2021 ஒக்டோபர் 27, புதன்கிழமை

கால்பந்தாட்ட உலகக் கிண்ணம்: பனாமா

Editorial   / 2018 ஏப்ரல் 23 , பி.ப. 04:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

- ச. விமல்

நான்கு ஆண்டுகளுக்கு ஒரு தடவை நடைபெறும் கால்பந்தாட்ட உலகக் கிண்ணத் தொடர் இம்முறை ரஷ்யாவில் இவ்வாண்டு ஜூன் மாதம்    ஆரம்பிக்கவுள்ளது. கால்பந்தாட்ட உலக கிண்ணத் தொடரே உலகில் நடைபெறும் விளையாட்டுத் தொடர்களில் அதிகம் பேரால் பார்க்கப்படுவதும் ரசிக்கப்படுவதுமாகும்.

எனவே அவ்வாறான தொடரில் பங்குபற்றும்   32 அணிகளது விடயங்களில், ஏற்கெனவே ஆறு அணிகளைப் பற்றிய கட்டுரைகள் பிரசுரிக்கப்பட்டுள்ள நிலையில், இக்கட்டுரை உலகக் கிண்ண அறிமுகத்தை மேற்கொள்ளும்   குழு ஈ அணியான பனாமா அணி பற்றி நோக்குகிறது.  

பனாமா இம்முறை உலகக் கிண்ண அறிமுகம் பெறும் நாடு. இவர்களது 40 ஆண்டுப் போராட்டத்துக்கு கிடைத்தை வெற்றியாக இது அமைந்துள்ளது. மக்கள் தொகையின் அடிப்படையில் இன்னுமொரு சிறிய நாடாக கருதலாம். 2016ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின் படி கிட்டத்தட்ட 40 இலட்சம் பேராக பனாமா நாட்டின் மக்கள் தொகை காணப்படுகிறது,

பனாமா, மத்திய அமெரிக்க நாடு. இதன் காரணமாக கொன்ககப் (CONCAF) என அழைக்கப்படும் வட, மத்திய அமெரிக்கா மற்றும் கரீபியன் தீவுகள் இணைந்த வலையத்தை பனாமா அணி பிரதிநிதித்துவப்படுத்துகிறது.

பனாமா கால்பந்தாட்ட அணி 1938ஆம் ஆண்டு முதல் சர்வதேசப் போட்டியில் விளையாடியது. 80 ஆண்டுகளில் உலக கிண்ணத்துக்கு தகுதி பெற்றுள்ளார்கள். 1978 ஆம் ஆண்டு வரை உலக கிண்ண தகுதிகாண் போட்டிகளில் விளையாட இவர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டிருக்கவில்லை. 1978 ஆம் ஆண்டு முதற் தடவையாக தகுதிகாண் போட்டிகளில் களமிறங்கியவர்கள் வெற்றியொன்றைப் பெற்றார்கள். அடுத்த மூன்று உலகக்கிண்ண தொடர்களிலும் ஒரு தகுதிகாண் போட்டியிலும் அவர்களால் வெற்றிபெற முடியவில்லை.

1994ஆம் ஆண்டு தகுதிகாண் போட்டிகளில் ஒரு போட்டியில் வெற்றிபெற்றவர்கள் 1998ஆம் ஆண்டு முதல் முன்னேற்றகரமான நிலைக்குச் சென்றனர். 2002 மற்றும் 2006 ஆம் ஆண்டு இவர்களுக்கு முன்னேற்றமான ஆண்டுகளாக அமைந்தன. அடுத்தடுத்த சுற்றுகளுக்கு இவர்களால் முன்னேற முடிந்தது. அதிக போட்டிகளில் விளையாடியமையால் அனுபவத்தையும் பெற்றிருப்பார்கள். ஆனால் 2010 ஆம் ஆண்டு முதலாவது சுற்றுடன் வெளியேறினார்கள்.  இனி இவர்கள் சரிவரமாட்டார்கள் என்ற நிலை காணப்பட 2014 ஆம் ஆண்டுக்கான தகுதிகாண் போட்டிகள் இவர்களுக்கு நம்பிக்க்கையை  தந்தது. தகுதிகாண் போட்டிகளின் இறுதிக்கட்டம் வரை முன்னேறினார்கள். அந்த முன்னேற்றம் மற்றும் நம்பிக்கையே இம்முறை உலகக் கிண்ணம் வரை  வந்துள்ளது என நம்பலாம்.

ஒரு அணி உலக கிண்ணத்துக்கு தகுதி பெறவே இத்தனை வருடங்கள் போராட வேண்டுமென்றால், உலக கிண்ண ஜாம்பவான்களை வீழ்த்த எவ்வளவு போராட வேண்டும்? அதே காலத்தில் அந்த ஜாம்பவான்கள் தங்களை பாதுகாக்க, வளர்த்துக்கொள்ள எவ்வளவு முக்கியத்துவம் வழங்குவார்கள்? உலகின் முன்னணி விளையாட்டு என்றால் சும்மாவா?  பனாமா அணியை கால்பந்தாட்ட உலக கிண்ணத்தில் கால்பதிக்கும் 79ஆவது நாடாக நாம் குறிப்பிடலாம். இதுவரை 77 நாட்டு அணிகள் உலக கிண்ண தொடரில் விளையாடியுள்ளன. கடந்த கட்டுரையில் நாங்கள் ஐஸ்லாந்து அணியினை 78 வது நாடக தந்துள்ளமையினால் பனாமா 79 வது நாடு.

கொன்ககப் என அழைக்கப்படும் வட, மத்திய அமெரிக்கா மற்றும் கரீபியன் தீவுகள் வலயத்தின் தகுதிகாண் போட்டிகள் ஆறு சுற்றுக்களாக நடைபெறும். அவற்றிலிருந்து மூன்று அணிகள் இம்முறை தெரிவாகியுள்ளன. இந்த வலயத்திலிருந்து மூன்று அணிகள் நேரடியாக தகுதி பெற்றன. நான்காவது இடத்தை பெற்ற ஹொண்டூரஸ் அணி அவுஸ்திரேலிய அணியிடம் தோல்வியடைந்து உலக கிண்ண வாய்ப்பை இழந்தது.

இந்த வலயத்தில் 35 அணிகள் மொத்தமாக போட்டியிட்டன. இந்த அணிகளுள் சர்வதேச தரப்படுத்தல்களுக்கிணங்க, குறித்த வலயத்தின்    இறுதி 14 இடங்களைப் பெற்ற அணிகள் விலகல் சுற்றில் மோதி, 7 அணிகள் அடுத்த கட்ட வாய்ப்பைப் பெற்றன. இந்த 14 அணிகளுள் பனாமா அணி இடம்பெற்றிருக்கவில்லை.  வெற்றிபெற்ற அணிகளும் தரப்பப்படுத்தல்களில் ஒன்பதாவதிடத்திலிருந்து 21ஆவது இடம் வரை இருந்த 13 அணிகளுகமாக 20 அணிகள் விலகல் முறையில் மோதி 10 அணிகள் மூன்றாம் சுற்றுக்கு தெரிவு செய்யப்பட்டன. இந்த 10 அணிகள் ஏழாம், எட்டாமிட அணிகளுடன் இணைந்து 12 அணிகளாக விலகல் முறையில் மோதி நான்காவது சுற்றுக்கு தகுதி பெற்றன. அந்த ஆறு அணிகளும், முதல் ஆறு இட அணிகளுடன் இணைந்தன. பனாமா அணி முதல் ஆறிடத்துக்குள் காணப்பட்டது.

