2021 ஒக்டோபர் 26, செவ்வாய்க்கிழமை

கால்பந்தாட்ட உலகக் கிண்ணம்: சுவீடன்

Editorial   / 2018 ஏப்ரல் 25 , பி.ப. 03:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

- ச. விமல்

கால்பந்தாட்ட உலகக் கிண்ணத் தொடர் ரஷ்யாவில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள நிலையில், குழு எப்பில் இடம்பெற்றுள்ள சுவீடன் அணியை இக்கட்டுரை நோக்குகின்றது.

சுவீடன் அணி ஐரோப்பிய கண்ட அணி. சுவீடனும் கூட பலமான அணி என்றாலும் அண்மைய காலங்களில் சொல்லக்கூடியளவில் இல்லை. கடந்த இரண்டு உலக கிண்ண தொடர்களுக்கும் தகுதி பெறாதவர்கள் இம்முறை தகுதி பெற்றுள்ளார்கள். இவர்களது உலகக்கிண்ண வரலாறு 1934 ஆம் ஆண்டு முதல் ஆரம்பித்தது. முதல் உலக கிண்ண தொடரில் விளையாடவில்லை. 16 அணிகள் விளையாடிய 34 ஆம் ஆண்டு உலக கிண்ண தொடரில் காலிறுதிக்கு முன்னேறினார்கள். எட்டாவது இடம் இவர்களுக்கு கிடைத்தது. அடுத்த உலகக் கிண்ணத் தொடரில் நான்காமிடத்துக்கு முன்னேறினார்கள்.  இரண்டாம் உலக யுத்தத்தின் பின்னர் நடைபெற்ற 1950 ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கிண்ணத் தொடரில் மூன்றாமிடதத்துக்கு முன்னேறினார்கள்.

1954 ஆம் ஆண்டு உலகக் கிண்ணத் தொடரின் தகுதிகாண் போட்டிகளில் ஒரு வெற்றியை மாத்திரமே பெற்று உலகக் கிண்ண வாய்ப்பை இழந்தார்கள். ஆனால் அடுத்த 58ஆம் ஆண்டு உலக கிண்ணத் தொடரில் மிக அபாரமான மீள் வருகையை மேற்கொண்டார்கள். இறுதிப் போட்டிவரை முன்னேறியவர்கள் இரண்டாமிடத்தை பெற்றுக் கொண்டார்கள். உலகக் கிண்ணத் தொடரில் சுவீடன் அணி பெற்றுக்கொண்ட உயரிய இடம் இதுவே.

இதுவரையிலும் பலமாக காணப்பட்ட சுவீடன் அணியின் பலம் வீழ்ச்சி கண்டது. பெரியளவில் இவர்களால் உலக கிண்ண தொடரில் சாதிக்க முடியவில்லை. 94ஆம் ஆண்டு அமெரிக்க உலகக் கிண்ணத் தொடரில் மூன்றாமிடத்தை பெறும் வரையில் இவர்கள் எதனையும் பெரிதாக சாதிக்கவில்லை. 62, 66, 82, 86 ஆகிய ஆண்டுகளில் உலக கிண்ணத்துக்குத் தகுதி பெறவில்லை. இந்த பகுதியில் மூன்று உலக கிண்ண தொடர்களில் இரண்டு தொடர்களில் முதல் சுற்றுடன் வெளியேற்றப்பட்டார்கள். 74ஆம் ஆண்டு இரண்டாம் சுற்றுடன் வெளியேற்றப்பட்டார்கள். 1994ஆம் ஆண்டின் பின்னர் நடைபெற்ற ஐந்து உலக கிண்ண தொடர்களில் மூன்றில் தகுதி பெறவில்லை. 2002, 2006 ஆம் ஆண்டு உலகக் கிண்ணத் தொடர்களில் இரண்டாம் சுற்றுடன் வெளியேற்றப்பட்டார்கள்.

சுவீடன் அணி வெற்றியுடன் தங்கள் சர்வதேச கால்பந்தாட்ட பயணத்தை ஆரம்பித்த அணி. 1908 ஆம் ஆண்டு ஜூலை 12 ஆம் திகதி நடைபெற்ற போட்டியில் நோர்வே அணியை 11-3 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றார்கள். ஆனால் அதேயாண்டு நடைபெற்ற மிகுதி போட்டிகளில் ஐந்திலும் மோசமான தோல்விகளை அடைந்தார்கள். அதேயாண்டு நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிகளில் 1-12 என்ற கோல் கணக்கில் இங்கிலாந்திடம் தோல்வியடைந்தது அவர்களின் மோசமான தோல்வியாக இன்று வரை திகழ்கிறது.

 சுவீடன் அணி ஐரோப்பிய வலயத்தின் முதலாவது சுற்றுப் போட்டிகளில் குழு ஏயில் இரண்டாமிடத்தைப் பெற்றது. பிரான்ஸ், சுவீடன் அணிகளுக்கிடையில் கடும் போட்டியொன்று நிலவிய போதும் பிரான்ஸ் அணி முதலிடத்தை பெற்றுக் கொண்டது. ஆனாலும் நெதர்லாந்து, சுவீடன் அணிகளுக்கிடையிலான போட்டியே மிகவும் கடுமையாக இருந்தது. இரண்டு அணிகளும் சம புள்ளிகளை பெற்றுக் கொண்டன. கோல் வித்தியாசத்தில் முன்னிலை பெற்ற சுவீடன் அணி இரண்டாம் கட்ட போட்டிகளுக்கு தகுதி பெற்றது. 

