2021 ஒக்டோபர் 26, செவ்வாய்க்கிழமை

கால்பந்தாட்ட உலகக் கிண்ணம்: பெரு

Editorial   / 2018 பெப்ரவரி 25 , பி.ப. 04:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

- ச. விமல்

1927ஆம் ஆண்டு தென்னமெரிக்கா சம்பியன்ஷிப் தொடரில்  பெரு அணி அறிமுகத்தை மேற்கொண்ட போது.

உலக கிண்ண கால்பந்தாட்டத் தொடரில் பங்குபெறும் அணிகள் தொடர்பான விவரங்களில் நான்காவது அணியாக குழு சியில் இடம்பிடித்துள்ள பெரு அணி பற்றிய விவரங்களை இக்கட்டுரை நோக்குகிறது.

இவ்வாண்டு உலகக் கிண்ணத் தொடருக்கு 31ஆவது அணியாக தெரிவு செய்யப்பட்ட அணி பெரு அணி. பலமான தென்னமரிக்க கண்டத்தின் ஓர் அணி பெரு. தகுதிகாண் போட்டிகளில் ஐந்தாவது இடத்தைப் பெற்றமையால் நியூசிலாந்து அணியுடனான தகுதிப் போட்டியில் மோதி அதில் வெற்றிபெற்று உலக கிண்ண வாய்ப்பை பெற்றுக்கொண்டார்கள்.

தென்னமரிக்க கண்டத்தில் பிரேஸில் அணி இலகுவாக உலகக் கிண்ண வாய்ப்பைப் பெற்ற பின்னர் நேரடியான தகுதியைப் பெறும் அடுத்த மூன்று அணிகளுக்கான போட்டி மிகவும் கடுமையாக இருந்தது. தென்னமரிக்க வலயத்தில் விளையாடிய 10 அணிகளில் நான்கு அணிகள் நேரடியாக தகுதி பெற்றன. ஒரு புள்ளியால் நான்காமிடத்தைத் தவறவிட்ட பெரு அணி நியூசிலாந்து அணியுடனான தெரிவுகாண் போட்டியில் வெற்றிபெற்று ஐந்தாவது அணியாக தெரிவானது.

தென்னமரிக்கா வலய தெரிவுகாண் போட்டிகளின் புள்ளி விவரம்

பிரேஸில்                              18           12           5              1              41           11           30           41          

உருகுவே                              18           9              4              5              32           20           12           31          

ஆர்ஜென்டீனா                    18          7              7              4              19           16           3              28          

கொலம்பியா                     18           7              6              5              21           19           2              27          

பெரு                                    18           7              5              6              27           26           1              26          

சிலி                                      18          8              2              8              26           27           -1            26          

பராகுவே                             18           7              3              8              19           25           -6            24          

ஈக்குவடோர்                        18           6              2              10           26           29           -3            20          

பொலிவியா                          18          4              2              12           16           38           -22          14          

வெனிசுவேலா                      18           2              6              10           19           35           -16          12          

(அணி, போட்டிகள், வெற்றி, சமநிலை, தோல்வி, பெற்ற கோல்கள், எதிரணி பெற்ற கோல்கள், கோல் வித்தியாசம், புள்ளிகள்)

1930 ஆம் ஆண்டு உலக கிண்ண தொடரில் றொமேனியா அணிக்கெதிராக, பெரு அணி விளையாடுகிறது

1930ஆம் ஆண்டு அழைப்பிதழ் நாடாக முதலாவது உலகக் கிண்ணத் தொடரில் பெரு அணி விளையாடியது. விளையாடிய இரண்டு போட்டிகளிலும் தோல்வியைச் சந்தித்து அடுத்த சுற்று வாய்ப்பை இழந்தது. அதன்பின்னர் 1970ஆம் ஆண்டு வரை உலகக் கிண்ணத் தொடருக்கு பெரு அணியால் தெரிவாக முடியவில்லை.

1970ஆம் ஆண்டு சிறந்த ஒழுக்கமான அணிக்கான விருதை வெற்றி பெற்ற பெரு அணி

ஆனால், 70ஆம் ஆண்டு உலக கிண்ண தொடரில் இவர்கள் மிக சிறப்பான வருகையை கொடுத்தார்கள். காலிறுதி வரை முன்னேறினார்கள். விளையாடிய நான்கு போட்டிகளில் இரண்டு வெற்றிகளைப் பெற்றதுடன் இரண்டு தோல்விகளைச் சந்தித்தனர். ஒன்பது கோல்களைப் பெற்ற அதேவேளை ஒன்பது கோல்களை எதிரணிகள் பெற அனுமதித்திருந்தார். இவர்கள் காலிறுதி வரை தெரிவானது மட்டும் முக்கியமானதல்ல. ஒழுக்கமாக விளையாடிய அணிக்கான விருது 70ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட வேளையில் அதைப் பெற்றார்கள்.

ஒரு சிவப்பு அட்டையோ, மஞ்சள் அட்டையோ வாங்காமல் ஒழுக்க சீலர்களாக விளையாடினார்கள். இது இலகுவான விடயமல்ல. ஆனால் விளையாட்டில் சாதித்த அணி. ஒழுக்கமாகவும் விளையாடிய அணி அடுத்த உலக கிண்ணத்துகு தெரிவாகவில்லை. இது ஆச்சரியமான விடயமாக அமைந்தது.

1978ஆம் ஆண்டு உலக கிண்ணத்துக்கு மூன்றாவது தடவையாக தெரிவான இவர்கள் இரண்டாம் சுற்று வரை முன்னேறினார்கள். அதன்பின்னர் 1982ஆம் ஆண்டும் உலக கிண்ணத்துக்கு தெரிவானரகள். ஆனால் 24 அணிகள் பங்குபற்றிய தொடரில் 20ஆவது இடத்தைப் பெற்று முதல் சுற்றுடன் வெளியேறினார்கள். அதன்பின்னர் இவர்கள் உலக கிண்ணத் தொடருக்குத் தெரிவாகவில்லை.

35 ஆண்டுகளின் பின்னர் பெரு அணி உலகக் கிண்ணத் தொடருக்கு தெரிவாகியுள்ளது. இம்முறை இவர்கள் பலமான அணியாகவே காணப்படுகிறார்கள். தகுதிகாண் போட்டிகளில் மிகவும் கடுமையான போட்டிகளை பலமான பிரேஸில், ஆர்ஜென்டீனா அணிகளுக்கு இவர்கள் வழங்கியிருந்தார்கள். ஆர்ஜென்டீனா அணியுடன் விளையாடிய இரண்டு போட்டிகளையும் சமநிலையில் இவர்கள் நிறைவு செய்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

17 உலகக் கிண்ணத் தொடர்களில் நான்கு தொடர்களில் இவர்கள் விளையாடியுள்ளார்கள். 15 போட்டிகளில் விளையாடிய இவர்கள் நான்கு போட்டிகளில் வெற்றிபெற்றுள்ளார்கள். மூன்று சமநிலை முடிவுகளையும் எட்டுத் தோல்விகளையும் சந்தித்துள்ளார்கள். உலகக் கிண்ண கால்பந்தாட்டத் தொடரின் தரப்படுத்தல்களில் 37ஆவது இடத்தில் காணப்படுகின்றனர்.

பெரு அணி இம்முறை தரப்படுத்தல்களின்படி உலகக் கிண்ணத்தில் 11ஆவது இடத்தில் காணப்படுகிறது. இது அவர்களுக்கு மிகவும் பலமான நிலையை வழங்கியுள்ளது.

இவர்களுடைய குழு சியிலுள்ள பலமான அணியாக பிரான்ஸ் அணி காணப்படுகிறது. பிரான்ஸ் ஒன்பதாமிடத்தில் காணப்படுகிறது. டென்மார்க் அணி 12ஆவது இடத்தில இருக்கின்றது. அவுஸ்திரேலிய அணி 39ஆ வது இடத்தில் காணப்படுகிறது. எனேவ இக்குழுவில் யார், யார் எந்த இடங்களை பெறுவார்கள் என்பது மிகப் பெரிய சந்தேகமான நிலை. நான்கு அணிகளில் இரண்டு அணிகள் ஐரோப்பிய அணிகள் என்பது பெரு அணிக்கு கடினமான நிலையைத் தரலாம்.

அதனை அவர்கள் சமாளித்துக் கொண்டால் இரண்டாம் சுற்று அவர்களுக்கு நிச்சயம் உண்டு. ஆர்ஜென்டீனா அணி குழு டியில் பலமான அணி. இவர்கள் இரண்டாமிடத்தைப் பெற்றால் அவர்களைச் சந்திக்க நேரிடும். ஆனால் ஆர்ஜென்டீனா அணியுடன் சமநிலை முடிவுகளை பெற்றுள்ளார்கள். முதலிடத்தைப் பெற்றால் இவர்கள் இரண்டாம் சுற்றையும் தாண்டும் வாய்ப்புகளுள்ளன. ஆனால் பந்தயக்காரர்கள் இவர்களுக்கு 22வது இட வாய்ப்பை வழங்கியுள்ளார்கள். அதன்படி இவர்கள் முதல் சுற்றில் மூன்றாமிடத்தை பெற்று அடுத்த சுற்று வாய்ப்பின்றி வெளியேறுவார்கள் என்ற எதிர்வு கூறலே கூறப்பட்டுள்ளது. இவை மாற்றம் பெறும் வாய்ப்புகளும் அதிகமுள்ளன.

புதிய அணியாக களமிறங்குகிறார்கள். இம்முறை வாய்ப்புகள் குறைவு என கருதப்படும் அணிகள் பலமாகவே காணப்படுகிறனறன. பெரு அணியும் அவ்வாறான நிலையிலேயே காணப்படுகிறது. இவர்கள் உலகக் கிண்ணத்தை வெற்றி பெறுவார்கள் என கூறிவிட முடியாது. ஆனால் எதிராணிகளுக்கு இலகுவாக இருக்கப் போவதில்லை. இரண்டாம் சுற்று வரை முன்னேறுவார்கள் என உறுதியாக நம்பலாம். இவர்கள் விளையாடும் போட்டிகள் விறு விறுப்பாக அமையப் போகின்றன என்பதும் உறுதி.

 

 

 

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .