2021 ஒக்டோபர் 22, வெள்ளிக்கிழமை

நாளை ஆடி அமாவாசை

Princiya Dixci   / 2021 ஓகஸ்ட் 07 , பி.ப. 01:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்துக்களுக்கு மிக முக்கியமான நாளாக ஆடி அமாவாசை வருகின்றது. இந்த மாதத்தில் வருகிற ஞாயிறன்று (08) ஆடி அமாவாசை வருகின்றது.

அன்றைய தினம்தான்,  நம்முடைய முன்னோர் பித்ருலோகத்தில் இருந்து நம்மை காண்பதற்காக புறப்படுகின்றனர்.

நம்முடைய குடும்பம் மிகவும் மகிழ்ச்சியாக இருக்க, எதிர்காலம் சிறப்பாக இருக்க நம்முடைய சந்ததிகள் மகிழ்ச்சியாகவும் சிறப்பான வாழ்வு வாழ, நம்முடைய முன்னோர்களின் அருளும் ஆசியும் அவசியம். இன்று நாம் சந்திக்கும் கடன் பிரச்சினை தொடங்கி, மனதில் அமைதியின்மை வரை பல்வேறு பிரச்சினைகளுக்கு காரணம், நாம் நம்முடைய முன்னோரை வணங்க மறந்ததுதான் என்கிறது நம்முடைய சாஸ்திரங்கள்.

ஆடி அமாவாசை எப்போது?

2021 ஆம் ஆண்டு இவ்வருடம் ஆடி அமாவாசை 23 ஆம் திகதி (ஓகஸ்ட் 8) ஞாயிற்றுக் கிழமையில் வருகிறது.

இன்று ஓகஸ்ட் 7ஆம் திகதி சனிக்கிழமை, இரவு 7.38 மணிக்கு அமாவாசை தொடங்கி ஓகஸ்ட் 8 ஆம் திகதி இரவு 7.56 மணி வரை நீடிக்கிறது.

அதனால் ஓகஸ்ட் 8 அன்று சூரிய உதயத்துக்குப் பின்னர் எப்போது வேண்டுமென்றாலும் அமாவாசை தர்ப்பணம் கொடுக்கலாம்.

அமாவாசை அன்று முன்னோர்களுக்குத் தர்ப்பணம் கொடுத்து வழிபடுவது வழக்கம். அதிலும் தட்சிணாயன துவக்க காலத்தில் வரும் ஆடி அமாவாசை அன்று முன்னோர்கள் வழிபாடு மிகவும் சிறப்பானதாகும்.

ஆடி அமாவாசை அன்று முன்னோர் வழிபாடு காலையிலேயே ஆரம்பித்து விட வேண்டும். அன்றைய தினம் ஏதேனும் ஒரு தீர்த்தக்கரையில் முன்னோர்களுக்கான அமாவாசை தர்ப்பணம் செய்து வர வேண்டும்.

தர்ப்பணம் எதற்காகச் செய்யவேண்டும்?

அமாவாசை முதலான நாளில் முன்னோர்களுக்கு எள்ளும் தண்ணீரும் கொண்டு தர்ப்பணம் செய்யும் போது, அது நம் முன்னோர்களைப் போய்ச் சேரும். அதனால், அவர்கள் செய்த பாவங்களின் கெடுபலன்கள் குறையும். புண்ணியங்கள் பெருகும். நாமும் முன்னோரை வணங்கிய பலனைப் பெறலாம். முன்னோருக்குப் புண்ணியம் சேர்த்த, பாவங்களைக் குறைத்த புண்ணியத்தைப் பெறலாம் என்கிறார்கள் அறிஞர்கள்.

சரி... யாரெல்லாம் தர்ப்பணம் செய்யவேண்டும், செய்யக்கூடாது?

தாயும் தந்தையும் இல்லை என்றிருப்பவர்கள், அவசியம் தர்ப்பணம் செய்யவேண்டும். நம், தாய் தந்தையரைத் தவிர, முந்தைய முன்னோர்களை நமக்குத் தெரிந்திருக்கலாம்; தெரியாமல் இருக்கலாம். ஆனால், அவர்களை மனதால் நினைத்து அவர்களுக்கு நன்றி சொல்லும் நன்னாள்தான் அமாவாசைத் தினங்கள். முக்கியமாக... ஆடி அமாவாசையில் வணங்கவேண்டும்.

ஆடி அமாவாசை விரதம்:

அமாவாசை தினத்தில் ஆண்கள் விரதமிருந்து தர்ப்பணம் கொடுக்க வேண்டும். அதேசமயம், பெண்கள் கண்டிப்பாக அமாவாசை விரதம் இருக்கக்கூடாது. பெண்கள் அமாவாசை விரதம் இருப்பதில் சில விதி முறைகள் நிறைந்திருக்கிறது.

முன்னோர்களுக்கு பிடித்த உணவுகளை மதிய உணவுக்கு சமைத்து, அதை மறைந்த முன்னோர்களின் புகைப்படங்களுக்குப் பொட்டு வைத்து, பூ வைத்து சமைத்த உணவுகளை அவர்கள் முன் ஓர் இலையில் படைக்க வேண்டும்.

பின்னர் படங்களுக்கு தீபாராதனை செய்த பின்னர், அவசியம் காகத்துக்கு உணவு வைக்க வேண்டும்.

அதன் பின்னர் இலையில் முன்னோர்களுக்காகப் படைத்த உணவை வீட்டில் உள்ள மூத்தவர் சாப்பிட வேண்டும். அதன் பின்னர் மற்றவர்களும் சாப்பிடலாம். இதனால் நம் முன்னோர்கள் மகிழ்ந்து அவர்களின் ஆசி நமக்குப் பரிபூரணமாகக் கிடைக்கும் என்பது ஐதிகம்.

‘பித்ருக்களை நினைத்து நாம் வழங்கும் தர்ப்பண பூஜைகள் நமக்கு செல்வத்தையும் ஆரோக்கியத்தையும் ஆயுளையும் அனைத்துக்கும் மேலாக சொர்க்க பேறு என எல்லா விதமான பலன்களையும் அளிக்கும்’ என்று மகாபாரதம் சொல்கிறது.

மறைந்த நம் முன்னோர் பித்ருலோகத்தில் வாழ்கிறார்கள். அவர்கள் தங்கள் சந்ததியினரைக் காண ஒவ்வோர் ஆண்டும் ஆடி அமாவாசை அன்று பித்ருலோகத்தில் இருந்து புறப்படுகின்றனர். அவர்களுக்கு எள் தண்ணீர் வைத்து தர்ப்பணம் செய்து வழிபடுவது மகிழ்ச்சியாக அவர்கள் பயணம் தொடங்க துணையாக இருக்கும்.

ஆடி அமாவாசை அன்று புறப்பட்ட அவர்கள், புரட்டாசி மாதம் வரும் மஹாலய அமாவாசை நாளில் பூமிக்கு வந்து சேருவார்கள். அன்றைக்கு நாம் அளிக்கும் தர்ப்பணம் அவர்களுக்கு சென்று சேர்ந்து அவர்களுக்கு மகிழ்ச்சியைத் தரும்.

கடைசியாக தை மாதம் வரும் அமாவாசை அன்று அவர்கள் நம் வீட்டுக்கு வந்து ஆசி வழங்குவார்கள். அன்று நாம் அளிக்கும் தர்ப்பணத்தைப் பெற்றுக்கொண்டு அன்றைய தினம் அவர்கள் மீண்டும் பித்ருலோகத்துக்கு புறப்படுவார்கள். அவர்களை மகிழ்ச்சியாக வழியனுப்புவதன் மூலம் அவர்களின் ஆசியை பெறலாம் என்கின்றது நம்முடைய வேதம்.

நம் முன்னோர்களுக்கு ஒவ்வோர் ஆண்டும் வரும் சிராத்த திதி நாள் அன்று அவர்களுக்கு வழிபாடு செய்து எள்ளும் நீரும் விட்டுப் படைக்க வேண்டும். தொடர்ந்து மூன்று ஆண்டுகளுக்கு அவர்கள் திதி நாள் தெரிந்தும் அன்று எள்ளும் தண்ணீரும் வழங்காமல் தானம் கொடுக்காமல் காகத்துக்கு உணவிடாமல் அலட்சியமாக இருந்தால், பித்ரு தோஷம் பற்றிக்கொள்ளும் என்கின்றது வேதம். 

நமக்கு உடலையும் உயிரையும் கொடுத்தவர்கள் நம் முன்னோர்கள். அவர்கள் விஷயத்தில் அலட்சியமாக இருத்தல் கூடாது. அனைத்து வளங்களையும் பெற்றுச் சிறப்பான வாழ்வு வாழ பித்ருக்களுக்கு உரிய நாளில் அவர்களுக்கு உரியதை வழங்கி அவர்களைத் திருப்தியாக வைத்திருப்பது கட்டாயம்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X