குழு நிலைப்போட்டிகளில் இரண்டாமிடங்களை பெற்றுக்கொண்ட முதல் 8 அணிகள் இரண்டாம் கட்ட தெரிவுகாண் போட்டிகளில் மோதின. இந்த எட்டணிகளில் நான்கு அணிகள் இவ்விரு அணிகளாக போட்டியிட்டன. சொந்த நாட்டிலும் வெளிநாட்டிலுமாக போட்டிகளாக நடைபெற்றன.   சுவீடன் அணி பலமான இத்தாலி அணியை இரண்டாம் கட்ட தெரிவுகாண் போட்டிகளில் சந்தித்தது. யாரும் எதிர்பார்த்த விதமாக இத்தாலி அணியை சுவீடன் அணி வீழ்த்தி உலகக் கிண்ண வாய்ப்பை தனதாக்கியது. இத்தாலி, சுவீடன் அணிகளுக்கிடையில் இத்தாலியில் நடைபெற்ற போட்டியை கோல்களின்றி சமன் செய்து தங்கள் நாட்டில் நடைபெற்ற போட்டியில் 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றுக் கொண்டார்கள்.

 

தெரிவுகாண் போட்டிகளில் குழு A

1  பிரான்ஸ்                      10           7              2              1              18           6              12           23          

2  சுவீடன்                        10           6              1              3              26           9              17           19          

3   நெதர்லாந்து              10           6              1              3              21           12           9              19          

4    பல்கேரியா                 10           4              1              5              14           19           -5            13          

5    லக்ஸம்பேர்க்            10           1              3              6              8              26           -18          6             

6    பெலாரஸ்                     10           1              2              7              6              21           -15          5

 

சுவீடன் அணி உலகக் கிண்ண 46 போட்டிகளில் 16 வெற்றிகளை பெற்றுக் கொண்டுள்ளார்கள். 13 போட்டிகளில் சமநிலை முடிவுகளை பெற்றுள்ளார்கள்.  17 போட்டிகளில் தோல்விகளைச் சந்தித்துள்ளார்கள். இந்த முடிவுகளின் படி 61 புள்ளிகளைப் பெற்று உலகக் கிண்ண தரப்படுத்தல்களில் 10ஆம் இடத்தைப் பெற்றுள்ளார்கள். ஏப்ரல் மாதத்தில் வெளியிடப்பட்ட தரப்படுத்தல்களின் படி சுவீடன் அணி 23 ஆம் இடத்தைப் பெற்றுள்ளது.

பலமான அணியாக காணப்படுகிறார்கள். ஆனால் இவர்கள் குழு பலமான குழு. இம்முறை உலகக் கிண்ணத்தை வெற்றி பற வாய்ப்புகள் உள்ளது என எதிர்பார்க்கப்படும் ஜேர்மனி அணி குழு எவ்வில் இடம்பிடித்துள்ளது. மெக்சிக்கோ அணி தரப்படுத்தல்களில் 15ஆம் இடத்தில் காணப்படுகிறது. நான்காவது அணியான தென்கொரிய அணி 61ஆம் ஆமிடத்தில் காணப்படுகிறது. சுவீடன் அணிக்கும் மெக்சிக்கோ அணிக்குமிடையிலேயே அதிகமான போட்டி காணப்படும். கடந்த கால போட்டிகள், குழு நிலையை பார்க்கின்ற வேளையில் சுவீடன் அணிக்கான இரண்டாம் கட்ட வாய்ப்புகள் குறைவாகவே காணப்படுகின்றன. சுவீடன், ஒவ்வொரு போட்டிகளிலும் சிறப்பாக விளையாட வேண்டும். ஒவ்வொரு கோலும் சுவீடன் அணிக்கு முக்கியமாக அமையப்போகிறது.

சுவீடன் அணிக்கான வெற்றி வாய்ப்புகள் 17ஆம் இடத்தில் வழங்கப்பட்டுள்ளது. எனவே இவர்கள் இந்த உலகக் கிண்ணத்தில் 17ஆம் இடத்தைப் பெறுவார்கள் என்பதே அந்த எதிர்பார்ப்பு. எனவே இவர்கள் முதல் சுற்றுடன் வெளியேறுவார்கள். ஆனால் முதல் சுற்றுடன் வெளியேறும் அணிகளில் முதலிடம் வழங்கப்பட்டுள்ளது. பலமான அணி. ஆனால் மற்றைய பலமான அணிகள் இவர்களை வீழ்த்தும். இதுவே 1950ஆம் ஆண்டு காலமென்றால் சுவீடன் அணிக்கு வாய்ப்புகளை வழங்கலாம். இவர்களின் அண்மைக்கால போட்டிகளின் முடிவுகள் இவர்களுக்கு அதிக சாதகமான நிலையை வழங்க முடியவில்லை.

சுவீடன் அணி எந்தளவுக்கு சிறப்பாக விளையாடப் போகிறார்கள் என்பது இவர்களுக்கு முக்கியமானது. ஆனால் இங்கே கவனிக்க வேண்டிய இன்னுமொரு முக்கிய விடயமுள்ளது. பலமான நெதர்லாந்து மற்றும் இத்தாலி அணிகளை வெளியேற்றி உலக கிண்ணத்துக்கு தகுதி பெற்றுள்ளார்கள்.  எனவே பலமான அணிகளை இவர்கள் தோற்கடிக்க மாட்டார்கள் எனவும் கூற முடியாது. சுவீடன் அணியால் நிச்சயம் இந்த குழுவில் மாற்றங்களை செய்ய முடியும் என நம்பலாம்.

சுவீடன் அணியின் குழு நிலை போட்டிகள்

18 ஜூன்  - 17:30 எதிர் தென்கொரியா

23 ஜூன் - 23.30 எதிர் ஜேர்மனி

27 ஜூன்  - 19:30 எதிர் மெக்சிக்கோ


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .