2025 மே 14, புதன்கிழமை

தமிழ்த் திரையுலகின் அடுத்தகட்ட பரபரப்பு

George   / 2016 நவம்பர் 17 , மு.ப. 05:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமிழ்த் திரைப்படத் துறையில் இருக்கும் அரசியலைப் பற்றி எழுத வேண்டுமானால் பக்கங்கள் போதாது. யார் யாருக்கு, எப்போது நண்பர்களாக இருப்பார்கள், எதிரிகளாக மாறுவார்கள், துரோகிகளாக மாறுவார்கள் என்பதைச் சொல்லவே முடியாது.

திறமையிலிருந்து, அதிர்ஷ்டமும், நேரமும் ஒன்றுக் கூடி வந்தால் போதும் ஒரே திரைப்படத்தில் பணக்காரர்களாகி விடலாம் என்ற எண்ணத்தில் கோலிவூட்டை நோக்கி தினமும் பலர் வந்து கொண்டுதானிருக்கிறார்கள்.

தங்களுக்குத் திருப்புமுனை கொடுத்த இயக்குநர்களையும், நடிகர்களையும், தயாரிப்பாளர்களையும் மறந்து போன பல பேர், இங்கு இருக்கிறார்கள். ஆரம்ப காலத்தில் ஒரு மாதிரியும், நட்சத்திரம் ஆன பின் வேறு மாதிரியும் மாறிப் போனவர்கள் பலர்.   

தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு கடந்த ஆண்டு தேர்தல் நடைபெற்ற போது, அப்போது பதவியில் இருந்த சரத்குமாரை எதிர்த்து, விஷால் தலைமையில் இளம் நடிகர்கள் கொண்ட ஓர் அணி திரண்டது. யாரும் எதிர்பாராதவண்ணம் பெரிய அளவிலான வெற்றியைப் பெற்றது. தாங்கள் சொன்னது போலவே நடிகர் சங்க நிலத்தையும் மீட்டு, அங்கு விரைவில் சொந்தக் கட்டடம் கட்டும் அளவுக்கு நிலைமை போய்க் கொண்டிருக்கிறது.   

இந்த சூழ்நிலையில், 2017ஆம் ஆண்டு ஜனவரி மாதம், தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்துக்கு வர இருக்கும் தேர்தல் பரபரப்பு, இப்போதே ஆரம்பமாகிவிட்டது. விஷால் அளித்த ஒரு பேட்டியைக் காரணம் காட்டி இரண்டு நாட்களுக்கு முன்னர் அவரை தயாரிப்பாளர் சங்கத்திலிருந்து நீக்கியிருக்கிறார்கள்.   

“நடிகர் சங்கத்தில் செயலாளராக இருக்கும் ஒருவருக்கே நிலைமை இப்படியென்றால்...” என விஷாலும் கேள்வி எழுப்புகிறார். ஆனால், தன்னுடைய நீக்கம் குறித்து தானே, சட்ட ரீதியாகப் பார்த்துக் கொள்வதாகவும் அதில் நடிகர் சங்கம் தலையிடாது என்றும் தெரிவித்தார். அதே சமயம், தங்களது சார்பாக ஓர் அணி, தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் களமிறங்கும் என்றும் கூறியுள்ளார்.   

எப்படி நடிகர் சங்கத்துக்கு எதிராக ஓர் இளம் நடிகர்கள் ஒன்று திரண்டார்களோ, அதே போல தற்போது தயாரிப்பாளர் சங்கத்துக்கு எதிராக இளம் தயாரிப்பாளர்கள் ஒன்று திரள்வார்களோ என கோலிவூட்டே ஆச்சரியத்துடன் பார்த்துக் கொண்டிருக்கிறது. சில மாதங்களுக்கு முன்பே இது குறித்து பல ஆலோசனைகள் நடைபெற்றதாக கோலிவூட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X