2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

அசுவமேத யாகத்துக்கு சமமானது தானம்

Editorial   / 2022 ஜனவரி 07 , பி.ப. 02:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

 ஆர். ராஜலிங்கம்

“விருந்து புறத்ததாத் தானுண்டல் சாவா
மருந்தெனினும் வேண்டற்பாற் றன்று”

என்கிறது திருக்குறள். அதாவது, விருந்தினராக வந்தவரை கவனியாமல் தாம் மட்டும் உண்பது சாவா மருந்தாகிய அமிழ்தமே ஆனாலும் விரும்பத்தக்கதல்ல. விருந்தினரை உபசரித்து திருப்திப்படுத்துவது நம் பாரம்பரிய பண்புகளில் ஒன்று.

விருந்தினராக வந்தவர் திருப்தி அடையும் வகையில் விருந்து படைக்க வேண்டும். விருந்தினராக வந்தவரும் திருப்தி அடையும் வகையில் உண்ணவேண்டும். விருந்து அளிப்பவர்கள் ஏதும் நினைப்பார்களோ என்று நினைத்து அரைகுறையாக சாப்பிடக் கூடாது. அப்படி நினைப்பது விருந்து உண்பவருக்கு மட்டுமன்றி விருந்து அளிப்பவருக்கும் பெரும் பாவமாகும்.

விருந்தோம்பும் பண்பு பற்றி ராமாயணத்தில் வரும் ஒரு சம்பவத்தை பார்ப்போம்.

ஒருமுறை அன்னை சீதா பிராட்டியார் அனுமனை விருந்துக்கு வருமாறு அழைத்தார். அனுமனும் அன்னை அளிக்கும் விருந்தை உண்பதற்கு மிகுந்த ஆவலுடன் வந்து அமர்ந்து விட்டார். அன்னை சீதாபிராட்டி அனுமனுக்காக தயார் செய்த உணவுப் பண்டங்களை எல்லாம் எடுத்து பரிமாறினார். அனுமனும் அந்த உணவுகளை எல்லாம் உடனுக்குடன் சாப்பிட்டுவிட்டு இலையை காலி செய்து விட்டு மறுபடி மறுபடி உணவை எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்.

சமைத்த உணவுகள் எல்லாம் பரிமாறப்பட்டுவிட்டன.  அனுமனோ திருப்தியடைந்ததாகவே தெரியவில்லை. சீதாபிராட்டியாருக்கு கையும் ஓடவில்லை காலும் ஓடவில்லை. ஒருவரை விருந்துக்கு அழைத்து விட்டால் அவர் திருப்தி அடையும்வரை உணவளிக்க வேண்டும். இல்லையெனில் அது பெரும் பாவம். என்ன செய்வது என்று சிந்தித்தார் சீதா பிராட்டியார். சமைப்பதற்காக வைக்கப்பட்டிருந்த அரிசி, பருப்பு காய்கறிவகைகள் எல்லாவற்றையும் எடுத்து ஒவ்வொன்றாக வைத்தார்.

அனுமனும் கண்ணை மூடியபடி இலையில் எது வைக்கப்பட்டாலும் எடுத்து சாப்பிட்டுக் கொண்டே இருந்தார். வீட்டிலிருந்த பச்சை காய்கறிகள் அரிசி பருப்பு எல்லாம் தீர்ந்துவிட்டன. பின்னர் தோட்டத்துக்குப் போய் அங்கிருந்த காய்கறிகள் பழங்கள் எல்லாவற்றையும் பிடுங்கிக்கொண்டு வந்து இலையில் வைத்தார். அனுமன் எல்லாவற்றையும் தின்று தீர்த்தார்.

இனி இலையில்  வைப்பதற்கு எதுவும் இல்லை. என்ன செய்வது என்று மிகுந்த கவலையில் இருந்தார் சீதாபிராட்டியார்.  அச்சமயத்தில் நல்லவேளையாக இலட்சுமணன் அங்கு வந்து சேர்ந்தார்.

சீதா பிராட்டியார் இலட்சுமணனிடம் விடயத்தைக் கூறினார். இந்த இக்கட்டான நிலையிலிருந்து விடுபட நீதான் வழி சொல்ல வேண்டும். அனுமன் திருப்தி அடையாவிட்டால் பெரும் பாவத்திற்கு ஆளாகி விடுவேன் என்று கூறினார்.

இலட்சுமணனும் கவலைப்படாதீர்கள் அம்மா. தோட்டத்திலிருந்து துளசி இலைகள் கொஞ்சம் பறித்துக் கொண்டு வாருங்கள் என்றார். சீதாபிராட்டியார் துளசி இலைகள் சிலவற்றை பிடுங்கிக்கொண்டு வந்து இலட்சுமணனிடம் கொடுத்தார்.  இலட்சுமணன் அதில் ஒன்றில் ராமா என்று எழுதி அதனையும் சேர்த்து இலையில் வைக்குமாறு சீதாபிராட்டியாரிடம் கூறினார்.;

சீதாபிராட்டியாரும் ராமா என்று எழுதப்பட்ட அந்த துளசி இலையையும் சேர்த்து அனுமனின் இலையில் வைத்தார். இலையில் எதைப் போட்டாலும் கண்ணை மூடியபடி சாப்பிட்டுக் கொண்டிருந்த அனுமன் அந்த இலையை சாப்பிட்டதும் உணவில் திருப்தி அடைந்தவராய் போதும் அம்மா இனி என்னால் சாப்பிட முடியாது என்று கூறினார். அதோடு சீதாபிராட்டியாரும் திருப்தி அடைந்தார.;

இனி மகாபாரதத்தில் வரும் ஒரு நிகழ்வைப் பார்ப்போம். மகாபாரத யுத்தம் முடிந்த பின்னர் முடிசூட்டப்பட்ட தருமர் அசுவமேத யாகம் செய்தார். பாரத நாட்டு மன்னர்கள் எல்லாம் அங்கு வந்து கூடி இருந்தார்கள். யாகம் வெகு சிறப்பாக நடந்தது. எட்டுத்திசையிலும் பறையறை செய்வித்து பிராமணர்களும் ஏழைகளும் அழைக்கப்பட்டு வந்திருந்தனர். சாஸ்திரத்தில் சொல்லியபடி சிறப்பாக யாகம் நடத்தப்பட்டது. அந்த சமயத்தில் எங்கிருந்தோ கீரிப்பிள்ளை ஒன்று திடீரென்று யாகசாலைக்குள்  பிரவேசித்து சபையின் நடுவில் எல்லோரையும் பார்த்து பெரிய சிரிப்பு சிரித்தது. மனிதனைப் போல் ஒரு பிராணி சிரிப்பதைப் பார்த்து இது என்ன நம்முடைய யாகத்தைக் கெடுக்க வந்த பேயோ, பிசாசோ என்று எல்லோரும் அச்சமுற்றனர்.

அந்தக் கீரிப்பிள்ளையின் உடலில் ஒரு பக்கம் முழுவதும் பொன் மயமாக பிரகாசித்தது. நாலா திசைகளிலும் இருந்து வந்து சபையில் கூடியிருந்த அரசர்களையும் பிராமணர்களையும் நோக்கி அந்த அற்புதக் கீரிப்பிள்ளை பேச ஆரம்பித்தது.

மன்னர்களே! உங்களுடைய யாகம் மிகச்சிறப்பாக நடைபெற்றதாக நீங்கள் நினைக்கிறீர்கள். ஒரு காலத்தில் குருக்ஷேத்திரத்தில் வசித்து வந்த ஒரு ஏழைப் பிராமணர் உணவு தானம் செய்தார். அவர் செய்த அந்த யாகத்திற்கு உங்கள் அஸ்வமேத யாகமும் அதில் செய்யப்பட்ட  தான தர்மங்களும் சேர்ந்து சமமாகாது. உங்கள் யாகத்தைப் பற்றி ஏன் வீண் பெருமை கொள்கிறீர்கள்? என்று அந்த கீரிப்பிள்ளை கூறியது.

கீரிப்பிள்ளை இவ்வாறு கூறியதைக் கேட்டு வியப்படைந்த பிராமணர்கள் அந்த கீரிப்பிள்ளையை பார்த்து சாதுக்கள் கூடியிருக்கும் யாகத்தில் நீ எங்கிருந்து வந்தாய்? நீ யார் ஏன் எங்கள் யாகத்தை இவ்வாறு கூறுகிறாய்? சாஸ்திரம் தவறாமல் சகல சமய கிரியைகளும் கிரமமாக நடத்தப்பட்ட இந்தப் பெரிய அசுவமேத யாகத்தைக் குறை கூறுவது சரியல்ல. யாகத்துக்கு வந்த எல்லோரும் தக்க முறையில் பூஜிக்கப்பட்டார்கள். எல்லோரும் திருப்தி அடையும் அளவு தானதர்மங்கள் செய்யப்பட்டன. மந்திரங்கள் ஓதப்பட்டு அவிகளும் அக்கினியில் விடப்பட்டன. நான்கு வர்ணங்களையும் சேர்ந்த வருணத்தாரும் சந்தோசமடைந்தார்கள். இவ்வேளையில் நீ ஏன் இப்படி சொல்கிறாய்? எங்களுக்கு விளக்கம் அளிக்க வேண்டும் என்று கூறினார்கள்.

இதைக்கேட்டு அந்தக் கீரி மறுபடியும் சிரித்தது. பின்னர் அது கூறியது.

பிராமணர்களே! நான் சொன்ன வார்த்தை பொய்யல்ல. உங்கள் பெயரிலாவது அல்லது மற்றவர்களிடமாவது  எனக்கு எவ்விதத் தீமையும் கிடையாது. ஆனால் அந்த ஏழை பிராமணர் செய்த யாகத்தைப்போல் நான் வேறு எங்கும் ஒரு யாகத்தைப் பார்த்ததில்லை. அந்த பிராமணரின் யாகத்திற்கு உங்கள் யாகம் சமமாகாது. குருக்ஷேத்திரத்தில்; வசித்து வந்த அந்த பிராமணர்தான் சிறந்த கொடையாளி. அவர் மனைவி, மகன், மருமகள் எல்லோரும் புண்ணியவான்கள். நான் பார்த்த அந்த யாகமே சிறந்தது என்று கூறியது.

அதுகேட்டு அங்கிருந்தவர்கள் அனைவரும் மிகுந்த வியப்படைந்தார்கள். பின்னர் அந்தக் கீரி கூறியது பிராமணர்களே! யுத்தம் நடப்பதற்கு முன் குருக்ஷேத்திரத்தில்; ஒரு பிராமணர் உஞ்சவிருத்தி ஜீவனம் நடத்தி வந்தார்.

அதாவது வயலில் உதிர்ந்து கிடக்கும் தானியங்களை பொறுக்கி அவரும் அவர் மனைவி மகன் மருமகள் ஆகிய நால்வரும் தினமும் உட்கொண்டு வந்தார்கள். அதனால்தான் அவருக்கு உஞ்சவிருத்தி பிராமணர் என்று பெயர் வந்தது. ஒவ்வொரு நாளும் ஆறாவது காலத்தில் அதாவது பிற்பகல் ஒரு மணிக்கு மேல் ஒரு வேளை உணவு எல்லோருமாக கூடி உட்கார்ந்து உண்பார்கள். சில நாட்களில் எதுவும்  கிடைக்காது. அப்படி நடக்கும் நேரத்தில் உபவாசம் இருந்து அடுத்த நாள் ஆறாவது காலத்தில் தான் சாப்பிடுவார்கள். கிடைத்ததை வைத்துக் கொள்ள மாட்டார்கள். இது அவர்களுடைய விரதமாக இருந்து வந்தது.

இவ்வாறு வாழ்க்கையை நடத்தி வந்த போது ஒரு காலத்தில் மழை இல்லாமல் நாட்டில் கடும் பஞ்சம் ஏற்பட்டது. எங்கும் மக்கள் உணவின்றி கஷ்டப்பட்டார்கள். மழை இல்லாததால் விவசாயம் இல்லாமல் சாப்பாட்டிற்கு வேண்டிய தானியம் வயல்களில் சிந்திக்கிடக்கவில்லை. பல நாட்கள் அவர் குடும்பம் பட்டினி கிடக்க நேரிட்டது.

 ஒரு நாள் வெயிலில் அவர்கள் பசியுடன் அலைந்து திரிந்து கஷ்டப்பட்டு ஒரு பிடி சோளம் சம்பாதித்து வீடு வந்து சேர்ந்தார்கள். அந்த ஒரு பிடி சோளத்தை மாவாக அரைத்து பிரார்த்தனை செய்து மாவை நான்கு சம பங்குகளாகப் பிரித்து பகவானை நினைத்து மகிழ்ச்சியுடன் சாப்பிடுவதற்கு ஆயத்தமானார்கள்.

அந்த சமயத்தில் ஒரு பிராமணர் பசியோடு அங்கு வந்து சேர்ந்தார். விருந்தினர் ஒருவர் வந்துவிட்டதால் எழுந்து அவரை அழைத்து உபசரித்து உட்கார சொன்னார்கள். பிராமணரும் அவருடைய மனைவி மகனும் மருமகளும் விருந்தினரை உபசரிக்க பாக்கியம் கிடைத்ததே என்று மகிழ்ச்சி பொங்க வந்தவரை வரவேற்றனர்.

பின்னர் பிராமணர் தனது பங்கு உணவை விருந்தினரிடம் கொடுத்து சுவாமி தாங்கள் இதனைப் பெற்றுக்கொள்ள வேண்டும். தங்களுக்கு மங்களம் உண்டாகவேண்டும் என்று கூறி தன்னுடைய பங்கு உணவை அவருக்குக் கொடுக்க விருந்தாளி அந்த மாவை உட்கொண்டார்.

ஆனாலும் அவருக்கு பசி தீரவில்லை. குறைந்த உணவை சாப்பிட்டுவிட்டு திருப்தியடையாத அவர் பசியுடன் பிராமணர் முகத்தை நோக்கினார். என்ன செய்வதென்று பிராமணர் சிந்தித்துக் கொண்டிருப்பதைப் பார்த்த அவர் மனைவி என்னுடைய பாகத்தையும் இவருக்கு கொடுங்கள். இவர் திருப்தி அடைந்தால் எனக்குப் போதும் என்று கூறி தன் பங்கு மாவையும் அவரிடம் கொடுத்து அவருக்கு கொடுக்க சொன்னாள்.

அதற்கு பிராமணர் விலங்குகள் கூட தன் இனத்தில் பெண் இனத்தை கவனத்துடன் போசிக்கின்றன. நீ சொல்வது சரியல்ல. உன்னால் பணிவிடை செய்யப் பட்டு இல்லறம் நடத்தும் நான் உன்னை பசியாற வைக்காவிட்டால் எனக்கு என்ன நலன் உண்டாகும்? அன்புக்குரியவளே! எலும்பும் தோலுமாக பசியால் வாடிக்கொண்டிருக்கும் உன்னை பட்டினி போட்டுவிட்டு நான் விருந்தினர் பூஜைசெய்வதில் என்ன பயன் உண்டாகும்? என்று பிராமணர் மனைவியிடம் கூறி அதை வாங்க மறுத்தார். 

அதற்கு  அவர் மனைவி தர்மமும் பொருளும் எல்லாம் நம் இருவருக்கும் பொதுவானவை அல்லவா?  என்னைப் போலவே தாங்களும் பசியால் வருந்திக் கொண்டிருக்க நான் மட்டும் எப்படி உண்டு பசியாறமுடியும்? நான் சொல்வதை மறுக்க வேண்டாம் என்று மனைவி அவரை வற்புறுத்தினார்.

பிறகு அவரும் அதற்கு ஒப்புக் கொண்டு அந்த மாவையும் வாங்கி விருந்தினருக்கு கொடுத்தார். விருந்தினர் அதை பெற்றுக்கொண்டு உட்கொண்டார். ஆனால் இன்னும் பசி தீராமல் இருந்த அவரைப் பார்த்து மிகுந்த கவலை பட்டார் பிராமணர். இதைப் பார்த்துக் கொண்டிருந்த அவருடைய மகன் தந்தையாரிடம் என் பங்கையும் விருந்தினருக்கு கொடுத்து திருப்தி அடையச் செய்யுங்கள் என்று கூறினார். அவர் இதைக் கேட்டு மிகுந்த வருத்தமுற்றார்.

 மகனே! வயது முதிர்ந்தவர்கள் பசியைப் பொறுத்துக்கொள்ள முடியும். உன்னுடைய பங்கை வாங்கிக் கொள்ள எனக்கு மனம் வரவில்லை என்றார். ஆனால் மகன் அதைக் கேட்கவில்லை. வயது முதிர்ந்த தாய் தந்தையரை காப்பாற்ற வேண்டிய கடமை புத்திரனுடையது அல்லவா? என் பங்கும் தங்களுடையதுதான். நான் கொடுப்பதைப் பெற்றுக் கொண்டு இந்த விரதத்தை பூர்த்தி செய்யுங்கள் என்று வேண்டிக்கொண்டார்.

பிராமணர் அதற்கு குழந்தாய் அடக்கத்தில் எல்லா விதத்திலும் நான் உன்னைக் கண்டு பெருமை படைத்தவனாக இருக்கிறேன். உனக்கு எல்லா நலன்களும் உண்டாகட்டும். உன்னுடைய பங்கைப் பெற்றுக் கொள்கிறேன் என்று மகிழ்ச்சியுடன் கூறி அதையும் வாங்கி விருந்தினருக்குக் கொடுத்தார்.

விருந்தினர் மூன்றாவது பாகத்தையும் பெற்றுக் கொண்டு அதையும் சாப்பிட்டார். ஆனால் இன்னமும் திருப்தியடையாமலே இருந்தார்.

உஞ்சவிருத்தி பிராமணர் மிகுந்த வெட்கமடைந்து என்ன செய்வது என்று சிந்தித்துக்கொண்டிருந்தார். ஒன்றும் தெரியாமல் கலங்கி நிற்கும் மாமனாரை பார்த்த மருமகள் சுவாமி! என் பங்கையும் சந்தோசமாகவே கொடுக்கிறேன். அதை ஏற்றுக்கொண்டு விருந்தினருக்குக் கொடுத்து அவரை திருப்தி அடையச் செய்யுங்கள். தங்கள் ஆசீர்வாதத்தால் எனக்கு எல்லா நலன்களும் கிட்டும் என்று கூறினார். உஞ்சவிருத்தி பிராமணர் அதுகேட்டு ஒழுக்கம் தவறாதவளே. இளைத்துப் போய் இருக்கும் உன்னை பசியால் துடிக்க விட்டு விட்டு உன்னுடைய பங்கு உணவையும் வாங்கி விருந்தினருக்கு கொடுத்தால் நான் தர்மத்தை அழித்தவனாவேன்.

சிறு பெண்ணாகிய நீ பசியால் தவிப்பதை நான் எவ்வாறு பொறுக்க முடியும் என்று அதை வாங்குவதற்கு மறுத்துவிட்டார். ஆனால் அவளோ விடவில்லை சுவாமி! தாங்கள் எனக்கு தெய்வத்தின் தெய்வம். தயவுசெய்து என் பங்கையும் பெற்றுக்கொள்ளவேண்டும். இந்த சரீரம் குருநாதரின் பணிக்காகத் தான் இருக்கிறது. தாங்கள்  என்னை நற்கதி அடையச் செய்யவேண்டும். என்னுடைய பங்கைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்று பலவாறாக வற்புறுத்தினாள். பிராமணர் பெண்ணே! நீ எல்லா பாக்கியமும் அடைவாயாக என்று ஆசிர்வதித்து அவளுடைய பங்கு உணவையும் பெற்றுக்கொண்டு விருந்தினருக்கு கொடுத்தார்.

அதை வாங்கிச் சாப்பிட்டவுடன் விருந்தினராக வந்த பிராமணர் திருப்தியும் சந்தோசமும் அடைந்தார். பரிசுத்தமான தமது சக்திக்கு தக்கவாறு கொடுக்கப்பட்ட அந்த தானமே சிறந்த யாகம்.

 தேவர்கள் பூமாரி பொழிந்தார்கள். மகரிஷிகளும் தேவர்களும் உன்னை தரிசிக்க பரிமாணங்களுடன் விமானங்களில் வந்திருக்கிறார்கள். நீரும் உம்முடைய மனைவியும் மகனும் மருமகளும் சொர்க்கலோகம் செல்வீர்கள். நீ செய்த இந்த தானத்தால் உம்முடைய முன்னோர்களும் நற்கதியை அடைவாhகள்.

 சாதாரணமாக பசியானது தர்ம சிந்தனையை கெடுக்கும். ஞானவான்கள் கூட பசியினால் தானம் செய்யமுடியாத நிலைக்காளாவார்கள்.  ஒரு சிறப்பான மனைவி மகன் மருமகளுடன் தர்மத்தை பெரிதாக எண்ணி செய்த தானம் அசுவமேத யாகத்துக்கு சமமாகும் என்று கூறிவிட்டு விருந்தினராக வந்த அந்த பிராமணர்  மறைந்தார்.

 இவ்வாறு அவருடைய கதையை சொல்லி அந்தக்கீரி மீண்டும் கூறியதாவது

அந்த மா சிந்திக்கிடந்த  இடத்தில் நான் புரண்டதால்  என்னுடைய உடலின் ஒரு பகுதி தங்க மயமாகிவிட்டது. பாதி உடல் பொன்மயமானதால் மற்ற பகுதியும் அவ்வாறே ஆக வேண்டும் என்று ஆசைப்பட்டு பல தளங்களுக்கும்,  யாகம் செய்யும் இடங்களுக்கும் போய் பார்த்து வருகிறேன். புகழ்பெற்ற தர்மபுத்திரர் யாகம் செய்கிறார் என்று கேள்விப்பட்டு இங்கு வந்தேன். நான் பொன்மயமாக ஆக்கப்படவில்லை. அதனால்தான் இந்த யாகம் அந்த தானத்துக்கு  சமமானது இல்லை என்று கூறினேன். இவ்வாறு கூறிவிட்டு கீரி மறைந்தது.

உஞ்சவிருத்தி பிராமணரின் விருந்து எத்தகைய சிறப்புப் பெற்றது என்று இதிலிருந்து அறியலாம்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .