Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 17, சனிக்கிழமை
George / 2015 நவம்பர் 11 , மு.ப. 04:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
'தல' என்று இரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படும் நடிகர் அஜீத் மற்றும் நடிகை ஸ்ருதி ஹாசன், லட்சுமிமேனன், நடிகர் சூரி, அஸ்வின், நான் கடவுள் ராஜேந்திரன், தம்பி ராமையா, கோவை சரளா உட்பட நட்சத்திர பட்டாளத்தின் நடிப்பில் மிகப்பெரும் எதிர்பார்ப்பு மற்றும் ஆராவாரத்துத்துடன் தீபாவளி தினமான நேற்று வெளியான திரைப்படம் வேதாளம். இயக்குநர் சிவாவின் இயக்கத்தில் இளம் இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்க வெற்றி - ஒளிப்பதிவு செய்திருக்கின்றார்.
அஜீத், தனது தங்கையான லட்சுமிமேனனை கல்லூரியில் சேர்ப்பதற்காக கொல்கொத்தா நகரத்துக்கு வருகின்றார். அப்போது, நான் கடவுள் ராஜேந்திரனின் அறிமுகம் கிடைப்பதுடன் அங்கு வாடகை கார் ஓட்டுநராக பணிபுரியும் மயில்சாமி உதவியுடன் வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்து தங்குகின்றார். அத்துடன், அவரது உதவியுடன் வாடகை கார் வழங்கும் முதலாளியான சூரியிடம் சாரதியாக வேலைக்கு சேர்கின்றார்.
வழக்கறிஞராக பணிபுரியும் ஸ்ருதிஹாசன், ஒருநாள் அஜீத்தின் வாடகைக் காரில் வருவதுடன் நீதிமன்றத்தில் பொய் சாட்சி சொல்வதற்கு அஜீத்தை அழைத்துச் செல்கின்றார். அப்போது அஜீத், ஸ்ருதி ஏற்பாடு செய்த பொய்சாட்சி என்று நீதிமன்றத்துக்கு எப்படியோ தெரிந்துவிடுவதுடன் ஸ்ருதிக்கு அபராதம்; விதிக்கப்பட்டு, பணி இடைநிறுத்தம் செய்யப்படுகின்றார்.
ஒருநாள், ஸ்ருதிஹாசனின் அண்ணனான அஸ்வின், அஜீத்தின் வாடகை காரில் பயணம் செய்கிறார். அப்போது லட்சுமிமேனனை சந்திப்பதுடன் அவர் மீது அஸ்வினுக்கு காதல் ஏற்படுகின்றது. அதனையடுத்து, குடும்பத்தோடு சென்று அஜீத்திடம் சொல்ல, அஜீத்தின் சம்மதத்துடன் திருமண நிச்சயதார்த்தம் நடக்கின்றது.
இந்நிலையில், பாசமான அண்ணனாக அப்பாவியாக இருக்கும் அஜீத், கொல்கெத்தாவில் இருக்கும் போதைப் பொருள் கடத்தும் குழுவை அழித்து வருகிறார். அந்தக் குழுவின் தலைவனான ராகுல் தேவ்வின் தம்பிகள் இரண்டு பேரை அஜீத் கொலை செய்துவிடுகின்றார்.
ஒருக்கட்டத்தில் அஜீத் கொலை செய்வதை ஸ்ருதிஹாசன் பார்த்து விடுவதுடன் ஒரு கொலைகாரனின் தங்கையைத் தனது அண்ணனுக்கு நிச்சயதார்த்தம் செய்ததை நினைத்து ஸ்ருதிஹாசன் வருந்துகிறார். அதன்போது, லட்சுமிமேனன் என் தங்கையே இல்லை என்று சொல்லி அதிர்ச்சியடைய வைக்கின்றார் அஜீத்.
லட்சுமிமேனன் அஜீத்தின் தங்கை இல்லையென்றால், லட்சுமிமேனன் யார்? எதற்காகப் போதைப் பொருள் கடத்தல் குழுவை அஜீத் அழிக்கிறார்? அஜீத்துக்கும் அந்தக் குழுவுக்கும் உள்ள முன்விரோதம் என்ன? என்பதுதான் மீதிக்கதை.
முற்றிலும் மாறுப்பட்ட இரு வேறு விதமான நடிப்பை அஜீத் வெளிப்படுத்தியுள்ளார். இதுவரை அஜீத் நடித்த திரைப்படங்களில் அதிகமாக அக்ஷனில் கலக்கியது இந்தத் திரைப்படமாகத்தான் இருக்கும். திரைப்படத்தின் ஆரம்பத்தில் ஆரம்பமாகும் சண்டை, இறுதிக் காட்சிவரை நீடிக்கின்றது.
ஏனைய திரைப்படங்களைவிட இந்தத் திரைப்படத்தில் அஜீத் அழகாகத் தெரிகின்றார். பாசமான அண்ணனாகவும் சரி, ரௌடி வேதாளமாகவும் சரி நடிப்பில் அசத்தியிருக்கின்றார். அஜீத் இரசிகர்கள் என்ன எதிர்பார்த்தார்களோ அந்தளவுக்கு மாஸாக நடித்துள்ளார். சண்டைக் காட்சிகளில் அனல் தெறிக்கின்றது. பாடல் காட்சிகளில் வெறித்தனமாக நடமாடியிருக்கின்றார் என்றுதான் சொல்ல வேண்டும். பாசக் காட்சிகளில் பட்டையைக் கிளப்பியிருக்கும் அஜீத், ஒரு கட்டத்தில் லட்சுமி மேனனுக்காக அழும் காட்சிகளில் எம்மையறியாமல் கண்களில் கண்ணீர் துளித்துவிடுகின்றது. பாசமலர் சிவாஜி கண்ணில் தெரிகின்றார்.
வில்லனாக நடித்திருக்கும் ராகுல் தேவ் மற்றும் கபீர் சிங் ஆகிய இருவரும் அட்டகாசமாக அசத்தியிருக்கின்றனர். வேதளமாக வரும் அஜீத் எவ்வளவு வெறித்தனமாக நடித்தாரோ அதற்கு ஈடு கொடுக்கும் வகையில் வில்லன்களின் நடிப்பும் இருக்கின்றது சிறப்பு.
பாசமான தங்கையாக இதுவரை வெளிப்படுத்தாத நடிப்பை லட்சுமி மேனனிடம் காணமுடிகின்றது. அண்ணா அண்ணா என்று அஜீத்திடம் உருகும் போது, இந்தக்காலத்தில் இப்படி ஓர் அண்ணன் தங்கையா என்று நினைக்கத் தோன்றுகின்றது. ஏனைய திரைப்படங்களைவிட லட்சுமியின் நடிப்பில் ஒரு பக்குவம் தெரிகின்றது.
தனக்குக் கொடுக்கப்பட்ட வேலையை அழகாக செய்துள்ளார் ஸ்ருதி. தனது வேலை போக காரணமாக இருந்த அஜீத் மீது ஆத்திரப்படும் போதும் சரி, அவரை பழிவாங்க நினைத்து சூரியுடன் இணைந்து கலக்கும் காட்சிகளிலும் சரி அருமையாக நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். காதல், ரொமான்ஸ் காட்சிகள் இல்லை. அத்துடன், ஸ்ருதிக்கு போதியளவு வாய்ப்பு வழங்கவில்லை என்று தோன்றுகின்றது. ஏதோ திரைப்படத்தில் நாயகி தேவை என்பதற்காக ஸ்ருதி வந்து போவது போல இருக்கின்றது.
சூரியின் கொமடி தெறி தூள் என்று சொல்லும் அளவுக்கு அருமையான உள்ளது. அவர் வரும் ஒவ்வொரு காட்சியிலும் கைத்தட்டல்கள் பறக்கின்றன. அவரது கொமடி ஸ்டைல், வசனங்களின் வெளிப்பாடு மற்றும் உடல் அசைவுகளுக்கு சிரிக்காமல் இருக்க முடியவில்லை.
கண்தெரியாதவராக நடிக்கும் தம்பி ராமையா, ரொளடியாக வரும் நான் கடவுள் ராஜேந்திரன், வாடகை கார் ஓட்டுநர் மயில்சாமி, கோவை சரளா, ஆகியோரின் நடிப்பும் பாராட்டும்படி உள்ளன.
சிறுத்தை, வீரம் என்று அதிரடியாக திரைப்படங்களை இயக்கி, இயக்குநர் சிவா என்றாலே அடிதடி தான் என்பதை இந்தத் திரைப்படத்திலும் நிஜமாக்கி காட்டியுள்ளார். திரைக்கதையில் இன்னும் சற்று கவனம் செலுத்தியிருக்கலாம். முதல் பாதி செம மாஸாக செல்லும் திரைப்படம், பிற்பாதியில் சற்று தொய்வடைகின்றது.
முதல் இரண்டு வில்லன்களை பிரமாண்டமாக காட்டிவிட்டு அவர்களைவிட பெரிய வில்லனை இரண்டாம் பாதியில் மொக்கையாகக் காட்டியது, அஜீத்தின் முதல் சண்டைக் காட்சி மற்றும் பழிவாங்கும் காட்சிகளில் இருந்த பிரமாண்டம் அல்லது தெறி இரண்டாவது பாதியில் காணாமல் போனது, திரைப்படத்தின் முதல் பாதியை விறுப்பாக பார்த்து வந்த ரசிகர்களுக்கு இரண்டாம் பாதியில் அடுத்து என்ன நடக்கும் என்று ஊகிக்க கூடியாதாக இருப்பது என்று காரணங்களை அடுக்கிக்கொண்டே போகலாம்.
அனிருத்தின் இசையில் பாடல்கள் செம ஹிட். 'ஆலுமா டோலுமா' பாடல் திரையரங்கை அதிர வைக்கின்றது என்றாலும், அனிருத்திடம் எதிர்பார்த்தது இந்த திரைப்படத்தில் கிடைக்கவில்லை. வெறும் அதிரடி பாடல்களை மட்டும் வைத்துகொண்டு இரசிகர்களை திருப்திப்படுத்துவது என்பது மிகவும் கடினம். மெல்லிசை காதல் பாடல்களையும் வைத்திருக்கலாம். பின்னணி இசையில் பிரமாண்டமாக கலக்குவதாக நினைத்து திரைப்படம் பார்ப்பவர்களின் காதைக் கிழிய வைத்திருக்கின்றார்கள். அஜீத் - யுவன் காம்பினேஷன் போன்று அஜீத் - அனிருத் காம்பினேஷன் இதில் அறவே இல்லை.
ஒளிப்பதிவில் வெற்றி, வெற்றிப்பெற்றுள்ளார் என்றுதான் சொல்ல வேண்டும். அதனைவிட திரைப்படத்தின் எடிட்டிங் அருமையாக உள்ளது. இந்த எடிட்டிங்தான் திரைப்படத்தின் வெற்றிக்கு பாதி பலமே என்று சொன்னாலும் மிகையில்லை. அந்தளவு அந்தனி எல்.ரூபன் எடிட்டிங்கில் அசத்தியிருக்கின்றார்.
தல இரசிகர்களுக்கு இது செம மாஸ், தெறி திரைப்படமாக அமையுமென்பதில் சந்தேகமில்லை. அஜீத் இரசிகனாக திரைப்படத்தை அங்குலம் அங்குலமாக இரசிக்கலாம். குடும்பத்தோடு சென்று பார்க்கலாம். ஆனால், ஏனையவர்களுக்கு இவ்வாறு இருக்கும் என்று உறுதியாக கூறமுடியாது.
மொத்தத்தில் 'வேதாளம்' வேட்டை
-ஜே.ஏ.ஜோர்ஜ்
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 minute ago
8 hours ago
16 May 2025