12 அணிகளும் மூன்று குழுக்களாக பிரிக்கப்பட்டன. ஒவ்வொரு குழுவிலிருந்தும் முதலிரு இடங்களை பெற்ற அணிகள் அடுத்த ஐந்தாவது சுற்றுக்குத் தெரிவு செய்யப்பட்டன.  குழு பியில் பனாமா அணி இரண்டாமிடத்தை பெற்றுக் கொண்டது.  இந்த ஆறு அணிகளும் குழு நிலைப் போட்டிகளில் சொந்த நாட்டிலும் எதிரணியின் நாட்டிலுமென விளையாடின. இந்த ஆறு அணிகளில் முதல் மூன்றிடங்களை பெறுமணிகள் நேரடியாக உலகக் கிண்ண வாய்ப்பை பெறுவார்கள். முதலிடத்தை மெக்சிகோ அணியும் இரண்டாமிடத்தை கொஸ்டரிக்கா அணியும் மூன்றாமிடத்தை பனாமா அணியும் பெற்றுக் கொண்டன.

பனாமா அணி குழு ஜியில் இடம்பிடித்துள்ளது. இரண்டு பலமான ஐரோப்பிய அணிகளுடன் இடம்பிடித்துள்ளது. இவற்றுள் இங்கிலாந்து அணியே மிகவும் பலமான அணி. பெல்ஜியம் அணி பலமான அணியாக அண்மைக் காலமாக திகழ்ந்தாலும் உலக கிண்ணம் என பார்க்கும் போது பலமான அணியாக இல்லை. இன்னுமொரு அணி துனீஷிய அணி. எனவே பனாமா அணிக்கு இலகுவான ஒரு குழு கிடைத்துள்ளது என யோசிக்க தோன்றினாலும், தரப்படுத்தல்கள் இந்நிலையை தலை கழாக மாற்றியுள்ளது. ஆகவே இவர்கள் வெற்றிகளை பெறாவிட்டாலும் சிறப்பாக விளையாடி தமக்கான ஒரு பெயரை நிலைநாட்ட வாய்ப்பு கிடைத்துள்ளது. புதிய அணிகள் வெற்றிபெறுவது என்பது இலகுவான விடயம் கிடையாது. ஆனால் நல்ல முறையில் விளையாடி தங்கள் பெயரைத் தக்கவைத்துக் கொள்வது அல்லது நல்ல பெயரை ஏற்படுத்துவது என்பது முக்கியமானது. அதனை பனாமா அணியினர் சரியாகச் செய்யவேண்டும்.

இறுதியாக இவ்வாண்டு ஏப்ரல் மாதத்தில் வெளியிடப்பட்ட தரப்படுத்தல்களின் படி பனாமா அணி இடம்பிடித்துள்ள குழுவிலுள்ள பெல்ஜியம் அணி மூன்றாமிடத்திலுள்ளது. இங்கிலாந்து அணி 13ஆம் இடத்தில் காணப்படுகிறது. பனாமா அணிக்கு போட்டியாக இருக்குமென எதிர்பார்க்கும் துனீஷிய அணி முன்னணி அணிகளுக்கு சவால் விடுக்குமிடத்திலுள்ளது. இங்கிலாந்து அணிக்கு ஒரு இடம் மாத்திரமே பின்னிலையுள்ளது. பனாமா அணி 55ஆம் இடத்தில் காணப்படுகிறது. இதன் காரணமாகவே பனாமா அணி உலக கிண்ணத்தை வெல்வதற்கான 31ஆம் இட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதாவது அவர்கள் குழு நிலையில் இறுதியிடத்தை பிடிப்பது மாத்திரமல்ல விளையாடும் 32 அணிகளில் 31வது இடத்தையே பெறுவார்கள் என பந்தயக்காரர்கள் தங்கள் தரப்படுத்தல்களை வெளியிட்டுள்ளார்கள்.

ஒரு புதிய அணி. உலக கிண்ணத்தில் இவர்களை நாம் பார்க்கும் போது இவர்கள் எவ்வாறு விளையாடுகிறார்கள் என்பதனை கணிக்க முடியும். ரசிகர்களை தங்கள் பக்கமாக இழுக்கப்போகிறார்களா அல்லது ஏன் இவர்களெல்லாம் உலகக் கிண்ண பக்கம் வருகிறர்கள் என சலிப்பை ஏற்படுத்தப்போகிறார்களா என்பது தெரிய வரும்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .