2025 மே 22, வியாழக்கிழமை

அழிவிலிருந்து பாதுகாக்க தர்மம் செய்வோம்: அன்னை சித்தர் ராஜ்குமார் சுவாமிகள்

A.P.Mathan   / 2011 ஜனவரி 28 , பி.ப. 01:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

2010ஆம் ஆண்டுக்கு பின்னர் உலகத்தில் பல்வேறு மாற்றங்கள் ஏற்படவுள்ளன. மாபெரும் இயற்கை சீற்றங்கள், கடல் கொந்தளிப்பு, கடும் புயல், பூமிப் பிரளயம் போன்றன நடக்கக்கூடிய சாத்தியக்கூறுகள் உண்டு என்று தென்னிந்தியாவிலுள்ள பிரம்மரிஷி மலைவாழ் அன்னைச் சித்தர் இராஜகுமார் சுவாமிகள் தெரிவித்தார்.

இலங்கை மக்களை இயற்கை சீற்றத்திலிருந்து பாதுகாக்க 210 சித்தர்களை வேண்டி கொழும்பு, கொட்டாஞ்சேனை, ஸ்ரீ வரதராஜ விநாயகர் கோயில், ஐங்கரன் மண்டபத்தில் யாகமொன்று 29ஆம் திகதி நடத்தப்படவுள்ளது. இதில் கலந்துகொள்வதற்காக இலங்கை வந்துள்ள அன்னைச் சித்தர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், 'ஆதியில் மகான்களும் ரிஷிகளும் சித்தர்களும் தவம் செய்த இந்தியா, இலங்கை போன்ற நாடுகளில் உள்ள மலைகளில் அநேக சித்தர்களுடைய குகைகளும் ரிஷிகளுடைய குகைகளும் இன்றும் இருந்துகொண்டுதான் இருக்கின்றன.

கடந்த 40 வருட காலமாக மனிதர்கள் நீதி தவறி தர்மத்தை மறந்து பேராசையான வாழ்க்கையில் ஈடுப்பட்டுள்ளதனால் பழையன கழிந்து புதிய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. இதனால் ஆங்காங்கே நவ நாகரிக நகரங்களும் வெளிநாட்டு மோகங்களும் ஏற்பட்டு, மனிதர்கள் எதையெல்லாம் செய்ய வேண்டுமோ, எப்படியெல்லாம் வாழவேண்டுமோ, அவற்றை மறந்து வாழ்ந்து வருகின்றான்.

மனிதன் போகின்ற வழியானது சத்தியம் தவறி தர்மநெறி மாறி ஒருவருக்கொருவர் ஒற்றுமையின்றியும் சாது, ரிஷி போன்றவர்களை மதியாமலும், ஆடம்பர மோகங்களுடனும் மிகவேகமாக விஞ்ஞானம் என்ற போர்வையில் மனித எண்ணங்கள் போகின்றன.

இவ்வாறான மாற்றங்களுக்குள் குறிப்பாக உணவுப் பழக்க வழக்கங்களும் உள்ளடங்கியுள்ளன. இயற்கையான சத்துள்ள ஆகாரம் சாப்பிடும்போது நல்ல சிந்தனைகள், எண்ணங்கள் உருவாகின்றன. ஆனால், தற்போது எங்கு பார்த்தாலும் இரசாயன, பூச்சி மருந்துகள் அதிகமாக உபயோகப்படுத்தப்படுவதினால் அவற்றை உட்கொள்ளும் மனித எண்ணங்களும் முற்றிலும் மாறுப்படுகின்றன.

அந்த காலத்தில் யோகம், ஞானம், தியானம் செய்பவர்கள் இயற்கை உணவுகளை உட்கொண்டு சுகமாக சிந்தனையுடன் வாழ்ந்தார்கள். ஆனால் இன்று அந்தக் காலம் மாறி அவையனைத்தும் கணினி யுகமாக மாறிவிட்டது.  

அன்று கடவுள் அவதாரமாக இருந்தவர்கள் கூட குருகுலப் பயிற்சிபெற்றுதான் அரசாட்சி செய்தனர். நீதி, நேர்மை தவறாத ஆட்சியாக அவர்களுடைய ஆட்சி அமைந்திருந்தது. குறிப்பாக சித்தர்களில் போகர் மாமுனிவரின் மகன் பாண்டிய மன்னனாகவும், கைலாய சட்டமுனிநாதரின் மகன் சோழ மன்னனாகவும், பிரம்மரிஷியின் மகன் சேர மன்னனாகவும் அரசாட்சி செய்தார்கள். முடிசூடா மன்னர்களாகிய இவர்கள் பின்னர் பிடி சாம்பலாய் போய்விட்டனர். அந்த சித்தர்களின் பிள்ளைகளாய் வாழ்ந்த மன்னர் காலங்களில் நாடு பல நன்மைகளைப் பெற்றது. மனிதன் சத்தியம், நீதி, தர்மத்துடன் வாழ்ந்தான். இதற்கு மனுநீதி கண்ட சோழ மன்னனின் வாழ்க்கை ஓர் உதாரணமாகும்.

அப்படியான புண்ணிய பூமியாம் இலங்கை. இலங்கேஸ்வரன் வாழ்ந்த இந்த புண்ணிய பூமியில் தான் பதிபத்தினியாம் மண்டோதரியும் வாழ்ந்தாள். இவ்வாறான புண்ணிய பூமியில் யார்விட்ட சாபமோ? நாடே கண்கலங்கி நிற்கின்றது. இலங்கை பூமி மாதா கண்கலங்கி நிற்கின்றாள். எது எவ்வாறாயினும் போனது போகட்டும்.

மனிதர்களில் ஏழு வகையானவர்கள் உள்ளனர் என மகான்கன் சொல்கின்றனர். ஊர்வன, நீந்துவன, மரம், பறவை, மிருகம், மனிதர், தேவரும் மனிதராகப் பிறப்பதுண்டு.  இப்படியாக ஏழுவகையான மனிதர்கள் உலகில் உள்ளனர். அவரவர் குணம் அவரவரை விட்டுபோகாது. உலக மாற்றம் குறித்து என் குருபகவானாகிய பிரம்மரிஷிமலை காகபுசுண்டர்; மகரிஷியிடம் கேட்டேன்.

ஏன் மனிதர்கள் தவமின்றி திசைமாறி ஏனோ தானோ என்று நீதி நேர்மையற்றவர்களாக செயற்படுகின்றார்கள்? என என் குருநாதரிடம் கேட்டேன். இந்தக் கேள்வி கேட்கப்பட்ட காலம் 1981ஆம் ஆண்டாகும். அப்போது உலக மாற்றம் குறித்து கூறிய சித்தர் பெருமானைக் கண்டு அதிசயித்து போனேன். அப்போது அவர் 'காலஞானம்' என்ற நூலினை மக்களுக்கு வெளிப்படுத்த வேண்டும் என்றார். குறிப்பாக ஆன்மீகவாதிகளுக்கு புத்துணர்ச்சி ஊட்ட வேண்டுமென்றும் கூறினார்.

சரி, இயற்கை சீற்றம் ஏன் ஏற்படுகின்றது? என்று பார்ப்போம். பூமியின் மீது எங்கெல்லாம் தொடர்மாடிகள் கட்டக்கூடாதோ அங்கெல்லாம் மாடிக்கட்டிங்களை உருவாக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இரசாயன அணுகுண்டுகளும் வானத்தில் ஆயிரக்கணக்கான ரொக்கெட்டுகளையும் பறக்கவிடும் அளவுக்கு மனித எண்ணங்கள் முன்னேறியுள்ளன. அவற்றோடு இணைந்து மனிதப் பாவங்கள், ஈகையில்லாத கருணையில்லாத சிந்தனை, அளவுக்கதிகமான ஆசை போன்றனவும் அதிகரித்தன. இதனால் அடுக்கடுக்காய் துன்பம் ஏற்படத் தொடங்கியது.

இந்தத் துன்பங்கள் காரணமாக வாழும் உயிர்களுக்கும் மனிதனுக்கும் உணவில்லாத நிலைமை தோற்றம் பெற்றது. காடுகளில் வாழ்வதற்கு மிருகங்கள் இல்லை. வானத்தில் பறப்பதற்கு பறவைகள் இல்லை. அப்படியாயின் அவை எங்கு சென்றன? அவை அனைத்தும் இந்த 7 வகை மனிதக் கூட்டத்தில் மாட்டிக்கொண்டு திண்டாடுகின்றன. இதுதான் உண்மை.

உலகம் முழுவதும் மனிதரில் மனிதர் ஒரு கோடியென சித்தர் கூறியுள்ளார். அந்த ஒரு கோடி பேரையும் பாதுகாப்பது காகபுசுண்டரின் வேலை. இந்த கலியுகத்தை முடிக்கக் கூடிய வல்லமை பகவான் காகபுசுண்டரின் கையில் உள்ளது.

உலகம் முழுவதிலும் 2010ஆம் ஆண்டுக்குப் பின்னர் எந்த நேரத்திலும் எதுவும் நடக்கலாம். அதிலே உண்மையுள்ளவர்கள், தர்ம சிந்தனையுள்ளவர்கள், சத்தியவான்கள், கருணையுள்ளவர்களும் காக்கப்படுவர். வரப்போகும் இயற்கை சீற்றத்தில் அனைவரும் சென்றுவிடுவர். கடல்வாழ் உயிரினங்கள் அனைத்தும் கடலுக்குள்ளும், காடு வாழ் உயிரினங்கள் காட்டுக்குள்ளும் என போகவேண்டியவை போகவேண்டிய இடத்துக்கு போகவேண்டிய நேரத்தில் போய்விடும். இதுதான் உலக மாற்றம்.

இதற்கு வருத்தப்பட்டோ பிரார்த்தனை செய்தோ வரப்போகும் மாற்றத்தை தடுத்து நிறுத்த முடியாது. ஆகையால் இனியாவது மனிதகுணம் படைத்தவர்கள் அளவுக்கு அதிகமாக சொத்து சேர்ப்பதை மறக்கவேண்டும். ஆடம்பர வாழ்க்கையை முடிவுக்குக் கொண்டுவரவேண்டும்.

பிறர் துன்பப்படுவதை பார்த்து அவர்களுக்கு வேண்டிய உதவிகளை பரோபகார சிந்தனையுடன் முடிந்தளவு செய்யுங்கள். ஆடம்பர வாகனங்களை வாங்குவது, வீடுகள் வாங்குவதை குறைக்க வேண்டும். வீட்டில் விடியற்காலை சூரியன் உதிக்கும் முன் எழுந்து விளக்கேற்ற வேண்டும். ஆலயங்களில் கூட்டு பிரார்த்தனைகளில் ஈடுபடவேண்டும். ஒருவருக்கொருவர் சம்'மத'மாய் (சம மதமாய்) வாழுங்கள்.

இதை நான் ஏன் சொல்கின்றேன்? 30 வருடங்களாக 210 சித்தர்கள் வாழும் மேற்கு தொடர்ச்சி மலை குகைகளுக்கெல்லாம் சென்று அங்குள்ள சித்து புருஷர்களை வணங்கி, வேண்டுதல் செய்து இப்பொழுது மக்களுக்கென்ன தேவையோ அவர்களுக்காக முனிவர்களை வேண்டி தவம் செய்கின்றோம். பதினெண் சித்தர் பாடல் என்ற நூலில் காகபுசுண்டர் காவியம் 33இல் இந்த உலக மாற்றம் பற்றி கூறப்பட்டுள்ளது.

இப்பொழுது அடியேன் இங்குவர காரணமாயிருந்தவர் இலங்கையில் தாயுள்ளம் கொண்ட பிரம்மரிஷி மலையில் கடும் தவமும், ஜீவ காருண்யமும் செய்வித்து 210 சித்தர்களின் குழந்தையாகவும் அருள் கடாட்சம் பெற்ற ராதா மாதாஜி அவருடைய வேண்டுதல் படியும், இந்த இலங்கை வாழ் ஆன்மீக சிந்தனையுடைய மக்களை பாதுகாக்கவும் விழிப்புணர்;;ச்சி ஊட்டவும் 210 மகாசித்தர்களை கூவி அழைத்து உள்ளம் உருகி வேண்டுதல் செய்யும்போது, இந்த நாடு மாபெரும் செல்வம், சீர், சிறப்புப்பெற்று மக்கள் வேறுபாடின்றி ஒற்றுமையுடன் உணர்ந்து வாழ்வாங்கு வாழக்கூடிய தருணம் இதுவே.

ஆகையால் ஒவ்வொரு அமாவாசை, பௌர்ணமி தினங்களில் அவரவர் மதங்களின் விசுவாசத்துடன், அவரவர் வசதிக்கேற்ப தான தருமங்களையும் பிரார்த்தனைகளையும் செய்ய வேண்டும். இந்த உலக மாற்றத்துக்கு கூட்டுப்பிரார்த்தனை செய்வது சிறந்தது என வள்ளல் ராமலிங்கம் சுவாமி கூறியுள்ளார்.

இயற்கைச் சீற்றங்களின் ஒன்றாக கடலில் கொந்தளிப்பு ஏற்படும். மூன்றரை கிலோமீற்றர் வரை அலை எழும்பும். அப்படி எழும்;பும்போது 25 கிலோமீற்றர் வரை கடல் நீர் நகருக்குள் உட்புகும். அதுமட்டுமன்றி கடலில் ஏற்படும் பூகம்பத்தால் பெற்றோல் இலக்குகள் உடைந்து எண்ணெய் கடலில் கலந்துவிடும். இதனால் கடல்வாழ் உயிர்கள் பாதிக்கப்படும். உப்புப்போட்டு உணவு உண்ட மனிதன் உப்பின்றி தவிப்பான். ஒருகிலோ கிராம் உப்பு ஒருகிலோ கிராம் தங்கத்துக்கு இணையாக விற்கப்படும் காலம் ஏற்படும். இதேவேளை யானை தும்பிக்கைபோல் மழை பெய்யும். இதனால் 16 வருடங்களுக்கு மின்சார விளக்குகள் எரிவது கடினம்.

நான் விமானத்தில் வரும்போது தியானம் செய்துக்கொண்டிருந்தேன். அப்போது இந்த இலங்கை மண்ணிலிருந்து ஆதியில் மறைந்த ஜடா முடியுடன் கூடிய ரிஷிகள் எழுந்து வருவதை கண்டு மெய்சிலிர்;த்து போனேன்.

இலங்கையின் முன்னேற்றத்துக்காக யாகம் செய்யும் நோக்கம் காரைதீவு சித்தானைக்குட்டி சித்தர் பீடத்தில் இருந்து அனுப்பப்பட்ட இரு தூதுவர்கள் நாட்டின் நலனுக்காக பிரம்மரிஷியிடம் வந்து சித்தரை வேண்டி யாகம் செய்தார்கள். ஆகையால் இலங்கை மண்ணில் அனைத்து மக்களும் ஒற்றுமையுடன் ஒன்றுப்பட்டு வாழ்ந்தேயாக வேண்டும்.

மனிதா போதும் போதும். செய்த பாவங்களுக்கு உடனடியாக மூட்டைகட்டு. அவரவர் குருமார்களை வேண்டுங்கள். உங்களுக்கு சேவை செய்ய அடியேன் துணையாக இருப்பேன். இன்னும் பல அனேக இரகசியங்களை சொல்ல தவியாய் தவிக்கிறேன். நான் பயமுறுத்தவில்லை. சித்தரோடு இருந்து என்ன சொல்வது என்ன செய்வது என தெரியாமல் தவிக்கின்றேன். ஆன்மீக மக்களாகிய உங்கள் மீது எனக்கு கருணையுள்ளதால் உலகம் வாழ சித்தர்களை கூவி கூட்டுப்பிரார்த்தனை செய்கின்றேன். வரும் காலம் 120 வருட சித்தர்காலமாகும்.

அப்போது மும்மாரி மழைபொழிந்து தர்ம சத்தியத்தோடு நீதியுடன் ஆட்சி நடக்கும். அனைவருக்கான உதவிகளையும் சித்தர்கள் செய்விப்பர். நல்ல மனம், குணம் படைத்தவர்கள் இனிமேல்தான் வாழ்வார்கள்.

மக்கள் நலனுக்காக கூவியழைத்து வேண்டுதல் செய்தால் நாடு நலம்பெறும். அரசனும் நலம் பெறுவான். இது அன்று முதல் இன்றுவரையான உலக நடப்பாகும். அனேக ஆத்மாக்களும் இதன்போது சாந்தியடையும். இனிமேல் குடும்பம் சந்தோஷத்துடன் மக்கள் வாழ்வர். வாருங்கள் கூடி பிரார்த்தனை செய்வோம். வாழ்க இலங்கேஸ்வரர். வளர்க தர்மத்தொண்டு. 'ஓம் ஜெய்குருவே துணை' எனக் கூறினால் உங்களுக்கு வேண்டியது இருக்கும் இடம்தேடி வரும். Pix: Nisal Baduge

உங்கள் ஆன்மீக சந்தேகங்களை கேட்டறியவும் தான தர்மம் செய்ய விரும்புபவர்களும் இந்த ஈ-மெயில் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.  divine.charity@yahoo.co.in


You May Also Like

  Comments - 0

  • smartty Wednesday, 20 April 2011 07:59 PM

    நான் மலேஷியாவை சேர்ந்தவள். . நான் சித்தர் ராஜ் குமார் அவர்களை சந்திக்க மிக ஆவலாக இருக்கிறேன் அவர் இங்கு மலேசியா வருவர்களா?

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X