார்.

இந்நிலையில், கடந்த ஜூலை மாதம் 24 ஆம் திகதி இரவு 11 மணியளவில், நடிகை யாஷிகாவும் அவரது சினேகிதி வள்ளிச் செட்டி பவனியும் மற்றும் இரண்டு ஆண் நண்பர்களும் பயணித்த கார், கிழக்கு மகாபலிபுரம் சாலையில்  கட்டுப்பாட்டை இழந்து, சாலையின் நடுவே இருந்த தடுப்புச் சுவரில் மோதிக் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியது.

 இவ்விபத்தில், யாஷிக்காவின் சினேகிதி பவனி காரில் இருந்து தூக்கி வீசப்பட்டு, ஸ்தலத்திலேயே மரணமானார். (இவர் அமெரிக்காவில் மென்பொருள் பொறியியளாளராக பணிபுரிந்த நிலையில், விடுமுறையில் வந்திருந்தார்)

யாஷிகாவும்  இடுப்பு எலும்பில் பல முறிவுகளோடு  வலது காலும்  முறிந்துள்ள நிலையில்  பலத்த காயங்களுடன் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார்.

அறுவைச் சிகிச்சைகளின் பின்னர், சாதாரண வார்ட்டுக்கு மாற்றப்பட்டுள்ளார். கூடவே பயணித்த இரு ஆண் நண்பர்களும்  காயங்களுடன் தப்பியுள்ளதோடு ஆரம்ப சிகிச்சைகளுக்குப் பின்னர் வீடு சென்றுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இவ்விபத்துக் குறித்து யாஷிகா சமூக வலைத்தளங்களில் பதிவுகளை வெளியிட்டுள்ளார்.

‘என் காயங்களுக்கான அறுவைச் சிகிச்சை முடிந்து நான் ஓய்வில் இருக்கிறேன். அடுத்த ஐந்து மாதங்களுக்கு என்னால் எழுந்து நிற்கவோ, நடக்கவோ முடியாது. நாளெல்லாம் படுக்கையில்தான் இருக்கிறேன். அதிலிருந்தபடியே தான் எனது இயற்கை உபாதைகளையும் கழிக்க வேண்டும். என்னால் எந்தப் பக்கமும் திரும்ப முடியவில்லை. இப்படியேதான் பல நாள்களாக விறைப்பாக இருக்கிறேன். என் பின்பகுதி முழுவதும் காயமடைந்துள்ளது. அதிர்ஷ்டவசமாக எனது முகத்தில் எதுவும் ஆகவில்லை. ஆனால், இது கண்டிப்பாக எனக்கு மறுபிறவிதான். ஆனால், இப்படி ஒரு மறுபிறவியை நான் கேட்கவில்லை. உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் நான் காயப்பட்டிருக்கிறேன். கடவுள் என்னைத் தண்டித்திருக்கிறார். நான் இழந்தவற்றை விட இந்தத் தண்டனை பெரிய விஷயமல்ல’ என்று குறிப்பிட்டுள்ளார்.

இவ்விபத்துக்கான காரணம், அதிவேகத்தில் இக் கார் பயணித்ததே எனச் சம்பவத்தை நேரில் பார்த்தோர்  விவரித்துள்ளனர்.  எனினும், யாஷிகா தற்போது இவ்விடயத்தை மறுத்து வருகின்றார். பவனியின் இழப்பு யாஷிகாவிடம் ஒரு குற்ற உணர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதை அவர் சமூக வளைத்தளங்களில் பதிவிட்டு இருக்கின்றார்.

‘நான் உயிர்  பிழைத்ததுக்குக் கடவுளுக்கு நன்றி கூறுவதா இல்லை, பவனியின் இழப்புக்காக கடவுளை கோபித்துக் கொள்வதா’ என்று உணர்ச்சி ததும்பக் குறிப்பிட்டுள்ள வார்த்தைகள், உண்மையில் அவர் ஓர்  இழப்புக்குக் காரணமாக இருந்த குற்ற உணர்ச்சியோடு தவிக்கிறார் என்பதை வெளிப்படுத்தியுள்ளன.

அதிக வேகத்தில் வாகனத்தைச்  செலுத்துதல் தண்டனைக்குரிய ஒரு குற்றம். அதிலும் இதன் மூலம் மரணத்தை ஏற்படுத்துதல், தண்டனையை மேலும் இறுக்கமாக்கும். இவ்விரண்டு குற்றச் செயல்களோடு மூன்றாவதாகவும், ஒரு குற்றத்தை யாஷிக்கா இழைத்திருப்பதாகச் சம்பவத்தை நேரில் பார்த்தோர் தெரிவித்துள்ளனர். அதாவது, விபத்து நடந்த வேளை யாஷிகா குடிபோதையில் இருந்தார்  என்பதே அதுவாகும்.

எனினும் யாஷிகா, தான் குடிபோதையில் வாகனம் செலுத்தவில்லை என மறுத்து வருகின்றார். விபத்துக்குள்ளாகிய கார், யாஷிகாவின்  தாயாரின் பெயரில்  பதிவாகியுள்ளது. சாரதி இருக்கையில் யாஷிக்காவும் பக்கத்தில் பவனியும் அமர்ந்திருந்ததாகவும், இவர்கள் இருவரும் ஷீட் பெல்ட் அணிந்திருக்கவில்லை எனவும், காரின் பின் இருக்கையில் அமர்ந்திருந்த ஆண் நண்பர்கள் ‘ஷீட் பெல்ட் ‘ அணிந்திருந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதிகவேகம் உயிர் ஆபத்தை ஏற்படுத்தும் என்பது அனைவரும் அறிந்திருக்கும் ஒரு விடயம். அதிவேக நெடுஞ்சாலையில் பயணிக்கும் வாகனங்களில் சில, இக்காரணத்தாலேயே விபத்துக்குள்ளாகின்றன.  எனினும், குறித்த விபத்து நடந்த இடத்தில், அதிகம் இருட்டாக இருந்தது என்று யாஷிகா வழங்கியுள்ள வாக்கு மூலத்தையும் கவனத்திற் கொள்ளவேண்டும். மேலும், குறித்த பகுதிகளில் சி.சி.டி.வி கெமராக்கள் காணப்படவில்லை. விபத்துப் பிரதேசமாகக் காணப்படும் இப்பகுதியில்,  சி.சி.டி.வி கெமராக்கள் ஏன் வைக்கப்படவில்லை என, சமூக ஆர்வலர்கள் பலர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இவ்விபத்து யாஷிக்காவுக்கு மாத்திரம் பாடம் புகட்டவில்லை. அதிகவேகத்தில் வாகனத்தைச் செலுத்தும்அனைவருக்குமே பாடம் புகட்டியிருக்கின்றது. சிலருக்குப் புதுமைகள் புரிவது களிப்பைத் தரும். அதுவும் தம்வயதொத்த நண்பர்களோடு இணைந்து களியாட்டங்களில் ஈடுபடும்போது அனைத்தையும் மறந்துவிடுகின்றனர்.

கொரோனா வைரஸ் தொற்றுக் காரணமாக நாடு முடக்கப்பட்ட நிலையில், வீடுகளுக்குள்ளே அடைபட்டிருந்த இளையோர் வெளியே செல்வதற்கான வாய்ப்புகள் கிடைத்த போது, தம் நண்பர்களோடு ஒன்று கூடலுக்குத் திட்டமிடுவது சாதாரணமாகத் தோன்றினாலும், இவ்வாறானதொரு நிகழ்வால் யாஷிகாவுக்கும் அவரது தோழிக்கும் நிகழ்ந்த இழப்புகள் மற்றவர்களால்  சீர்தூக்கிப் பார்க்கப்படவேண்டும்.

ஓகஸ்ட் நான்காம் திகதி, 22 ஆவது பிறந்த நாளை அண்மித்த யாஷிக்காவின் இளமை வாழ்க்கை, இதன் பின்னர் எவ்வாறு இருக்கும் என்பது அனைவரையும் சிந்திக்கச் செய்கின்ற ஒரு விடயமாகும்.  உயிர் ஆபத்து நிலையிலிருந்து மீண்டாலும், நடிகையான இவர் சினிமாத் துறையில் நிலைத்து நிற்க முடியுமா?  என்ற வினா எம் மனங்களில்  தொக்கி நிற்கின்றது.

அவரது உடல்  முழுமையாகத் தேறிய பிறகு, இவர் பொலிஸ் விசாரணைகளுக்கு முகம் கொடுக்க வேண்டியிருக்கும்.  ஒரு மரணத்துக்குக்  காரணமாக இருந்தவர் என்ற வகையில், இவர் மீது கூறப்படும் குற்றங்கள் நிரூபிக்கப்பட்டால் தனது இளமைக்காலத்தைச் சிறையிலேயே கழிக்க நேரிடலாம்.

இளமை, அழகு, ஆற்றல் ஆகிய அனைத்தும் நிறைந்த இவரது எதிர்காலம் என்னவாகும் என்ற விடயத்தில், இவரது ரசிகர்கள் மிகுந்த கவலை கொண்டிருப்பதாகக் கூறப்படுகிறது. எது எப்படியாக இருப்பினும் இவ்விபத்து, வாகனங்கள் செலுத்தும் அனைவருக்கும் ஓர் எச்சரிக்கையை ஏற்படுத்தி இருக்கின்றது. பிறரது அனுபவங்களில் இருந்து நாம் பெற்றுக் கொள்ளும் பாடங்கள் எமது சுய தரிசனத்தைப்  பூர்த்தி செய்யவேண்டும். வேகம் விவேகமா என்பதை ஆழமாகச் சிந்தித்து நிதானத்துடன் வாகனங்களைச் செலுத்த அனைவரும் முயலவேண்டும் என்பதே  சமூதாயம் வேண்டும் நிற்கும் ஒரு நலனாகும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .