2025 மே 21, புதன்கிழமை

நுவரெலியா காயத்ரி பீட குரு பூர்ணிமா யாகம்

A.P.Mathan   / 2011 மே 17 , மு.ப. 07:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆனந்தமானந்தகரம் ப்ரசன்னம்
ஞான ஸ்வரூபம் நிஜ போதரூபம்
யோகீந்த்ரமீட்யம்பவரோகவைத்யம்
ஸ்ரீ ஸத்குரும் நித்யமஹம் பஜாமி

குரோர் பிரம்மாகுரோர் விஷ்ணு
குருர் தேவோமகேஷ்வரஹ
குருசாட்ஷாத் பரப்பிரம்மம்
தஸ்மை ஸ்ரீ குரவேநமஹ


மாதம் தோறும் வரும் பௌர்ணமி தினத்திலும் பார்க்க மகத்துவம் வாய்ந்த பௌர்ணமியாக வைகாசி மாதத்தில் வரும் பௌர்ணமி போற்றப்படுகின்றது. இந்த பௌர்ணமியை குரு பூர்ணிமா என்றழைப்பர். உலகில் எதுவுமில்லை எல்லாம் உன்னுள்ளே இருக்கின்றது, என முழுமையான நிலையில் இருக்கும் குரு தன்மையை உணர ஒவ்வொரு உயிருக்கும் பாக்கியமாக அமைந்தநாள் தான் குரு பூர்ணிமா ஆகும். குருவின் ஆற்றல் எல்லா நாட்களில் இருந்தாலும் குரு பூர்ணிமா தனிமனிதன் குருவின் வழிகாட்டுதலை ஆரம்பிக்கும் நாளாக அனுஷ்டிக்கப்படுகின்றது.

அன்று குரு தீட்சைபெறும் உயிர்கள் ஆன்ம ஏற்றம் பெறுகிறது. குரு பூர்ணிமா தினத்தில் சீடர்கள் தமது குருமார்களுக்கு பாத பூஜைகள் போன்றவற்றை செய்து ஆசிபெறுவதும், குருமார்கள் தமது சீடர்களுக்கு தீட்சை மற்றும் உபதேசங்கள் செய்தும் ஆசிர்வதிப்பதும் இத்தினத்திலேயே ஆகும்.

குரு பூர்ணிமாவை ரிஷி பூர்ணிமா என்றும் அழைப்பர். இத்தினத்தில் பெறும் தீட்சை, உபதேசங்கள், பயிற்சி போன்றவை இப்பிறவியில் மட்டுமல்ல பல பிறவிகளுக்கும் பலன் தொடந்துவரும். குருவும் தெய்வநிலையும் வேறுவேறு அன்று, இறைதன்மையே குரு வடிவில் நமக்கு அக ஒளியை வழங்குகிறது என்கிறது வேதம்.

தியான மூலம் குரு மூர்த்தி
பூஜா மூலம் குரு பாதம்
மந்திர மூலம் குரு வாக்கியம்
மோக்ஷ மூலம் குரு கிருபை


மண்ணுலகை மறைமுகமாக ஆண்டுவரும் மாமஹரிஷிகள் இந்த வைகாசி பௌர்ணமி தினத்திலேயே ஒன்று கூடி உலக நடப்புக்களை ஆராய்வதாகவும் அப்போது ஏற்படுகின்ற கூட்டு காந்தசக்தி ஆகாய மண்டலம் மூலமாக எம்மை வந்தடைவதாகவும் அன்றைய தினத்தில் சாதனைகளில் ஈடுபடுவோரும் ஏனையோரும் அதீத நன்மைகள் பெறுவர் என்றும் சற்குரு முருகேசு மஹரிஷி அவர்கள் அடிக்கடி தமது உபதேசங்களில் உணர்த்துவார்கள்.

வைகாசி பௌர்ணமி அன்றே கௌதம புத்தர், வியாசர், திருவள்ளுவர் போன்ற மகானுபாவர்கள் அவதரித்தார்கள். கௌதம புத்தர் ஞானம் பெற்றதுவும் பரிநிர்வாணம் அடைந்ததுவும் இப்புண்ணிய தினத்திலேயே ஆகும். வைகாசி பௌர்ணமி தினத்திலேயே எமது பரமகுருவான ஸ்ரீ கண்ணையா யோகீஸ்வரரும் அவதரித்தார்கள்.

குரு பக்தியின் சிறப்புபற்றி பரமகுரு கண்ணையா யோகீஸ்வரர் கூறுகையில்...

பிறவிப் பெருங்கடலை நீந்தி பேரின்ப கரைசேர வேண்டுமானால் புத்தக படிப்பும் கேள்வி ஞானமும் பயன்படாது. பேரின்பானுபவத்தை பெற்ற ஒரு சற்குருவின் அருள் தேவை. சற்குரு எங்கே என்று தேடி அழைந்தால் கிடைக்கமாட்டார். 'குரு வேண்டும், அவர் வழி நிற்பேன்' என்ற உண்மையான உளத்துடிப்பு இருந்தால் எந்த தெய்வத்தையும் கடவுளையும் வழிபட தேவையில்லை. பரம் பொருளின் அருள் எல்லாம் குருவின் அருளாலே கிடைக்கும். கடவுளுக்கு கோபம் வரும்படி ஏதாவது தவறு செய்திருந்தால் அதற்கு கடவுளிடம் மன்னிப்பு கேட்டு பயனில்லை. குரு மன்னித்துவிட்டால் கடவுள் மன்னித்துவிடுவார். குருவுக்கு துரோகம் செய்துவிட்டு கடவுளிடம் மன்னிப்புகேட்டால் கிடைக்காது. 'உன் குருவிடமே மன்னிப்புகேள்' என்றுதான் சொல்வார்கள். அதற்கும் குரு தான் மன்னித்தாக வேண்டும். குருவை கிடைக்கப் பெறாதவன் கிடைக்கபெறும் வரை செய்யும் கடவுள் பக்தி எல்லாம் பயனற்றுதான் போகும். குருவையே தன் இஷ்ட தெய்வமாக கருதி வழிபட்டால் இஷ்ட தெய்வம் குரு மூலமாய் அவனுக்கு அருள் செய்வார். எவ்வளவு பாவம் செய்திருந்தாலும் கடவுளை மன்னிக்கும்படி வேண்டினால் கடவுள் சற்றும் தயங்காமல் மன்னித்துவிடுவார்.

ஸ்ரீ கண்ணையா யோகீஸ்வரரை ஞானகுருவாக ஏற்ற சற்குரு முருகேசு மஹரிஷிகள் தமது அருளுபதேசத்தில் மாமஹரிஷிகளின் நேரடி கண்காணிப்பில் இயங்கிவரும் ஒரே ஆன்மீக ஸ்தாபனம் எமது காயத்ரிபீடமே என்பதனை உணர்த்துவதில் தவறுவதில்லை. மஹரிஷிகளின் நேரடி கண்காணிப்போடு சற்குரு தேவரினால் மானசீகமாக நடாத்தப்படும் நுவரெலியா காயத்ரி பீடத்தில் இன்று செவ்வாய்க்கிழமை குரு பூர்ணிமா தினத்தன்று விஷேட அபிஷேகங்கள், பூஜை, யாகம், தியானம், பஜனை மற்றும் மகேஸ்வரபூஜை என்பன நடைபெற்றன.

ஸ்ரீ காயத்ரி பீடத்தின் ஏனைய கிளைகளான மட்டக்களப்பு, நாவலடி சப்தரிஷி வளாகத்திலும், தம்பிலுவில் காயத்ரி தபோவனத்திலும், திருக்கோணமலை ஆத்மயோக ஞானசபாவிலும் விஷேட பூஜைகள், பிரார்த்தனைகள் மற்றும் அன்னதானம் என்பன நடைபெற்றன.

காயத்ரி பீடத்தின் அறங்காவலர் ஆர்.ஆக.எஸ்.சந்திரமோகன் குரு பூர்ணிமா யாகத்தினை நடத்துவதையும் காயத்ரி பக்தர்கள் பக்தி வழிபாட்டில் ஈடுபட்டிருப்பதையும் படங்களில் காணலாம். (படங்கள்: எஸ்.தியாகு)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .